ROCKY HANDSOME (2016)
8:34:00 AM
2010 ஆம் வெளியாகி சக்கை போடு போட்ட கொரியத் திரைப்படமான The Man from Nowhere படத்தின் தழுவல் Rocky Handsome.
கோவா வில் தொடங்குகிறது படம். தனிமையில் வசிக்கும் Handsome என்றழைக்கப்படும் ஜான் ஆப்ரஹாமிற்கும் போதைப்பொருளுக்கு அடிமையான தாயை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கும் சிறுமி Naomi க்குமிடையே நல்லதொரு நட்பு மலர்கிறது. திடீரென்று ஒரு நாள் போதைப்பொருள் கும்பல் தாயையும் குழந்தையையும் கடத்துக்கொண்டு செல்ல, களத்தில் இறங்குகிறார் ஹாண்ட்சம். நடக்கும் களேபரத்தில் போலீஸும் கலந்துகொள்ள இந்த 'ஹாண்ட்சம்' யார் என்ன என்ற தகவல்களும் நமக்குச் சொல்லப்படுகிறது.
ஆக்ஷன் படங்கள் எனது பேவரிட். அதிலும் The Man From Nowhere எனது ஆல் டைம் பேவரிட் படங்களில் ஒன்று. அதன் இந்திய வெர்ஷனைக் காண ஆவலாக இருந்தேன். டிரைலர் வேறு பட்டையைக் கிளப்பியது. ஆனால் படம்?
'Loosely Based on...' என்று சொன்னாலும் காஸ்டியூம், செட், ஷாட் முதற்கொண்டு அப்படியே கொரியப் படத்தைத்தான் எடுத்திருக்கிறார்கள். காதல் போர்ஷனும், பாடல்களும் எக்ஸ்ட்ரா. படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டும் அதுதான். ஒன்று அப்படியே எடுத்திருக்க வேண்டும் அல்லது கருவை மட்டும் வைத்துக்கொண்டு இண்டியனைஸ் செய்து கொடுத்திருக்க வேண்டும். கொரிய படத்தைப் போல ஆக்ஷன் தெறிக்க வேண்டும் அதே சமயம் இந்தியப் படத்திற்கே உரிய ஹீரோவிற்கான 'அவர் யார் தெரியுமாடாவ்...!' பின்புலம், ஹீரோயின் பிளாஷ்பேக், காதல், இழப்பு, வலி, பாரத் மாத்தாகீ ஜெய் ஆகிய செண்டிமெண்ட்களும் இருக்க வேண்டும் என்று கூழோடு சேர்த்து மீசைக்கும் ஆசைப்பட்டு மொத்தமாகச் சொத்தப்பி இருக்கிறார்கள். ஹீரோயினை நினைத்து ஹீரோ ஃபீல் பண்ணிக்கொண்டிருக்கும் காட்சிகளுக்குப் பதில் ஹீரோவிற்கும் சிறுமிக்குமிடையே இன்னும் கொஞ்சம் காட்சிகளை வைத்திருந்தால் கதையாவது வலுவடைந்திருக்கும். வில்லன்கள் ஒவ்வொருவரும் ஏதோ 80களில் வரும் நம்பியார் குரூப்ஸ் போல விகாரமாக இருப்பதும் எரிச்சல். ஹீரோவோடு சண்டைபோடுவதற்கென்றே தாய்லாந்து நாட்டு ஸ்டண்ட்காரர் ஒரு வில்லன் குரூப்பில் இருக்கிறார். ஒரே ஒரு பாடல்காட்சியில் வந்தாலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் கொள்ளைகொள்கிறார் ஷ்ரூதிஹாசன். மற்றபடி மெயின் வில்லானாக நடித்திருக்கும் இயக்குனர் உட்பட அனைவருமே க்ளிஷேவான நடிப்பையே வழங்கியிருக்கிறார்கள்.
ஜான் ஆப்ரஹாமைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். தனது பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் இவர் காட்டும் வேகம் உண்மையிலேயே மலைக்கவைக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், ஜான் ஆப்ரஹாமிற்காக! அந்தக் குழந்தை பாவம். அதன் முகம் கூட சரியாக நியாபகத்தில் இல்லை. வில்லன்களுக்கு, போலீஸ்காரர்களுக்கு இருந்ததை விட மிக முக்கியமான கதாப்பாத்திரமான இந்தக் குழந்தைக்கு மிக குறைவான ஸ்கிரீன் ஸ்பேஸே கொடுக்கப்படிருந்தது.
ஹீரோவிற்கடுத்து படத்தில் அருமையாக இருந்த இரண்டே விஷயங்கள் ஒளிப்பதிவும் மற்றும் சண்டைக்காட்சிகள். இரண்டு சண்டைக்காட்சிகள். கொரிய படத்திலும் இதே சண்டைக்காட்சிகள் டிட்டோவாக உண்டு என்றாலும், மிகச்சிறப்பாக நகல்படுத்தியிருக்கிறார்கள்.
The Man From Nowhere (2010) Korean |
ரீமேக் தவறல்ல. ஆனால் எந்தப் படத்தை, யாருக்காக, எப்படி ரீமேக் செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் The Man From Nowhere ஒரு மிகத் தவறான செலக்ஷன். Dombivali Fast, Mumbai Meri Jaan போன்ற செம்ம ஒரிஜினல் கதைகளை எடுத்துக்கொண்டிருந்த 'எவனோ ஒருவன்' Nishikant Kamat வரிசையாக Force, Drishyam, Rocky Handsome என்று பறந்து பறந்து ரீமேக் படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார். போஸ்டரில் கூட From the Director of Force and Drishyam என்று ரீமேக்கை பெருமையாகப் போட்டிருக்கிறார்கள். இடையில் இவர் எடுத்த மராத்தி திரைப்படமான Lai Bhaari விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பற்ற படம். அது போன்ற படங்களைத் தான் Nishikant Kamat போன்ற ஒரு நல்ல இயக்குனரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம் என்பதை அவரிடம் யாராவது சொன்னால் தேவலாம்.
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...