வங்கிக்கொள்ளை சினிமா

10:06:00 AM


ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வங்கிக்கொள்ளை சம்பந்தமான பல படங்கள் வந்திருந்தாலும், தமிழில் இன்னும் இந்த ஜானரை (genre) யாரும் முழுதாக முயற்சித்துப் பார்க்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளைப் போலவே நம் ஊரிலும் வங்கிக்கொள்ளைகள் அவ்வபோது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் நம் சினிமாக்காரர்கள் அற்புதமான (எனக்குப் பிடித்தமான) இந்த ஏரியாவை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். 

தமிழில் "வங்கிக்கொள்ளை" என்றாலே நினைவிற்கு வருவது 'ருத்ரா' (https://www.youtube.com/watch?v=4pC7VYIcIA4) திரைப்படம் தான். சர்க்கஸ் கோமாளியாக வேடமிட்டு போலீஸை முட்டாளாக்கி வங்கியைக் கொள்ளையடிப்பார் திரு.கே.பாக்கியராஜ். ஆங்கிலப் படமொன்றின் அப்பட்டத் தழுவல் என்றாலும் (Quick Change 1990 - https://www.youtube.com/watch?v=OB_5q0QN57w), இன்றும் மறக்கமுடியாத காட்சி அது. 'சிந்தனை செய்' (https://www.youtube.com/watch?v=4CoQUPlPmFI) என்றொரு படம் வந்தது. கிளைமாக்ஸை தீர்மானம் செய்யும் முக்கிய காட்சியாக இடைவேளைக்குப் பிறகு ஒரு வங்கிக்கொள்ளைக் காட்சி அந்தப் படத்தில் வரும். அட்டகாசமான ஐடியா என்றாலும், எடுக்கப்பட்ட விதம் மிகவும் சப்பையாக இருக்கும். பிரச்சானா அப்பாஸ் நடிப்பில் 'சாது மிரண்டா' (https://www.youtube.com/watch?v=_etP1snSJts) என்றொரு படம் வந்தது. அந்தப் படத்தின் ஆரம்பக்காட்சி வங்கிக்கொள்ளை தான். சமீபத்தில் வெளியான படங்களில் கே.வி.ஆனந்தின் 'கோ' (https://www.youtube.com/watch?v=QHrntHsg5bY) திரைப்படமும் வங்கிக்கொள்ளையில் தான் தொடங்கும். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது வங்கிக்கொள்ளை சம்பந்தமான காட்சிகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது.

முழு நீள வங்கிக்கொள்ளை திரைப்படம் என்றால், அது 2010 ஆம் ஆண்டு சக்தி S. ராஜன் இயக்கத்தில் பிரச்சன்னா, சிபிராஜ் நடித்து எஸ்.பி.பியின் Capital Film Works தயாரிப்பில் வெளியான 'நாணயம்' (https://www.youtube.com/watch?v=j5TU0T0oF3c) மட்டும் தான். அதையும் 'The Bank Job (2008)' (https://www.youtube.com/watch?v=l3qBnpDPtdA) படம் போல இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். 

"வங்கிக்கொள்ளை" இல் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் காட்ட முடியாது என்பது கூட இந்த வகையை நம்மவர்கள் ஒதுக்கி வைத்திருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு நிகழ்வை மைய்யப்படுத்தி எழுதப்படும் எந்த ஒரு கதைக்கும் இந்தப் பிரச்சனை உண்டு. முன்பு நான் எழுதிய Firefighter Series இல் கூட இதே பிரச்சனை தான். "தீக்குள் சிக்கிக்கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றுகிறார்கள் தீயணைப்பு வீரர்கள்" என்ற கதைக்கு எப்படிப்பார்த்தாலும் 1) தீ எப்படி பிடித்தது 2) தீ எப்படி காட்டுத்தனமாக பரவியது 3) யாரெல்லாம் உள்ளே சிக்கிக்கொண்டார்கள் 4) தீயை தீயணைப்பு வீரர்கள் எப்படியெல்லாம் போராடி அணைத்தார்கள் 5) யார் இறந்தார்கள், யார் பிழைத்தார்கள் - இதைத் தான் சுற்றிச் சுற்றி காட்ட முடியும். இதில் என்ன வித்தியாசத்தைக் காட்டுவது? அப்படித் தான் வங்கிக்கொள்ளையும் தீ விபத்தைப் போன்றதொறு நிகழ்வு. அதை வித்தியாசமாகக் காட்டுவது கடினம்.

ஒன்று - பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முணையில் பணத்தைக் கொள்ளையடித்து விட்டுச் செல்வது. இதற்கு அதிகபட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த நிகழ்வை மட்டும் நம்பினால் குறும்படத்திற்குக் கூட காட்சிகள் தேராது. இதைத் தான் நான் மேலே சொன்ன 'ருத்ரா', 'சாது மிரண்டா', 'கோ' படங்களில் காட்டியிருப்பார்கள். தமிழிலேயே இத்தனைப் படங்கள் இருக்கும் போது ஆங்கிலத்தில் சொல்லவா வேண்டும்? எல்லோருக்கும் தெரிந்த சிறந்த உதாரணம் ஹாலிவுட் 'The Dark Knight (2008)' (https://www.youtube.com/watch?v=Yqvbv-SB4bg).

இரண்டு - பக்காவாக பிளான் செய்து சுரங்கம் தோண்டியோ அல்லது வேறு வழிகளிலோ வங்கிக்குள் புகுந்து விடிவதற்குள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகும் பலே திருட்டைப் பற்றிய படம். இதில் சினிமாவிற்கான ஸ்கோப் நிறைய அதிகம் இருக்கிறது. 'நாணயம்' இப்படி வந்த படம் தான். இன்னொரு உதாரணம் சமீபத்தில் வெளியான 'ராஜதந்திரம்' (நகைக்கடை கொள்ளை என்றாலும்...). முதல் பாதி முழுவதும் வலுக்கட்டாயமாகக் காமெடி, காதல் என்று காட்சிகளை நகர்த்திவிட்டு, இடைவேளையில் கொள்ளையடிக்க முடிவு செய்து, இடைவேளைக்குப் பிறகு திட்டங்களை வகுத்து (Planning), நீண்ட ப்ரீ-கிளைமாக்ஸில் கொள்ளையை நிகழ்த்தி (Execution), கிளைமாக்ஸில் கொள்ளையன் ஹீரோவாக இருந்தால் அவன் புத்திசாலித்தனமாக எஸ்கேப் ஆவதையும், வில்லன் / செகண்ட் ஹீரோவாக இருந்தால் அவனை ஹீரோ பிடிப்பதாக (Getaway) படத்தை முடிப்பார்கள். 

இந்த இரண்டாவது category யைப் பொறுத்த வரை, Planning இல் வித்தியாசம் காட்டலாமே தவிர, Execution எப்படிப்பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆங்கில உதாரணங்கள் 'The Italian Job (2003)' (https://www.youtube.com/watch?v=5Eyw-Qiwpj0), 'Heist (2001)' (https://www.youtube.com/watch?v=nhQ6gS0fm9s), 'The Lookout (2007)' (https://www.youtube.com/watch?v=zLTOzu8N1Pg) என்று பல படங்கள். பணம் திருடப்போய் ஹீரோ, பெரிய வில்லனது கோபத்திற்கு ஆளாகும் 'The Bank Job' போன்ற படங்களும் உண்டு. Classic திரைப்படமென்றால் Stanley Kubrick இயக்கத்தில் வெளியான 'The Killing (1956)' (https://www.youtube.com/watch?v=FiDUFG56wT4) படத்தைச் சொல்லலாம். வங்கிக்கு பதில் இங்கு குதிரை ரேஸ் கிளப்பின் மொத்த பணத்தையும் கொள்ளையடிப்பார்கள். சந்தர்ப்ப வசத்தால் வங்கிக்கொள்ளையில் ஈடுபடும் ஹீரோ போன்ற படங்களும் உண்டு. உதாரணத்திற்கு Harrison Ford நடிப்பில் வெளியான 'Firewall (2006)' (https://www.youtube.com/watch?v=a1xYGg_badI) மற்றும் காமெடி படமான '30 Minutes or less (2011)' (https://www.youtube.com/watch?v=Yh12cKUob_M). இந்தப் படங்களைத் தவிர பக்காவாக பிளான் செய்யப்பட்டு பெரும்பணத்தை அசால்ட்டாகத் திருடும் கும்பலைப் பற்றிய 'Daylight Robbery (2008)' (https://www.youtube.com/watch?v=cY6j7ftuwCw) படமும் அவசியம் பார்க்க வேண்டிய படம். 

மூன்று - பொதுவாக, வங்கிக்கொளையர்களைப் பற்றிய படம். 

நிறைய இருக்கிறது. இவர்கள் யார், ஏன் கொள்ளையடிக்கிறார்கள், கொள்ளையடித்து என்ன் செய்கிறார்கள், எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள், இவர்களைப் பிடிக்கும் போலீஸ் யார், அவர் எவ்வளவு திறமைசாலி, திருடர்கள் எப்படி பிடிபட்டார்கள் என்று Cat and Mouse காட்சிகளாக படம் நகரும். தமிழில் 'ஜென்டில்மேன்' போன்ற திருடர்களைப் பற்றிய படம் இருக்கிறது. ஆனால் exclusive ஆக வங்கிக்கொள்ளையர்களைப் பற்றிய படம் இல்லை. ஆங்கிலத்தில் சிறந்த உதாரணமாக Keanu Reeves நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான 'Point Break' (https://www.youtube.com/watch?v=0hd49bnStgU) படத்தைச் சொல்லலாம். இதுதவிர Al Pacino, Robert De Niro நடிப்பில் வெளியான 'Heat (1995)' (https://www.youtube.com/watch?v=QQNBg6I29gI) ஒரு நீண்ட அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படம். Ben Affleck இயக்கி நடித்த 'The Town (2010)' (https://www.youtube.com/watch?v=hOsJ7jLRQq4) கூட இந்த வகைக்குள் தான் சேரும். சமீபத்தில் நான் பார்த்த கொரிய படங்களான 'The Thieves (2012)' (https://www.youtube.com/watch?v=28qTsiPhYCI), 'The Con Artists (2015)' (https://www.youtube.com/watch?v=NmqpLSA0zkA) இரண்டும் இவ்வகைத் திரைப்படங்களே. Robert de Niro, Edward Norton, Marlon Brando போன்ற ஜாம்பவான்களின் நடிப்பில் வெளிவந்த 'The Score (2001)' (https://www.youtube.com/watch?v=AiN6-UdxcbI) படமும் பார்க்கக்கூடிய ஒரு படம் தான். இவை தவிர Takers (2010), Chaos (2005), Die Hard படவரிசையில் இரண்டு படங்கள், The Place Beyond the Pines (2012) என்று நிறைய இருக்கிறது. Classic திரைப்படங்களில் Butch and the Sundance Kid (1969), Bonnie and Clyde (1967), The Getaway (1972) போன்ற படங்களைச் சொல்லலாம். ஆனால் பெரும்பாலும் இந்தப் படங்களின் இரண்டாம் பாதி முதல் இராண்டு category க்குள் புகுந்துவிடும். பொதுவாக இந்தப் படங்களில் ஹீரோ வங்கிக்கொள்ளையராக இருப்பார். அதனைச் சுற்றிக்காட்சிகள் நகரும். ஹிந்தி Dhoom 3 படத்தைப் போல.     

நிஜத்தில் வாழ்ந்த கொள்ளையர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட Public Enemies (2009), Dead Presidents (1995) ஆஸ்த்ரிய நாட்டுத் திரைப்படமான 'The Robber (2010)' (https://www.youtube.com/watch?v=iIgT3RVsZHQ), தென் ஆப்ரிக்கத் திரைப்படமான 'Stander (2003)' (https://www.youtube.com/watch?v=XrHtEbTr78s), பிரென்ச் தேசத்து திரைப்படமான 'Mesrine: Public Enemy Number One (2008)' (https://www.youtube.com/watch?v=XgYzDUhoah0) ஆகிய படங்களும் அவசியம் பார்க்க வேண்டிய வங்கிகொள்ளையர்களைப் பற்றிய படங்கள். 

இந்த மூன்றையும் தாண்டி நான்காவதாக - கொஞ்சம் சினிமாவிற்கான டிராமா அதிகம் உள்ள, அதே சமயம் முழுக்க முழுக்க வங்கிக்குள்ளேயே நடக்கக்கூடிய ஒரு ஏரியா 'Hostage Situation'. தமிழில் பணையக் கைதிகள். வங்கியைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள், பணத்தையும் திருடி விட்டார்கள். ஆனால் எஸ்கேப் ஆவதற்குள் போலீஸ் சுற்றிவளைத்து விடுகிறது. வங்கிக்குள் இருப்பவர்களை பணையக் கைதிகளாக வைத்து எப்படி கொள்ளையர்கள் எஸ்கேப் ஆகிறார்கள் அல்லது போலீஸ் / ஹீரோ கையால் சாகிறார்கள் என்பதை செம்ம interesting ஆகவும், thrilling ஆகவும் காட்டலாம். ஆங்கிலத்தில் இதைப் பிரித்து மேய்ந்து விட்டார்கள் என்றாலும், தமிழில் முழுவதுமாக இதை மையயப்படுத்தி எந்தப் படமும் வரவில்லை ('சிந்தனை செய்' படத்தில் Hostage Situation வரும்). 

Stockholm Syndrome, Hostage Negotiation, Exchange என்று அடித்து ஆட நிறைய இருக்கிறது இந்த வகையில்.  

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை "வங்கிக்குள் Hostage கள்" என்றாலே நினைவிற்கு வருவது Al Pacino நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளியான 'Dog Day Afternoon' (https://www.youtube.com/watch?v=CF1rtd8_pxA) திரைப்படம் தான். முழுக்க முழுக்க வங்கிக்குள் நடக்கும் கதை. மூன்று நண்பர்கள் இணைந்து வங்கியைக் கொள்ளையடிக்கச் செல்வார்கள். அதில் ஒருவன் ஆரம்பத்திலேயே பயந்து எஸ்கேப் ஆக, Al Pacino வும் மற்றவனும் எப்படி வங்கிக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் என்பது தான் கதை. Classic திரைப்படம். Al Pacino நடித்த படங்களில் என்னைப் பெரிதும் கவர்ந்த படம். பார்த்தே தீர வேண்டிய Black Comedy (Dark Humour?) திரைப்படம். 

இந்தப் படத்தைத் தவிர இன்னொரு அட்டகாச Hostage திரைப்படம் 'Inside Man (2006)' (https://www.youtube.com/watch?v=44v8NhVEL5A). நம் ஏ.ஆர்.ரஹ்மானின் Chaiya Chaiya பாடல் அதிர இந்தப் படம் தொடங்குவதே அட்டகாசமாக இருக்கும். Perfect Plan. Perfect Execution. Perfect Getaway. தவர விடக்கூடாத படம். இவை தவிர 'How to Rob a Bank (2007)', 'The Almost Perfect Bank Robbery (1997)' என்ற பெயர்களிலேயே அட்டகாசமான Indie திரைப்படங்கள் உண்டு. 'Flypaper (2011)' (https://www.youtube.com/watch?v=fKCzQ2BGOpo) படத்தில் ஒரே வங்கியை இரு குருப்கள் கொள்ளையடிக்க முயற்சிக்கும். Heat படத்தை விட அதிகமான Gun Fights நடக்கும் படம் '44 Minutes The North Hollywood Shootout (2003)' (https://www.youtube.com/watch?v=XJ13i7QShl8). 44 நிமிடங்கள் போலீஸை திணறடித்த இரண்டு கொள்ளையர்களைப் பற்றிய படம். அமெரிக்கவின் Los Angeles சரித்திரத்திலேயே அதிக துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டது இந்தக் கொள்ளை சம்பவத்தின் போது தானாம் (North Hollywood shootout). கூடவே சமீபத்தில் நான் பார்த்து நொந்த கொரிய படமான 'Going By the Book (2007)' (https://www.youtube.com/watch?v=PeyaAnq5u3o) படம் கூட இந்த வகையைச் சேர்ந்தது தான்.

இவ்வளவு ஏன், 'Kill Point (2007) - 10 episodes' (https://www.youtube.com/watch?v=Y3SVm3lzvQg) என்ற பெயரில் அட்டகாசமான 7 எப்பிஸோட் டிவி சீரீஸ் கூட இருக்கிறது. Bank Hostage Situation ஐ மையப்படுத்தி. திரைப்படங்களுக்கு சற்றும் குறையாத சீரீஸ் இது. 

இந்தப் படங்களைத் தவிர இன்னும் பல படங்கள் கொட்டிக்கிடக்கிறது. இந்தப் படங்களையெல்லாம் பார்த்தால் ஒரு வங்கிக்கொள்ளையையே சுலபமாகப் பிளான் செய்து விடலாம். ஆனால் நம்மவர்கள் ஒரு படம் எடுக்கத் தயங்குகிறார்கள். அவ்வபோது நாளிதழ்களில் வங்கிக்கொள்ளை சம்பந்தமான படம் என்று ஏதாவது ஒரு புதிய படத்தைப் பற்றிய செய்தி வரும். கடைசி வரை அது செய்தியாகவே இருந்துவிடும். சமீபாத்தில் 'மய்யம்' என்ற பெயரில் அப்படி ஒரு படம் தயாராவதாகக் கேள்விப்பட்டேன். வந்தால் தான் தெரியும்.

மலையாளத்தில் 2012 ஆம் ஆண்டு 'Bank Hours 10 to 4' என்ற படம் முழுக்க முழுக்க வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி வந்திருக்கிறது. டிரைலரே (https://www.youtube.com/watch?v=B4Jkxx1UngQ) மட்டமாக இருந்தது. படமும் அப்படியே. ஆனால் இது போன்ற 'கன்னி' முயற்சிகள் கூட இல்லை தமிழிலிருந்து. ஹிந்தியிலிருந்து Dhoom Series தவிர வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி Amitabh நடிப்பில் 'Aankhen (2002)' (https://www.youtube.com/watch?v=oCUVRWW7Xjk) என்று ஒரு படத்தைப் பற்றி பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை. தமிழில் வந்த ஒரே வங்கிக்கொள்ளை படமான நாணயத்தில் Laser Beam பாதுபாப்பு, தண்ணீருக்குள் vault என்று பல காமெடிகள் இருக்கும். படத்தின் கரு 'The Bank Job' கதையுடன் அநியாயத்திற்கு ஒத்துப்போகும். இத்தனைக்கும் சூது, திருட்டு, ஃப்ராடுத்தனம் தான் தமிழ் சினிமாவின் லேடஸ்ட் ஹிட் பார்முலா. அதில் பிரதானமான வங்கிக்கொள்ளையை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை.  

இந்த இடத்தில், 2007 ஆம் ஆண்டு நடந்த கேரளாவில் நடந்த Chelembra Bank Robbery (https://en.wikipedia.org/wiki/Chelembra_bank_robbery) பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை என்று இதைச் சொல்கிறார்கள். 80 கிலோ தங்கமும், 25,00,000ரூ பணம் திருடு போனது. இரண்டாவது மாடியில் வங்கி இருந்திருக்கிறது. முதல் மாடியில் பாதுகாப்புப் பெட்டகம் (vault). கீழ் தளத்தில் இருந்த ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்த நான்கு நபர் கும்பல் அதற்கு ரூ50,000 அட்வான்ஸ் கொடுத்து, 'Renovation in Progress' என்று போர்டெல்லாம் மாட்டி, சின்ன சந்தேகம் கூட வராத அளவிற்கு தட்டு முட்டு சாமான்கள், சேர், டேபிள் எல்லாம் ஏற்றி இறக்கி பக்காவாக பிளான் செய்து, ஒரு ஞாயிறு அன்று முதல் மாடியில் ஓட்டையைப் போட்டு 80 கிலோ தங்கத்தை மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பத்தாத குறைக்கு "Jai Mao" என்று சுவற்றில் எழுதி வைத்து 'நக்சல்' பயத்தை வேறு விதைத்திருக்கிறார்கள். திடுடப்பட்ட தங்கத்தில் ஒரு கிலோவை வேண்டுமென்றே ஹைதிராபாத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விட்டுச் சென்று போலீஸைக் குழப்பி அடித்திருக்கிறார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் செல்போன் சிக்னல் மூலம் மாடடியிருக்கிறார்கள். 80% திருடு போன நகைகளையும் மீட்டுவிட்டது போலீஸ். ஒரு திரைப்படத்திற்கு இதை விட வேறு என்ன சுவாரஸ்யமான திரைக்கதை வேண்டும்? ஆனால் இந்தச் சம்பவத்தை வைத்து இதுவரை ஒரு குறும்படம் கூட வரவில்லை.

சின்னச் சின்னதாக பல வங்கிக்கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. YouTube அடித்துப்பார்த்தால் ஏகப்பட்ட கொள்ளைச் சம்பவங்களின் CCTV Footage கள் காணக்கிடைக்கிறது. காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என்று பல வகைகளில் நடந்து கொண்டிருக்கிறது கொள்ளை. சென்ற வருடம் 125 அடி சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் அடித்துக்கொண்டு போனார்கள் ஹரியானா திருடர்கள். இவ்வளவு ஏன், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் ராத்திரியோடு ராத்திரியாக அடகுவைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்கத்தைச் சுருட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த வங்கி திருடுபோன நகைக்கு due கட்டச்சொல்லி வாடிக்கையாளர்களுக்கு message அனுப்பியது தனிக்கதை. சென்னையில் ஒரே மாதத்தில் ஒரு கொள்ளைக் கும்பல் பட்டப்பகலில் வங்கிகளுக்குள் புகுந்து மூன்று முறை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தையும், திருடியது வடமாநிலகும்பல் என்று நால்வரை போலீஸ் encounter செய்த சம்பவத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன? 

உண்மைக்கதைகளே ஏகப்பட்டது உண்டு. சொந்தமாக யோசித்தால் இன்னும் நிறைய சுவாரஸ்யங்களைச் சேர்க்கலாம். 10 திரைப்படங்களைப் பார்த்தால் எது வொர்க் ஆகும் ஆகாது எப்படி கதையைக் கொண்டு செல்ல வேண்டியது என்று தெரிந்துவிடும். ஆனாலும் அட்டகாசமான ஒரு வங்கிக்கொள்ளையை படமாக எடுக்க இங்கு ஆள் இல்லை. அப்படியே எடுத்தாலும், இப்படித் தான் எடுக்க முடியும் என்பது புரியாமல், விமர்சனம் என்ற பெயரில் நம்மாட்கள் நான் மேலே சொன்ன ஏதாவது ஒரு படத்துடன் அந்தப் படத்தை ஒப்பிட்டு படமெடுத்த இயக்குனரை கடித்துக் குதறிவிடுவார்கள். இது எல்லா படங்களுக்கும் நடப்பது தான். அப்பட்டக்காப்பிக்கும் inspiration க்கு இருக்கும் வித்தியாசம் தெரியாதவரை இந்தப் பஞ்சாயத்து தீராது.

இதையெல்லாம் மீறி ஒரு அட்டகாசமான வங்கிக்கொள்ளை திரைப்படம் அட்டகாசமான திரைக்கதையுடன், நம்மவர்கள் எதிர்பார்க்கும் 'கமர்ஷியல்' அம்சங்களையும் பூர்த்தி செய்து வெளிவந்து வெற்றிபெற வேண்டும். வரும். பார்க்கலாம்.

பி.கு 1 - எனக்குத் தெரிந்த படங்களை எழுதியிருக்கிறேன். இவை தவிர இன்னும் பல மொழிகளில் பல படங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றில் நீங்கள் பார்த்த நல்ல படங்களைப் பரிந்துரைக்கவும். முக்கியமாக இந்திய மொழித் திரைப்படங்கள். ஓரிரு காட்சிகளில் வரும் வங்கிக்கொள்ளையாக இல்லாமல் மொத்தப் படமும் வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி நடக்க வேண்டும். அந்தப் படங்களுக்குத் தான் முதல் priority.

பி.கு 2 - இந்தப் படங்களின் லின்க்கள் அனைத்தும் www.kat.cr (Kickass Torrents) தளத்தில் கிடைக்கிறது. கொஞ்சம் முயற்சி செய்தால் படத்தை நீங்கள் பார்த்து விடலாம் :)

You Might Also Like

3 comments

  1. Super analysis. Net fast a illa boss. Inga banglorela yedhaavadhu fast browsing center irundha sollunga

    ReplyDelete
  2. படிக்கும் போது எனக்கே பல கற்பனை ஓடுது நாணயம் தவிர தமிழ் முழ பேங் ராப்பரி இல்லை இதை படித்தாவது எடுக்கட்டும்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...