கருத்து வேறுபாடு என்று தமிழில் சொல்வதை விட இந்தக்
காலத்திற்கேற்ப ‘Difference of Opinion’ என்று சொன்னால்
பலருக்கு சரியான அர்த்தம் சற்று தெளிவாகவே புரியும். இன்றைய தேதியில் திருமண முறிவுகளுக்கு
பலர் சொல்லும் சர்வசாதாரண காரணம் இதுதான்.
“நமக்காக” என்றிருந்த இடத்தில் எல்லாம் இப்பொழுது “எனக்காக” நிரம்பி இருப்பதால்
தான் இந்தப் பிரச்சனை. 7 வருடங்கள் காதலித்து அந்தக் காதலில் வெற்றி கண்டவர்களையும்
நான் பார்த்திருக்கிறேன், அதே 7 வருடம் காதலித்து திருமணம் செய்யாமல் ‘Difference of Opinion’ல் பிரிந்தவர்களையும்
நான் பார்த்திருக்கிறேன். காதலுக்கே இந்த நிலைமை என்றால் வீட்டில் பார்த்து திருமணம்
செய்துகொள்பவர்கள் நிலைமை? அது இன்னும் படு மோசம்.
எனக்குத் தெரிந்த ஒரு நபர் பெண் பார்க்க போன அன்று
தான் அந்தப் பெண்ணை முதல் முறையாகப் பார்த்தார். ஐந்து நிமிடம் அந்தப் பெண்ணோடு தனியாகப் பேசினார். பேசிவிட்டு வந்து,
"பெண்ணைப் பிடித்து விட்டது, மணந்தால் இவளைத்தான்
மணப்பேன்” என்று சொன்னார். திருமணமும் நடந்தது. "அப்படி
என்னப்பா 5 நிமிட்ஸ்ல பேசி முடிவு பண்ண" என்று கேட்டால், “நான் எங்க போனாலும் கூட வருவியா?”னு கேட்டேன்.
அவ கொஞ்சம் கூட யோசிக்காம 'வருவேன்'னு சொன்னா” என்றார். சொன்னபடியே
இப்போது அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கிறார். அவரது மனைவியும் வழக்கம்போல கொஞ்சம் கூட
யோசிக்காமல் வருவதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது. திருமணமான மூன்றே மாதம் தான் மனைவி கர்ப்பம். “எங்க பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு. ஒன்னும் தெரியாது. அதனால பிரசவம் முடியுற வரைக்கும்
வீட்லயே வச்சிக்கிறோம் மாப்ள” என்று சொல்லி
விட்டனர் மாமா-மாமியார். பெண் குழந்தை ஒன்று பிறந்து வருடம் ஒன்றாகப் போகிறது. முதல்
திருமண நாளிற்கு கணவன் மனைவிக்கு அனுப்பிய மெசேஜ் “என்னை விட்டு ஒழிந்து போகமாட்டாயா சனியனே!” இப்போது கோர்ட் படியேறப் போகிறார்கள். ஆக மொத்தம்
மூன்று மாதங்கள் தான் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்குள் வீதிக்கு வந்து விட்டார்கள். காரணம் ‘Difference of Opinion’. அப்படி ‘Difference of Opinion’ காரணமாக கோர்ட்
படியேறும் ஒரு இரானியத் தம்பதியைப் பற்றிய படம் தான் Nader and Simin – A Separation. இந்தப் படத்தை சென்ற மாதம் நடந்த பெங்களூரு சர்வதேச
திரைப்பட விழாவில் காண நேர்ந்தது.
கௌதம் மேனன் “காக்க காக்க” படத்தின் ஆரம்பத்தில் ‘An Episode in a Police Officer’s life’ என்று போட்டிருப்பார். அதே போல் “வேட்டையாடு விளையாடு” படத்திற்கு ‘Another Episode in a Police Officer’s life’ என்று போட்டிருப்பார்.
ஆனால் அவ்விரண்டு போலீஸ் அதிகாரிகளைப் பற்றிய மொத்த ஜாதகத்தையுமே ஓப்பனிங் சாங்கோடு
சொல்லிய பிறகே கதைக்குள் வருவார். எனவே அவையிரண்டுமே “எப்பிசோட்கள்” இல்லை. ஒரு முழு நீள திரைப்படத்தில் “எப்பிசோட்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
முதல் காட்சியில் நடேர் – சிமின் தம்பதி
நீதிபதியின் முன் அமர்ந்து தங்களது வாதங்களை முன் வைத்து விவாகரத்து கேட்கின்றனர்.
அவர்களகது 13 வயது மகளான தெர்மா (Termeh) யாருடன் இருக்கப் போகிறாள் என்று கேட்கிறார் நீதிபதி.
படத்தின் இறுதிக்காட்சியில் “நீ யாருடன் இருக்கப் போகிறாய் என்பதை முடிவு செய்துவிட்டாயா?” என்று தெர்மாவைக்
கேட்கிறார் நீதிபதி. அவளும் “ம்” என்று பதில் சொல்கிறாள்.
படம் நிறைவடைகிறது. விவாகரத்து கிடைத்ததா இல்லையா? தெர்மா யாருடன் வளரப்போகிறாள்? எது
நியாயம்? எது அநியாயம்? இந்தக் கேள்விகளுகெல்லாம் விடை பார்வையாளனிடமே விடப்படுகிறது.
சுவாரஸ்யம் என்னவென்றால் மேலே நான் சொன்ன இரண்டு கேள்விகளுக்குமே “இதுதான் பதில்” என்று ஒன்றை நம்மால் நிச்சயம் சொல்லமுடியாது. காரணம்
திரைக்கதை! கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே கொடுக்கும் தெளிவான திரைக்கதை.
சிமினிற்கு தன் மகள் எதிர்காலம் கருதி கட்டுப்பாடுகள் நிறைந்த இரானை விட்டு
தன் கணவனுடன் வெளியேற வேண்டுமென்று ஆசை. ஆனால் நடேருக்கோ அதில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை.
காரணம் அல்சைமர் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் அவனது வயதான தந்தை.
இருவருமே தங்களது முடிவில் தெளிவாக இருப்பதால் "பிரிந்துவிடுவது" என்று முடிவு
செய்து நீதிமன்றம்
செல்கின்றனர். சிமின் விவாகரத்து பதிவு செய்கிறாள். ஆனால் நடேர் அதை மறுக்கிறான். நீதிபதி
முன் தனது வாதங்களை எடுத்து வைக்கின்றனர். சமரச உடன்பாடு இல்லாததால் பதிவு நிராகரிக்கப்படுகிறது.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள்
இப்படித் தான் நமக்கு அறிமுகமாகிறார்கள்.
கணவன்-மகளைப் பிரிந்து சிமின், தன் பெற்றோருடன்
வாழச் சென்று விடுகிறாள். வயதான தன் தந்தையைப் பார்த்துக்கொள்ள ரசியா (Razieh) என்ற பணிப்பெண்ணை தன் மனைவி மூலமே ஏற்பாடு செய்யும்
நடேர், தான் பணி முடிந்து திரும்பும் வரை தன் தந்தையைப் பார்த்துக் கொள்வது மட்டும்
தான் அவளது பொறுப்பு என்று கூறுகிறான். மகள் தெர்மாவும் அதே நேரத்தில் பள்ளிக்குச்
செல்ல வேண்டும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. ரசியாவும் தன் மூன்று வயது மகளுடன் தினம்
வந்து, தான் யார், எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடேரின்
வயதான தந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட ரசியாவிற்கு
முதல் நாளே தன் வேலை அவ்வளவு சுலபம் இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் பொருளாதார
நிலை காரணமாக தொடரந்து வேலைக்கு வருகிறாள்.
ஒரு நாள் பணி முடித்து வீடு திரும்பும் நடேர், வீடு பூட்டியிருப்பதையும்
உள்ளே ரசியா இல்லாததையும் கண்டு பதற்றத்துடன் தன் தந்தையைக் காணச் செல்கிறான். கட்டிலுடன்
இணைத்துப் பிணைக்கப்பட்டிருப்பதால் எழ முடியாமல், கீழே விழுந்து கிடக்கிறார் தந்தை.
இறந்து விட்டாரோ! என்று நினைத்து கலவரப்படும் நடேர் அவரைத் தூக்கி படுக்க வைத்து நெஞ்சில்
குத்தி, அழுது ஒரு வழியாக அவர் உயிரேடுதான் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறான். பொறுப்பில்லாமல்
விட்டுப் போன ரசியா மீது ஆத்திரம் வருகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு
வரும் ரசியாவுடன் சண்டையிடு வீட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறான்.
அடுத்த நாள் நடேர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்
படுகிறது. வீட்டை விட்டு வெளியேறச் செய்யும் போது நடேர் ரசியாவைத் தள்ளிவிட்டதில்,
அவளது கர்ப்பம் கலைந்ததாக வழக்கு! ஆம், ரசியா கர்ப்பிணி என்று அப்போது தான் நமக்கும்
சொல்லப்படுகிறது. மேலும் ரசியா தனது கணவனிடம் சொல்லாமல் இந்த வேலைக்கு வந்துபோயிருப்பதும்
சொல்லப்படுகிறது. வயதான தன் தந்தையைப் பார்த்துக்கொள்ள வந்த ரசியா, அவரைக் கட்டி வைத்து
கொல்ல முயற்சித்ததாக எதிர்வழக்கு போடுகிறான் நடேர். மேலும் ஏழ்மை ஏற்படுத்திய விரக்த்தியில்
முரடனாகிப் போன ரசியாவின் கணவன் ஹௌஜாட் (Houjat) என்பவனால் பிரச்சனை
மேலும் வலுக்கிறது. தானும் இதில்
சம்பந்தப்பட்டிருப்பதால் கணவனுக்காக போராட வேண்டிய நிலை சிமினிற்கு. இந்தப் பிரச்சனையிலிருந்து
நடேர் எப்படி வெளியே வந்தான்? நடேர் - ரசியா யார் பக்கம் நியாயம்? உண்மையில் நடந்தது
என்ன? நடேர்-சிமின்
சேர வழி ஏற்பட்டதா? என்து தான் கதை.
அதிகம் குழப்பாமல் தேவையான இடத்தில் மட்டும் முன்னுக்குப்பின்
சென்று வரும் திரைக்கதையால் படத்தின் சுவாரஸ்யம் அதிகமாகிறது. அடுத்தடுத்து என்ன நடைபெற்றது
என்பது தெரியவரும் போது நமக்கே தெரியாமல் நம் உதடுகள் “சபாஷ்” சொல்வதை தடுக்க முடியாமல் போகிறது.
ஈரானின் கட்டுப்பாடுகளைச் சீண்டாமல் ஆங்காங்கே அழகாகச்
சுட்டிக் காட்டியதிலும் இயக்குனர், Asghar
Farhadi “பலே வெள்ளையத்தேவா பலே” வாங்குகிறார்.
முக்கியமாக சுயநினைவில்லாமல் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்து விடும் வயதானவரைத் தொட்டு
சுத்தம் செய்யலாமா, கூடாதா? என்று தெரியாமல் மதகுருமார்களுக்கு போன் செய்து ரசியா கேட்கும்
காட்சி, தன் சொந்தத் தாத்தாவை அப்பாவிற்கு உதவியாக தெர்மா தூக்கும் காட்சியில் தெர்மாவைக் காட்டாமல், நடேரையும் வயதானவரையும் மட்டுமே காட்டும் காட்சி
என்று பல காட்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லிக்கொண்டே போகலாம்.
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது ரசியா தான்.
ஏழ்மை சூழ்ந்த, மதக்கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட, கணவன் சொல் மீறாத ஒரு நடுத்தர வயது
பெண்மணியாக கச்சித்மாகப் பொருந்திப் போகிறார்.
அடுத்தது நடேர்-சிமின் மகளான தெர்மா கதாபாத்திரம். இறுதிவரை தன் தாய்-தந்தையர்
மீண்டும் இணைந்து விடுவர் என்ற நம்பிக்கையுடனும், இறுதியில் யாருடன் செல்வது என்பதை
முடிவு செய்து சொல்ல முடியாமல் தவிப்பதுமாக இந்த சின்னப்பெண்ணின் நடிப்பு அற்புதம்.
பெரியவரின் ஆக்ஸிஜன் குழாயை ஏற்றி இறக்கி விழையாடும் ரசியாவின் குழந்தை,
நடக்கவே முடியாத சூழ்நிலையிலும் தானாக சாலையில் இறங்கி 'பேப்பர்' வாங்க முயற்சிக்கும்
அந்தப் பெரியவர், போன்ற சின்னச் சின்னக் காட்சிகளிலும் "நீங்கள் தான் அவர் மகன்
என்பதே உங்கள் அப்பாவிற்குத் தெரியாது, அவருடன்
நீங்கள் இருக்க வேண்டுமா?" என்று கேட்கும் மனைவியிடம் "அவர் தான் என் அப்பா
என்பது எனக்குத் தெரியும்; அதனால் அவருடன் தான் கடைசி வரையிருப்பேன்" என்று நடேர்
கூறும் வசனம் போன்றவற்றிலும், பேட்ண்டிலேயே சிறுநீர் போய்விட்ட தன்னை பாத்ரூமிற்கு
அழைக்கும் வேலைக்காரியை மருமகள் பேர் சொல்லி அழைக்கும் இடத்திலும் ஈர்க்கிறார் இயக்குனர்.
எது சரி, எது தவறு என்று இந்தப் படம் சொல்லவில்லை. “விவாகரத்தால் ஏற்படும் தீமைகள்” என்று கணவன்-மனைவிமார்களுக்கு
பாடம் எடுப்பதாகவும் தோன்றவில்லை. நம் வீட்டில், நம் பக்கத்து வீட்டில் நடைபெற முழு
சாத்தியமுள்ள ஒரு சம்பவத்தை அழகாக எடுத்துரைக்கிறது இந்தப் படம். ஏற்கனவே பெர்லின்
சர்வதேசத் திரைப்பட விழா, கோல்டன் குளோப் என்று விருதுகளை வாரியெடுத்து
விட்ட இந்தப் படம்தான் இந்த வருட ஆஸ்காரில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதைத்
தட்டிச் செல்லப் போகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இந்தியாவின் "ஆதாமண்டே மகன் அபு" ஆஸ்கார் இறுதிச் சுற்று வரை
செல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த முறையும் இந்தியாவிற்கு அந்த அதிர்ஷ்டம்
இல்லை. ஆனால் நம் படம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோஷப்படுவேனோ, அவ்வளவு சந்தோஷம்
இந்த ஈரானியப் படம் வெற்றிபெற்றாலும் எனக்குள் இருக்கும்.
4TamilMedia திரட்டியில் வெளியான இந்தப் படத்திற்கான எனது விமர்சனம்
(படங்களுடன்) இதோ...