பிச்சைக்காரன் (2015)

9:05:00 AM



பணக்கார ஹீரோ தன் அம்மாவிற்காக ஒரு மண்டலம் பிச்சைக்காரனாக வாழ்கிறான். அவனது அனுபவங்கள் தான் கதை. 
ஹீரோவாக விஜய் ஆண்டனியிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் அது கிளைமாக்ஸ் நெருங்கும் காட்சிகளில் மட்டுமே வெளிப்படுகிறது. ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ஒரே டெசிபலில் கோடு போட்டுக்கொண்டே போவது போல் வசனம் பேசுவதை அவர் அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும். பட், ஒரு தயாரிப்பாளராக, ஒரு ஹீரோவாக பிச்சைக்காரன் என்று தலைப்பு வைத்து பிச்சைக்காரனாக நடித்ததற்கு அவசியம் விஜய் ஆண்டனியைப் பாராட்ட வேண்டும். ஆரம்பக்காட்சியில் ஏர்போர்ட் விட்டு வெளியே வருவது, ரயில்நிலைய சண்டைக்காட்சியில் முறைத்துக்கொண்டு நிற்பது, கிளைமாக்ஸில் கேரவன் விட்டு இறங்கி நடந்து வருவது - சூப்பர்! 
இசையமைப்பாளராகவும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். 'நெஞ்சோரத்தில்...' பாடலைக்கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பின்னணிக்கு இரண்டே இசைக்கோர்புகள் தான் என்றாலும் ஒன்று மாஸ் (மெயின் பிச்சைக்காரன் தீம்), மற்றொன்று கிளாஸ் (அம்மா சென்டிமென்ட் தீம்) 
ஹீரோயின் Satna Titus. தமிழுக்கு மீண்டும் ஒரு அழகிய கேரளத்து வரவு. நன்றாக நடிக்கவும் வருகிறது. அடுத்தடுத்து தமிழில் இவரைப் பார்க்கலாம், பார்க்கவேண்டும். அந்த கண்கள்...உவாவ்வ் ! 
சசி - நோ-நான்சென்ஸ் இயக்குனர். 'பூ', 'டிஷ்யூம்' இரண்டும் எனது பேவரிட் படங்கள். இவரது படங்களில் சுமாரான படமே குறைந்தபட்சம் பார்க்கும்படியாகவாவது இருக்கும். 'பிச்சைக்காரன்' அப்படி ஒரு படம் தான். 
படத்தில் பல விஷயங்கள் நன்றாக இருக்கிறது, டைட்டிலில் இருந்தே. ஆனால் புதுமையான விஷயம் என்று எதுவுமே இல்லாதது மிகப்பெரிய குறை. 'முப்பது நாட்களில் முப்பது கோடியை செல்வுசெய்தால் மூவாயிரம் கோடிக்கு அதிபராகலாம்' என்ற அருணாச்சலம் டைப் கதை தான் என்றாலும், அந்தப் படத்தில் இருந்த குறைந்தபட்ச சுவாரஸ்யமான ஐடியாக்கள் கூட இந்தப் படத்தில் இல்லை. 
பிச்சைக்காரனாக இருந்தாலும், முதலில் அடிவாங்கும் ஹீரோ பின் எத்தனை பேர் வந்தாலும் பறந்து பறந்து அடிக்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும் முதலில் ஒதுங்கும் ஹீரோயின் பின்னர் வந்து ஒட்டிக்கொள்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும் ஹீரோ யாருக்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்கிறார், நியாயம் பேசுகிறார். ஒரு மாஸ் ஹீரோவிற்கு உண்டான அனைத்துத் தகுதிகளுடனேயே வலம் வருகிறார். 
சொந்தத்தில் ஒரு வில்லன், வந்த இடத்தில் ஒரு வில்லன், அடுத்தவனுக்கு உதவப் போய் ஒரு வில்லன் என்று மூன்று வில்லன்கள் இருந்தும் 10 பைஸ்க்கு பிரயோஜனம் இல்லை. '48 நாட்கள் விரதம்' என்பதால் ஹீரோ எப்படியும் மீண்டும் பணக்காரனாகிவிடுவான் என்பது தெரிந்துவிடுவதால் ஒரு ஒட்டுதல் இல்லாமலேயே நகர்கிறது கதை. சீரயஸாகத் தொடங்கும் பிச்சைக்கார வாழ்க்கை போகப் போக ஜாலியாகப் பிச்சை எடுப்பது, காமெடி செய்வது, காதலியுடன் ஊர் சுற்றுவது, அவ்வபோது புரட்டி எடுக்க வில்லன்கள் என்று நகர்வதால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. 
ஒன்று முழுக்க சென்டிமென்டாகப் போட்டுத்தாக்கியிருக்க வேண்டும் ('நான் கடவுள்' போல). அல்லது கிளைமாக்ஸில் தன் சுயரூபம் காட்டி ஒரு பெரிய நெட்வொர்க்கையே தூள்தூளாக்கும் ஆக்ஷன் சப்ஜெக்ட்டாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் பிச்சைக்காரன் ரெண்டுங்கெட்டானாக ஒரு சராசரி அனைத்தும் கலந்த மசாலாவாக கமர்ஷியல் பட வரிசையிலேயே தன்னை நிறுத்திக்கொள்கிறது. அதனாலேயே இந்தப் படம் சீக்கிரம் மறந்துவிடும். 
பிச்சைக்காரன் - இவனும் ஒரு மாஸ் ஹீரோ தான்!

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...