விஸ்வரூபத்தின்
மீதான தடை பற்றியும், முஸ்லீம்களின் உண்மையான பிரச்சனைகள் பற்றியும் சாமானியனான எனது
கருத்துக்களை ஒரு நீண்ட பதிவாக எழுதி வைத்திருக்கிறேன். அதைத் தான் இன்று வெளியிடுவதாக
இருந்தேன். ஆனால் இப்பொழுது தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது,
“முஸ்லீம்கள் விஸ்வரூபத்திற்கு ஏற்படுத்திய பிரச்சனைகள் அவர்களாக செய்தது அல்ல, சில
மதத்தலைவர்களும், இன்றைய அரசும் சேர்ந்து அவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி முன்வரிசையில்
சாகக்கொடுத்திருக்கிறார்கள்” என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அரசின் வீண் கர்வத்திற்கு
(EGO) விஸ்வரூபத்தால் கமலும், முஸ்லீம்களும் சம்பந்தமே இல்லாமல் நாமும் பலியாகியிருக்கிறோம்
என்பதும் தெரிகிறது.
தமிழகத்தில்
எத்தனையோ தலையாய பிரச்சனைகள் கிடப்பில் கிடக்க, ஒரு சாதாரண திரைப்படத்தை முடக்க 10
மணிக்கு தீர்ப்பு வெளியானவுடன் 11.30 மணிக்கே கிளம்பிப் போய் உயர்நீதி மன்ற நீதிபதியைச்
சந்தித்த அரசு வக்கீல்கள், அவசர அவசரமாக இன்று காலை முதல் வழக்காக, விஸ்வரூபத்தின்
தடை நீக்கம் தொடர்பான தீர்ப்பிற்கு மீண்டும் ஒரு தடை வாங்கியிருக்கிறார்கள். ஒரு சாதாரண
திரைப்படம் அப்படி என்ன செய்துவிடப்போகிறது இந்த அரசை? இத்தனைக்கும் தமிழக அரசு இதுவரை
சந்திக்காத பிரச்சனைகளா? அதையெல்லாம் சமாளிக்கத் தெரியாதவர்களா? ஏன் விஸ்வரூபம் வெளியாகிவிடக்
கூடாது என்பதில் மட்டும் அரசிற்கு இத்தனை அக்கறை? ஏன் இவ்வளவு அவசரம்? மக்கள் நலன்
மேல், மதநல்லிணக்கனத்தின் மேல், நாட்டின் பாதுகாப்பின் மேல் அவ்வளவு அக்கறையா? அல்லது
நேரடி உத்தரவு வந்த பிறகும் கமல் தன் படத்தை வேறு சேனலுக்கு விற்றது தான் காரணமா? அல்லது
தடை போட்டவுடன் வந்து பார்க்காமல், காலில் விழாமல், கமல் நீதிமன்றத்தை நாடியதால் வந்த
கோபமா?
முதலில்
படம் தடை செய்யப்பட்டதும் அதை விசாரித்த நீதிபதி, “நான் படத்தைப் பார்க்க வேண்டும்”
என்றார். சரி, “தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை, ஆறு கோடி பேர் பார்க்கலாமா வேண்டாமா,
அதனால் அவர்களது மனம் கெடுமா கெடாதா, முஸ்லீம்களின் மனம் வருந்துமா வருந்தாதா? என்பதையெல்லாம்
இவர் ஒருவர் பார்த்துக் கூறுவார் என்று காத்திருந்தனர் மக்கள். மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டார்,
நீதிபதி. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, சினிமா ஒரு அவசரமா என்று நினைத்திருக்கலாம்.
தப்பில்லை. இறுதியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அன்று “அரசு அதிகாரிகளிடம் பேசுங்கள்”
என்று கமலுக்கு அறிவுரை செய்துவிட்டு மீண்டும் ஒரு நாள் தீர்ப்பை ஒத்தி வைத்தார். அரசு
அதிகாரிகளிடம் பேசச் சொல்லவா கமல் நீதிமன்றத்தை அனுகினார்? அதற்காகவா நீதிபதி படம்
பார்த்தார்? சரி, நீதிபதி சொன்னது போல் “அரசு அதிகாரி”களிடம் பேசி, சுமூக முடிவு எடுக்கப்பட்டு,
படத்தை வெளியிட்டால், மதம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராதா? அப்படியென்றால் என்ன
அர்த்தம்? இந்த அரசால் எப்படிப் பார்த்தாலும் பிரச்சனை வராமல் தடுக்க முடியும். அப்படித்தானே?
அப்படியென்றால் படத்தை முடக்கத் துடிப்பது யார்? அரசா அல்லது முஸ்லீம்களா? யாருடைய
“உணர்வுகள்” இங்கு கமலால் பாதிக்கப்பட்டிருக்கிறது? தணிக்கை செய்யப்பட்ட ஒரு படம்,
தடை நீங்கி மீண்டும் வெளியாக உத்தரவிடப்பட்ட ஒரு படம், மீண்டும் தடை செய்யப்பட்டு,
கேஸ் அடுத்த திங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படி, இப்படி என்று என்னைக் கேட்டால்
படம் வெளியாக (ஒருவேளை ஆனால்) சரியாக இரண்டு வாரம் ஆகும் போலத் தோன்றுகிறது. அதாவது
அரசு, தனது இரண்டு வாரத் தடையில் வெற்றி பெற்ற பின் விஸ்வரூபத்தை வெளியிடும். அப்படித்தானே?
கமல்
இப்பொழுது "சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயார். எங்களுக்குள் பிரச்சனை தீர்ந்தது"
என்று சொல்லியிருக்கிறார். அதாவது அவரது முஸ்லீம் சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,
இறங்கி வந்திருக்கிறார். இப்பொழுது நிஜமாகவே படம் வெளியானால் எந்தப் பிரச்ச்னையும்
இருக்காது. முஸ்லீம் தலைவர்கள் சொன்னதால் தான் மற்றவர்கள் படத்தைப் பார்க்காமலேயே அதை
எதிர்த்துப் போராடினார்கள். இப்பொழுது அதே தலைவர்கள் கமலிடம் பேசி சுமூகமாக, யாருக்கு
எந்தப் பிரச்சனையும் வராமல் பிரச்சனையை முடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் முஸ்லீம்கள்
வென்றுவிட்டதாகத் தான் அர்த்தம். மற்ற மதத்தினரும் முஸ்லீம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டிருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் இனி முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருக்காது. எல்லாம் OK
தானே? பின்னர் ஏன் படம் இன்னும் வெளிவரவில்லை? எந்தப் பிரச்சனையும் இல்லையென்றால் இந்நேரத்திற்கெல்லாம்
அரசு கேஸை வாபஸ் வாங்கியிருக்க வேண்டும், படமும் வெளியாகி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்க
வேண்டும். ஆனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் போலீஸ் விரட்டுகிறது, ராமநாதபுரத்தில்
படம் நிறுத்தப்பட்ட பிறகும் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னையில் பட பேனர்கள் கொளுத்தப்பட்டுள்ளன, தியேட்டரின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. தியேட்டரில்
குண்டு வீசியது யார்? எதிர்ப்பைத் தெரிவிக்கும் முஸ்லீம் அமைப்புகள் என்றா நினைக்கிறீர்கள்?
இப்படி குண்டு வீசுபவர்களாக தங்களை தமிழ் சினிமா தொடர்ந்து காட்டுகிறது என்று தானே
இவர்கள் போராட்டத்திலேயே இறங்கினார்கள். தங்களது எதிர்ப்பை போதுமான அளவு காட்டி விட்ட
பிறகும், கமலே இறங்கி வந்துவிட்ட பிறகும் இவர்கள் இப்படிச் செய்வார்களா? அப்படியென்றால்
யார் வீசியது? மதக்கலவரம் வரும் என்று தானே தடை வாங்கப்பட்டது? ஆனால் பெரிய பிரச்சனை
அல்லவா அரங்கேற ஆரம்பித்திருக்கிறது!
கமல்
இன்று காலை பத்திரிக்கைக்காரர்களை சந்தித்து, தான் இந்த மாநிலத்தை விட்டு அல்லது இந்த
நாட்டை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். தனது
சொத்துக்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகச் சொல்கிறார். மதச்சார்பற்ற, கலைஞனை மதிக்கும்
வேறு மாநிலம் அல்லது நாட்டைத் தேடி தான் போகப் போவதாகக் கூறியுள்ளார். காலம்காலமாக
சினிமாக்காரர்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தமிழகத்தில் இன்று ஒரு சினிமாக்காரனுக்கு
இடமில்லையா? காரணம் மதமா? அல்லது அவன் எடுத்த ஒரு சினிமாவா? அல்லது கலைஞனுக்கே உள்ள
திமிரா? கமல் வெளியேறக் கூட வேண்டாம். இப்படி பேட்டி கொடுத்திருப்பது தெரிந்தாலே உலகம்
நம்மைக் காரித் துப்பாதா? மதம் என்னும் போர்வையால் தன்னை பாதுகாப்பாக மறைத்துக்கொண்டு
தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கும் கமல் ஹாசன் அவரது மகள் ஸ்ருதி
ஹாசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், கலைஞர், டாக்டர். ராமதாஸ்
என்று இன்னும் பலரை தன் இஷ்டத்திற்கு தன் சமூகமே வெறுக்கும் வண்ணம், ஆபாசமாக கேமராவிற்கு
போஸ் கொடுத்துக்கொண்டே ஒருத்தனால் திட்ட முடியும், அதற்கு உரிமை இருக்கிறது, ஆனால்
உலகமே ஒத்துக்கொண்ட ஒரு உண்மையை, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சர்வதேசப் பிரச்சனையை
படமாக எடுத்து தமிழகத்தில் வெளியிட உரிமையில்லை, எடுத்தவனுக்கும் இடமில்லை. அப்படித்தானே?
இதெல்லாம்
வெளியில் நடப்பது. ஆனால் “தமிழ் சினிமா” விற்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது. ஒரு
கலைஞனுக்கு, தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவனுக்கு இன்றைய தமிழ் சினிமா இப்பொழுது
என்ன செய்துகொண்டிருக்கிறது? நியாயமாகப் பார்த்தால் இது யார் பிரச்சனை? யார் போராட
வேண்டியவர்கள்?
“தூள்”
படத்தில் ஒரு காட்சி வரும், நினைவிருக்கிறதா? வில்லன் அரசியல்வாதி சாயாஜி ஷிண்டே ஒரு
உண்ணாவிரத்தத்தை ஏற்பாடு செய்து உட்கார்ந்து கொள்வார். மற்ற அரசியல்வாதிகள் ஒருவர்
பின் ஒருவராக வந்து அமர்வார்கள். ஏனென்றால் எங்கு தான் வந்து அமரவில்லை என்றால் தமிழன்
இல்லை என்று சொல்லி அரசியலிலிருந்தே ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம். அது தான் இப்பொழுது
கமல்ஹாசன் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி துக்கம் விசாரிக்கப்போவது தெரிந்தவுடன்
ஒருவர் பின் ஒருவராக இப்பொழுது படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் உண்மையிலேயே கமலுக்காக வருந்துகிறார்கள்? முதலில் டுவிட்டரில் பட்டும் படாமல் பேசினார்கள்,
பின்னர் அறிக்கை விட்டார்கள் (அதிலும் ரஜினி தான் முதல். ஆனால் அதுவே லேட்), இப்பொழுது
நேரில் சந்தித்து துக்கம் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உப்பு
சப்பில்லாத பிரச்சனைகளுக்கெல்லாம் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை கூட்டாக பெரிய அளவில்
காட்டி பிரபலமடைந்தவர்கள் இன்று கமல் பிரச்சனைக்கு மட்டும் தனித்தனியே வந்து "உள்ளேன் அய்யா" மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி நீர் பிரச்சனை,
ஒக்கேனக்கல் பிரச்சனை, சேவைவரி அதிகரிப்பு, ஏன் டெல்லி பலாத்கார சம்பவத்திற்கு கூட
ஒன்று கூடினார்கள், எதிர்ப்பு தெரிவித்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள், படப்பிடிப்பை
நிறுத்தினார்கள். ஆனால் கமல் என்னும் கலைஞனை இங்கு தமிழக அரசியல், அரசியல்வாதிகள் கலை
பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மட்டும் ஏன் பலமான எதிர்ப்பு தெரிவிக்க
மறுக்கிறார்கள்? இது இவர்கள் பிரச்சனை இல்லையா? பொறுப்போடு முன்னின்று போராட வேண்டியவர்கள்
யார்? தமிழ்த் திரையுலகினரா அல்லது நாமா? புவனேஸ்வரி பிரச்சனைக்கு இருந்த போபம் கமல் பிரச்சனைக்கு இல்லையே, ஏண்?
தமிழ்
சினிமாவில் இருந்து வந்தவர் தான் இன்றைய முதல்வர். அதே தமிழ் சினிமாவிலிருந்து வந்தவர்
தான் எதிர்கட்சி தலைவரும். அவர் "இது ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி" என்று
அறிக்கை விடுகிறார். இப்படி மாறி மாறி அறிக்கை தான் விடுகிறார்களே தவிர்த்து
"வாருங்கள், தெருவில் இறங்கி நம் கலைமகனுக்காக போராடுவோம், தமிழ் சினிமாவைக் காப்பாற்றுவோம்"
என்று யாராவது சொல்கிறார்களா? தமிழக்கத்தில் வேறு எந்த துறையினருக்கு இது போல் நடந்திருந்தாலும்
நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் போராடியிருப்பார்கள் சாதித்துக் காட்டி இருப்பார்கள்.
ஆனால் தமிழ் சினிமா மட்டும் கமுக்கமாக, பாதுகாப்பாக, சுயநலமாக, பொத்திக்கொண்டு இருக்கிறது.
“கமலையே அமுக்கி விட்டார்கள், நாமெல்லாம் எம்மாத்திரம்” என்கிற பயம் ஒவ்வொருவரது மனதிலும்
இருக்கும். அதில் ஆச்சரியமில்லை. ஆனால் – தமிழ்த் திரையுலகமே திரண்டு வரும் பொழுது
இந்த அரசால் என்ன செய்ய முடியும்? ஆண்டு கொண்டிருப்பவர்கள் வந்ததே இந்த சினிமாவில்
இருந்து தானே? இவர்களே ஒன்றாக வந்தால் மக்களின் ஆதரவு இன்னும் பலமடங்கு பெருகும் தானே?
கமலுக்கு 50 ஆண்டு விழா எடுத்தார்கள்; தமிழ் சினிமா ஒரே குடும்பம், கமல் அதன் வாரிசு
என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்கள், கட்டித் தழுவிக்கொண்டார்கள், அண்ணன் என்றார்கள்,
காலில் விழுந்து சித்தப்பா என்றெல்லாம் கூட முறை வைத்து அழைத்தார்கள். இப்பொழுது எங்கே
போனார்கள் அவர்கள் எல்லாம்?
மிக
மோசமான, தரம் கெட்ட, கவர்ச்சி, வன்முறையை மட்டுமே காட்டும் படங்கள் தொடர்ந்து வந்த
போதும், அநியாய டிக்கெட் விலையோடு சேர்த்து பார்க்கிங் விலை, பாப்கார்ன் விலை என்று
தமிழ் சினிமாவும், தியேட்டர்களும் செய்த அத்தனை அராஜகத்தையும் கண்டு கோபம் வரவில்லை
தமிழ் ரசிகனுக்கு. ஆனால் இன்று கமலுக்கு ஒன்று என்றவுடன் முதல் ஆளாக முன்னால் நின்று
போராடுபவன் இந்த ரசிகன் தான். கோபப்படுபவனும் இதே முட்டாள் ரசிகன் தான். கமல் ரசிகன்
அல்ல. தமிழ் சினிமாவின் ரசிகன். “தலைவா நீ கவலைபடாதே நாங்கள் இருக்கிறோம்” என்று பணம்
அனுப்புகிறார்கள் கமல் பெயருக்கு. “படம் பார்த்ததாக நினைத்துக்கொள்கிறேன். அந்தப் பணத்தை
உனக்கே கொடுக்கிறேன். நீ இங்கேயே இரு. நாங்கள் இருக்கிறோம்” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். இன்று காலையிலிருந்து இந்த நிமிடம் வரை கமலுக்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கிறார்கள், காவல் இருக்கிறார்கள். "அமைதியாக இருங்கள், நீதி கிடைக்கும்" என்று தங்கள் தலைவன் சொன்ன ஒரே காரணத்திற்காக எந்தப் பிரச்சனையும் செய்யாமல் காத்திருக்கிறார்கள். சினிமாவை, சினிமா நடிகனை தமிழர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள், இன்னும்
எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்க இதை விட வேறு என்ன வேண்டும்?
ஆனால் இவர்களுக்கு தமிழ் சினிமா என்ன செய்துகொண்டிருக்கிறது? என்ன செய்துகொண்டிருக்கிறது
தென்னிந்திய நடிகர் சங்கம்? ஏன் இந்த மௌனம்? அப்படி யார் பயம்காட்டினார்கள் இவர்களை?
தமிழ்
சினிமா உள்ளடக்கிய நடிகர்கள் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி,
விநியோகிஸ்தர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்று அத்தனை சங்கங்களும் ஒன்று
கூடி, உடனடியாக கமலுக்கு துணையாக, அடாவடித்தனம் செய்து கலையை கொலை செய்யப் பார்க்கும்
அரசிற்கு எதிராகத் திரள வேண்டும். போராட வேண்டும். வென்று காட்ட வேண்டும். அப்படிச்
செய்யவில்லையென்றால் தமிழ் சினிமா தனது இந்த “இன்னும் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கத்
தெரியாத” முட்டாள் ரசிகர்களை இழக்கும். கோட்டைக்கு ஏற்றியவர்களுக்கு குப்பையில் தள்ளவும்
தெரியும்.
விஸ்வரூபம் மற்ற மாநிலங்களில் சக்கை போடு போடுகிறது. வரும் வெள்ளியன்று ஹிந்தியிலும் வெகு விமர்சையாக இதுவரை இல்லாத அளவிற்கான காட்சிகளுடன் வெளியாகிறது. வெளிநாட்டு கலெக்ஷன் எல்லாம் அபாரம் என்பது பழைய செய்தி. ஆனால் தமிழ் நாட்டில் இந்த தமிழ் படத்தை இன்னும் யாரும் பார்க்கவில்லை. திருட்டு வி.சி.டி சக்கை போடு போடும் இங்கு, ஒரு படத்தை, எத்தனை நாட்கள் ஆனாலும் சரி தியேட்டரில் போய் தான் பார்க்கவேண்டும் என்று மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த ரசிகர்களை வைத்து இன்னனும் எவ்வளவோ சாத்திக்கலாம் தமிழ்த்திரையுலகம். என்ன செய்யப்போகிறது?
தலைவர்
ரஜினிகாந்த் தன் நண்பனைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருப்பதோடு மட்டுமல்லாமல், “ஏற்பட்டிருக்கும்
நஷ்டத்தை ஈடுகட்ட கமல் இயக்கத்தில் ஒரு பைசா வாங்காமல் நடிக்கத் தயார்” என்று சொல்லியிருக்கிறார்.
இது உண்மையா, வதந்தியா என்று தெரியவில்லை. ஆனால் தலைவன், தலைவன் தான். மற்றவர்காளுக்கு
எப்படியோ, துன்பத்தில் இருக்கும் தன் நண்பர்களுக்கு முதலில் தோள்கொடுப்பவர் இவர் என்பது
உலகறிந்த விஷயம். இந்த இடத்தில் நடிகர் விஜய் யின் செயல்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.
யாரும் எதுவும் உருப்படியாக செய்யாத நிலையில், விஜய் தனது “தலைவா” படப்பிடிப்பை, விஸ்வரூபம்
வெளிவரும் வரை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிகிறது. தனது ரசிகர்களையும் கமலுக்கு ஆதரவாக இருக்கச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி உண்மையென்றால் “விஜய்”
– நான் இனி உங்களது ரசிகன். “தலைவன்” தன் நண்பனுக்காக மோதிப் பார்க்கத் தயார், “தளபதி”யும் களத்தில் இறங்கிவிட்டார், திரையுலகம் இனி திரண்டு வரவேண்டியது தான் பாக்கி… அவர்களுக்கு
நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் – “நாங்கள் நேசிக்கும் தமிழ் சினிமாவைக் காப்பாற்று…
என் தமிழ் சினிமாவைக் காப்பாற்று…”