எனது புதிய குறும்படம் - 'தாத்திமா'

10:17:00 PM


குறும்படங்களின் மீதுள்ள எனது ஆர்வத்தை நான் ஏற்கனவே பல இடங்களைல் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். முழு நீள திரைப்படங்களை விட குறும்படங்களை நான் மிகவும் ரசிக்கிறேன் என்பதே உண்மை. என்னுடைய ஆர்வத்திற்கு சரியான தீனியாய் எனது நண்பர்களும் வந்து சேர எங்ககளது முத 2 நிமிடக் குறும்படமான 'The Last Minute' கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கும் போது வெளியானது. ஒரு டிஜி ககாமெராவை கையாளத் தெரிந்த சிறிது நாட்களிலேயே அதை வைத்து ஒரு படம் எடுத்தோம். அதற்கு எங்கள் கல்லூரி அளவில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதற்கடுத்து 'வேட்டையாடு விளையாடு' பாதிப்பில் நாங்கள் முயற்சித்த அடுத்த குறும்படம், 'தடயம்'. டெக்னிகலாக நாங்கள் இந்தப் படத்தில் சிறிது முன்னேற்றத்தைக் காட்டியிருந்தாலும், கதை விஷயத்தில் சின்ன குழப்பம் ஏற்பட்டதால் எங்களது முந்தய படத்தைப் போல இந்தப் படம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு பிறகு நாங்களும் வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்கள் என்று பிரிந்தாலும் எங்களது குறும்பட ஆர்வம் குறையவில்லை.

திடீரென்று ஆர்வம் மறுபடியும் தலைக்கேறி, இரண்டு வாரங்கள் தொலைபேசியிலேயே விவாதித்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் 'டெஸ்ட் ஷூட்' செய்து, கடந்த சுதந்திர தினத்தன்று பெங்களூரிலேயே, ஒரே நாளில் எனது SONY Handycamல் எடுத்து பின் 3 மாதங்களுக்கு மேல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடிட் செய்து, பின்னனி இசை சேர்த்து என்று ஒரு வழியாக இதோ, எங்களது அடுத்த குறும்படம் - 'தாத்திமா'. தாத்திமா என்றால் 'பாட்டி' என்று அர்த்தம். நான் எனது பாட்டியை அப்படித்தான் அழைத்தேன். என் தாயை விட என்னிடம் அன்பாயிருந்த எனது தாத்திமா இறந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் அவர்களது நினைவு மட்டும் என்னுள் இன்னும் நீங்காமல் இருக்கிறது. இந்தப் படம் அவர்களுக்கு சமர்ப்பணம்.



இந்த படம் வெளிவர முக்கிய காரணம் என் இனிய நண்பன், Sundar. தாத்திமாவின் ஒளி ஓவியன் இவன்தான் ('நந்தலாலா பாதிப்பு!'). படத்தொகுப்பும் இவனே. இவனை எனது கல்லூரி முதல் நாளிலிருந்து தெரியும். அன்றிலிருந்து இன்று வரை சுமார் ஏழு வருடங்கள் நான் செய்யும் அனைத்து டார்ச்சர்களையும் பொறுத்துக் கொண்டு, எனக்கு நல்லதொரு நண்பனாய், எல்லா விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்ளும் முதல் ஆளாய் இருக்கிறான். அவனுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. ஒரே ஒரு மெஸேஜ் மட்டும் தான், 'மச்சி, ஒன்னும் பிரச்சன இல்ல. நாம கலக்குறோம். அவ்ளோதான் :-)'

அடுத்ததாக நான் இதுவரை முகம் கூடப் பார்த்திராத, ஒரு வார்த்தைப் பேசிராத நண்பன் Jude Antony. சுந்தரின் அலுவலக நணபன். தாத்திமாவிற்கு உயிரோட்டத்தைக் கொடுத்த இசையமைப்பாளன். இசையின் மீது உயிரையே வைத்திருக்கும் இவர் எனது முதல் இசையமைப்பாளராய் கிடைத்தது எனக்குப் பெருமை. சுந்தரை நடுநிலைப்படுத்தி எனக்கு வேண்டியதைக் கொடுத்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அடுத்து எனதருமை நண்பர்களான Shanmugavelu மற்றும் Surender. தீவிர வேலை பளுவிற்கு இடையிலும் இந்தப் படத்திற்காக உழைத்த (முக்கியமாக சுரேந்தர்!) அவர்களது உழைப்பை சொல்லாமல் இந்தப் பதிவு நிறைவு பெறாது. அவர்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது. மெஸேஜ் மட்டும் தான் :-)


எனது மாமாவின் மொத்தக் குடும்பமும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. கிறுக்கன் ஏதோ விளையாடுகிறான் என்று உதாசீனப் படுத்தாமல், என்னை மதித்து நான் சொல்வதைச் செய்து தாத்திமாவைச் சாத்தியமாக்கிய அவர்களுக்கும் நன்றிகள் பல.

இதற்கு மேலும் இழுக்க வேண்டாம். எங்களது தாத்திமா கீழே. மறக்காமல் தங்களது விமர்சனங்ளை பின்னூட்டமிடவும். தங்களது பின்னூட்டம் தான் நாங்கள் வளர வேண்டுமா அல்லது இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்யும் :-)




பதிவுலக நண்பர்கள் பலர் குறும்பட ஆர்வலர்கள் என்பது தெரிந்த விஷயமே. எங்களது படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதனை பிரபலப்படுத்தும் முறைகளை தயவு செய்து பகிந்து கொள்ளவும்.

You Might Also Like

2 comments

  1. புதிய குறும்படத்திற்கு வாழ்த்துகள்.தொடர்ந்து முயற்சியுங்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி Mohan... வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...