காதலும் கடந்து போகும் (2015)

1:39:00 AM

என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு அருமையான படத்தைப் பார்த்துவிட்டு வந்த திருப்தியை மட்டும் உணரமுடிகிறது. ஆனால் - கண்டவனெல்லாம் நம் வாழ்க்கையில் கபடி ஆடும் இந்தப் பரபரப்பான சூழலில், கொழுத்தித் தள்ளும் வெயிலையும் ஹெவி டிராபிக்கையும் அறக்கபறக்கக் கடந்து, பார்கிங்கிற்குத் தண்டம் அழுது, அளவிற்கதிகமான டிக்கெட் கட்டணத்தை வேறு வழியில்லாமல் கொடுத்து, பாப்கார்ன், சமோசா விலையைக் கண்டு மிரண்டு, வியர்த்து விறுவிறுத்து இருட்டில் இருவர் காலை மிதித்து சீட்டில் வந்து அமரும் ஒரு சராசரி ரசிகனால் இந்தப் படத்தை ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை.

ஹீரோயின் யாழினி ஆசையாசைக்காச் சேர்ந்த வேலையை இழக்க, சுமார் ஏரியாவில் இருக்கும் சுமாரான வீடு ஒன்றிற்கு குடிவருகிறாள். அவளது எதிர்வீட்டில் இருப்பவன் நம் ஹீரோ கதிர். தன்னை, இன்றைய ரவுடி நாளைய பார் ஓனர் என்று நம்பிக்கொண்டிருப்பவன். இவர்களது கதை தான் 'காதலும் கடந்து போகும்'. அருமையான டைட்டில். வேலையில்லாத ஒரு ஐ.டி பெண், வேலையில்லாத ஒரு ரவுடி. இவர்களது போரிங்கான ரெகுலர் வாழ்க்கை தான் படம்.

முதல் பாதி நத்தை வேகத்தில் - நகர்கிறது, தவழ்கிறது, ஊர்ந்து செல்கிறது. தேவையே இல்லாத காட்சிகளும் நிறைய வருகிறது. முதல் பாதிக்கு இரண்டாம் பாதி தேவலாம். 'தத்தி' அடியாள் கதிராக விஜய் சேதுபதி. வெட்டியாக இருப்பவனாகக் கூட தன்னால் 'நடிக்க' முடியும் என்று காட்டியிருக்கிறார். எது செய்தாலும் as simple as ஒரு குடை வாங்கச் சென்றால் கூட மொக்கை வாங்கும் அவரைப் பார்த்தாலே அந்தக் கதாப்பாத்திரம் எப்படிப்பட்டது என்பது புரிந்துவிடும். அப்பர் மிடில் கிளாஸ் ஐ.டி பெண் யாழினியாக மடோனா. படம் முழுக்க இவரைச் சுற்றியே நடப்பதால் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. அதை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இவரது ஓவர் மேக்கப்பும் மார்டன் லுக்கும் அந்த ஏரியாவிற்கும் கதாப்பாத்திறத்திற்கும் கொஞ்சம் அந்நியமாக இருக்கிறது. சில இடங்களில் டப்பிங் பொருந்தவில்லை. விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து, மொக்கைக் காலேஜ் ஒன்றில் படித்த நடுத்தரக்குடும்பத்துப் பெண் தான் கதாப்பாத்திரம். ஆனால் மடோனாவோ பெங்களூர் Christ University இல் படித்த மார்டன் யுவதியாகவே தெரிகிறார். ஆனாலும் - செலெக்ட்டாக படங்கள் நடித்தால் தமிழ் ரசிகர்களின் டார்லிங்காக இன்னும் கொஞ்ச காலம் நிலைத்து நிற்கலாம். பார் ஓனராக வரும் சத்யா, அவரது தம்பியாக வருபவர், எண்ணி மூன்றே காட்சிகளில் வரும் இயக்குனர் சமுத்திரகனி, விஜய் சேதுபதி எடுபிடி; அவருக்கு எடுபிடியாக வரும் மணிகண்டன், ஹௌஸ் ஓனர் கணக்கா சவுண்டு கொடுக்கும் பெருசு என்று கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கிறது.

சந்தோஷ் நாரயணனின் பாடல்களில் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால் பின்னணி இசை - சூப்பர். பிளாங்காக நகரும் இடங்களில் எதிர்பார்க்காத நேரத்தில் தொடங்கும் இசை அந்தக் காட்சியின் தன்மையையே மாற்றிவிடுகிறது.

படம் பார்த்தவர்கள் மட்டும் மேலும் தொடர்ந்து படிக்கவும்.

"நமக்கு தெரிஞ்ச பொண்ணு, அழகான பொண்ணு, மரியாதை தெரிஞ்ச பொண்ணு. எதிர்வீடு வேற - அவளுக்கு ஒரு கஷ்டம். அந்த கஷ்டம் நம்மால தீரும்னா அவளுக்கு நாம ஹெல்ப் பண்ணுவமா, மாட்டோமா?" இந்தக் கேள்வியை எந்த சராசரி தமிழ் இளைஞனைப் பார்த்துக்கேட்டாலும் அவனது பதில் - "கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவேன் பாஸ்" என்பதாகத் தான் இருக்கும். நம்ம மைண்ட் செட் அப்படி. அதைத் தான் இந்தப் படத்தில் ஹீரோ கதிர் செய்கிறார், எந்த இடத்திலும் மிகைப்படுத்தாமல்.

பிடிச்சு சேர்ந்த வேலை போச்சு. ரசிச்சு வாழ்ந்த வாழ்க்கையை விட்டுட்டு, 100 ரூபாய் சேமிக்கிறதுக்காக ரெண்டு மாடி ஜாமான் தூக்க வேண்டிய நிலை. வேலை தேடிப்போற இடத்திலெல்லாம் கண்டவனும் கண்டமேனிக்கு டீஸ் பண்றான். என்ன பண்றதுன்னே தெர்ல. ஆனா, எதிர்வீட்ல இருப்பவன் மட்டும் ஏதோ அவனால முடிஞ்ச ஹெல்ப் பண்றான். இல்ல அட்லீஸ்ட் 'என்ன ஆச்சு'ன்னு ஆறுதலாவாது கேக்குறான். அவன் மேல ஒரு சாப்ட் கார்னர் வருமா வராதா? - வரும். அப்படித் தான் வருகிறது ஹீரோயினுக்கும்.

இவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் உறவிற்குப் பெயர் நிச்சயம் காதலோ, நட்போ, கரிசனமோ, பாசமோ அல்ல. அனைத்தும் கலந்த ஒரு உணர்வு. இதை மிக அழகாக, மிகையில்லாமல் யதார்த்தமாக காட்சியப்படுத்தியிருக்கிறார்கள். கககபோ பாடலுக்கு முன் இருக்கும் கதிரின் மனநிலைக்கும், கோவில் தெப்பக்குளக் காட்சிக்குப் பிறகான மனநிலைக்கும், தன்னைப் பார்க்க வேண்டும் யாழினி காத்திருப்பதைப் பார்த்து ஒதுங்கிப் போகும் போதிருக்கும் மனநிலைக்கும், கிளைமாக்ஸில் யாழினியைப் பார்ப்பதற்கும் - எத்தனை வித்தியாசங்கள். நான்கு காட்சிகளிலும் நான்கு விதமான உணர்வுகள். அவை நிச்சயம் காதல் அல்ல. எத்தனையோ அருமையான, சொல்லியடிக்கும் கில்லி கதைகள் கொரிய சினிமாவில் கொட்டிக்கிடக்கும் போது, இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குனர் நலன் குமாரசாமியைப் பாராட்ட வேண்டும். ரீமேக் என்று வரும்பொழுது நன்றாக ஓடிய படம், பிடித்த படம் – இரண்டில் எதை ஒரு இயக்குனர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு நலனது பதில் இந்தப் படம். இது போன்ற ஸ்லோ ரூம்-காம் படங்கள் நம் ரசனையை நிச்சயம் மேம்படுத்தும் என்பது எனது எண்ணம்.

படத்தில் என்னை அதிகம் கவர்ந்தது, படம் நெடுக நுட்பமாகப் பரவிக்கிடக்கும் சில பின்புலக்கதைகள் (Backstories). சமுத்திரகனிக்கும் இவர்களுக்கும் இருக்கும் பிரச்சனை, பார் ஓனருக்கும் கதிருக்கும் இருக்கும் செஞ்சோற்றுக்கடன் உறவு, பாடலில் மான்டேஜ் ஆக வரும் யாழினியின் பாய்பிரண்ட் கதை, கேங்ஸ்டர் வாழ்க்கை அதிலிலிருக்கும் தகிடுதத்தங்கள் - எதையுமே முழுதாகச் சொல்லாமல் பட்டும்படாமல் கதைக்கு எது தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். கூடவே ஐ.டி வாழ்க்கை என்பது வச்சா குடுமி செரச்சா மொட்ட என்று எப்படி ஒருவரது வாழ்க்கையை அப்படியே புரட்டக்கூடிய தன்மையுடையது என்பதையும் சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள்.

கொண்டாடப்படவேண்டிய படம் இல்லை என்றாலும், இந்தப் படம் சிலரது மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி. A Cult Classic. நன்றி நலன் சார், for choosing ‘My Dear Desparado’.

பி.கு: My Dear Desaparado படத்தின் ரீமேக் உரிமையை 40 லட்சம் கொடுத்து வாங்கி இந்தப் படத்தை எடுத்திருப்பதைப் பற்றி நண்பர் ஒருவர் சொல்லியிருக்கும் கருத்து மிக முக்கியமான ஒன்று. அதை அப்படியே இங்கு கொடுக்கிறேன்.

// நல்ல நல்ல ஸ்க்ரிப்ட வெச்சிக்கிட்டு நிறைய பேரு வாய்ப்பு கெடைக்காம வெளிய சுத்திக்கிட்டு இருக்காங்க, இங்க இருக்கற டைரக்டர்ஸ் கொஞ்சம் ஈகோ பாக்காம, அவங்க ஸ்க்ரிப்ட முறையா வாங்கி பட்டி பாத்தாலே, அட்டகாசமான பல படங்கள் வரும். அத வுட்டுட்டு ஏன் ஜப்பான் கொரியான்னு போகணும்...! காஸ்டிங் கால் மாதிரி, ஸ்க்ரிப்டுக்கு ட்ரை பண்ணுனா, நல்ல பல படங்கள் வெளிவர வாய்ப்பிருக்கு //


40 லட்சமெல்லாம் வேணாம், உழைப்ப மதிச்சு ஒரு லட்சம் + முறையான கிரெடிட்ஸ் கொடுக்குறேன்னு மட்டும் சொல்லிப்பாருங்க, தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப்பார்க்கும். நம்மகிட்ட இல்லாத கதைகளா? 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...