விடுதலை போராட்டத்தின் ஆரம்பமாக, வணிகம் செய்ய வந்தவன் நாட்டை ஆழ்வதா? என்று தமிழ் நாட்டில் மருது பாண்டியர்கள் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துக் கொண்டிருந்த சமயம், முதன் முதன்முதலாக கேரளாவில் வெள்ளையர்களை கணிசமான அளவு துவம்சம் செய்த ஒரு குறுநில மன்னன் தான் கோட்டயத்தை ஆண்ட, கேரளவர்மபழசி ராஜா. அந்த வீரனின் வரலாறு, 50 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் கேரளாவின் மதிக்கத்தக்க இயக்குனரான T. ஹரிஹரன் இயக்கத்தில், மம்மூட்டி, சரத்குமார் நடிப்பில் வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் 'கோட்டயத்தை' திப்பு சுல்தான் கைப்பற்ற நினைத்த போது, பழசி ராஜாவின் குடும்பம்தான் வெள்ளையர்களுக்கு உதவியாய் இருந்திருக்கிறது. ஆனால், பின்னாட்களில் 'வரி' என்ற பெயரில் நரி வேலையை அவர்கள் காட்ட, இவர்கள் எதிர்க்க, பகை ஆரம்பமாகிறது. பழசியின் வளர்ச்சியால் பொறாமை கொள்ளும் அவர் மாமா குரும்பறநாடு ராஜாவீரவர்மா (திலகன்), பழசியின் பழைய கூட்டாளி பழயம்வீடன்சந்து (சுமன்) ஆகியோர் கம்பனி ஆட்களுடன் சேர்ந்து சதி வேலையைக் காட்ட, அரண்மனையையும், காலம் காலமாக சேர்த்து வைத்த செல்வங்களையும் இழக்கிறார் பழசி. இந்தத் தகராறில் கர்ப்பிணியான பழசியின் மனைவி கைதேரிமாக்கம் (கனிகா) கிழே விழுந்து அடிபட்டுவிட குழந்தை இறக்கிறது. செய்வதறியாமல் காத்திருக்கும் பழசிக்கு, அவரது வலது கையாக இருக்கும் படைத்தளபதி எடச்சேனகுங்கன் நாயர் (சரத்குமார்), குரிச்ய மலைவாழ் மக்களின் தலைவன், வீரன் தலக்கல்சந்து (மனோஜ்கேவிஜயன்) வை அறிமுகம் செய்து வைக்கிறார். சந்துவின் காதலியாக நீலி (பத்மப்ரியா) குரிச்ய பெண்படையின் தலைவி. இவர்களது உதவியுடன் 'ஒளிப்போர்' (மறைந்திருந்து தாக்கும் கொரில்லா தாக்குதல்) முறையில் வெள்ளையர்களை ஓட ஓட விரட்ட ஆரம்பிக்கிறார் பழசி. இடையில் சமாளிக்க முடியாமல், சமரச தூதை கம்பனி அனுப்ப, மக்கள் நலன் கருதி 'சரி, முயற்சி செய்து பார்க்கலாம் என்று பழசி ஒத்துக்கொள்ள, கொஞ்ச நாட்களிலேயே கம்பனி பழைய குருடியாக கதவைத் தட்ட ஆரம்பிக்க, மறுபடியும் வாளைக் கையில் எடுக்கிறார் பழசி. என் கத்தியின் மேல் வைத்த அன்பைக் கூட உன்னிடம் நான் காட்டவில்லையே என்று மனைவிடம் உருகும் போதும், சந்துவை தந்திரமாகச் சிறை பிடித்துத் தூக்கிலிட்ட வெள்ளையர்களை தனி ஆளாகப் போய் துவம்சம் செய்து உறுமும் போதும், தன் மக்கள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு கலங்கும் போதும்...கமலுக்குச் சவால் விட இவரைத் தவிர யாரால் முடியும் என்று தோன்றுகிறது. பழசியை தன் எஜமானனாக மட்டும் பார்க்காமல் தன் வளர்ப்புத் தந்தையாகப் பார்க்கும் தளபதி குங்கனாக சரத்குமார், இன்ட்ரோ முதல் கிளைமாக்ஸ் வரை, திரையில் ஒரு கம்பீரத்தைக் காட்டுகிறார். சரத்திற்கு 55 வயது என்று சத்தியம் செய்தால் தான் நம்ப முடியும். மம்மூட்டியுடன் போடும் வாள்சண்டையிலும், சுமனை கொல்லும் சண்டையிலும் பிண்ணியிருக்கிறார். எதிராளி வாளை வீசும் போது 'டக்' கென்று வெறும் கையால் அவன் கையைப் பிடித்து முறுக்கும் வேகம், அந்த ஆண்மை, சரத்திடம் மட்டுமே பார்க்க முடியும். பழசியின் பாவப்பட்ட மனைவியாக கனிகா. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகிறார். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பழசியை சிறைபிடிக்க தண்ணீர் கொடுப்பது போல் சுழர்வாளைக் கணவனுக்கு கொடுப்பதும், காட்டில் பணிப்பெண்கள் இருக்கமாட்டார்கள்; உன்னால் சமாளிக்க முடியாது என்று கணவன் சொல்லும் போது உங்களைப் பிரிந்து இருக்க முடியாது என்று கூடவே கிளம்பும் போதும் அசத்தி விடுகிறார். கேரள இளவரசியாக யப்பா... மிகவும் அழகாக இருக்கிறார். அதிலும் 'குன்றத்துக் கோயில்' பாடலில் அழகோ அழகு... நீலியாக வரும் பத்மப் பிரியாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். காட்டுவாசிப் பெண்ணாக கச்சிதமாக நடித்திருக்கிறார். வில்லம்பு விடும் வேகம், ஆண்களை எதிர்க்கும் வீரம் என்று நிறைவாகச் செய்கிறார். தவமாய்த் தவமிருந்து படத்திலும், பட்டியலிலும் பார்த்த பத்மப்ரியாவிற்கும் நீலிக்கும் நிறையவே வித்யாசங்கள். உடல் மெலிந்து கட்டளகியாகி இருக்கிறார். மிகச் சரியான பாத்திரத் தேர்வு. மனோஜ் கே விஜயன், சுமன், நெடுமுடி வேணு, அஜய் ரத்னம் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு. இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். ஒலிப்பதிவிலும் படம் சோடை போக வில்லை. ஆனால், சரித்திரப் படத்தில் சண்டைக் காட்சிகள் பார்க்க 'ரியலாக' இருக்க வேண்டும். பல இடங்களில் 'ரோப்' பயன்படுத்தியிருக்கிறார்கள். அது அப்பட்டமாகத் தெரிகிறது. மம்மூட்டிக்கு சோலோ பைட், அதே மாதிரி சரத்குமாருக்கும் சோலோ பைட் என்று, ஹீறோயிசம் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கேரளாவில் நடக்கும் கதை, அதுவும் சரித்திரப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால் 'வரலாறு' தெரியாத நமக்கு கதையோட்டத்தை புரிந்து கொள்ளவதில் சிரமம் இருக்கும். படம் மலையாளத்தில் எடுக்கப் பட்டாலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி யில் 'டப்' செய்யப் பட்டு வெளியாகியுள்ளது. இப்போதே கேரள அரசின் பல விருதுகளைக் குவிக்க ஆரம்பித்துள்ள இந்தப் படம் மலையாள சினிமா இதுவரை கண்டிராத பட்ஜெட், கால அவகாசத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், 3.20 மணிநேரம் ஓடும் இப்படத்தை தமிழுக்காக சற்றுக் குறைத்து, 2.40 மணிநேரப் படமாக வெளியிட்டுள்ளார்கள்.
பழசி ராஜாவின் DVD உரிமையை MOSERBAER நிறுவனம் வாங்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் DVD வெளிவரலாம். பழசி ராஜா - கேரள மருது...
(இந்தப் படத்திற்கு எந்தப் பதிவர்களிடமிருந்தும் அவ்வளவாக விமர்சனம் வந்ததாகத் தெரியவில்லை...ஏன்? )
எனக்கு மிகவும் பிடித்த, இந்தியாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இப்போது முழு நேர இயக்குனராக இருக்கும் இவர் இயக்கிய நவராசா எனது ஆல் டைம் பேவரிட். திருநங்கையாக மாறியிருக்கும் தன் சித்தப்பாவைத் தேடிப் போகும் சிறுமியின் கதை. அந்தப் படத்தைப் பற்றி இன்னொரு பதிவில் கண்டிப்பாக எழுத வேண்டும். இவரது இயக்கத்தில் வந்த படங்களான அசோகா, மல்லி, தஹான், சிவபுரம் என்று அனைத்தையுமே நான் பார்த்துள்ளேன். Prarambha - பில் கேட்ஸ் அறக்கட்டளை மூலம் இவர் இயக்கிய AIDS விழிப்புணர்வு குறும்படம். யுடியூபில் பிரபு தேவா, சரோஜா தேவி, ரம்யா நடித்த இந்தக் கன்னடக் குறும்படம் சப் டைட்டிலுடன் உள்ளது. சரி, இந்தப் படத்திற்கு வருவோம். 1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, இரவு 10 மணியளவில் சந்தன மாலையுடன் தன்னை நெருங்கிய பெண்ணைப் பார்த்து சிரித்தார் அந்த பிரமுகர். அவரது காலில் விழுந்து எழுந்த அந்தப் பெண்ணுடன் சேர்த்து அந்தப் பிரமுகர் மற்றும் அருகில் இருந்த சுமார் 14 பேர் உடல் சிதறி இறந்தனர். அந்தப் பெண் தேன்மொழிராஜரத்னம்என்றதாணுஎன்றகாயத்ரி. அந்தப் பிரமுகர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி. இப்போது வெகுவாகப் பிரபலமாகியிருக்கும் இடுப்பில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு நடத்தப்படும் தற்கொலைத தாக்குதலை முதன்முதலில் உலகிற்குக் காட்டி, உலுக்கிய இந்தியாவின் முதல் பெரும் துன்பியல் சம்பவம் இது (புலித் தலைவர் பிரபாகரன் இப்படித் தான் குறிப்பிடுவார்). டெரரிஸ்ட் கதைக்கு பின்னணி இந்தச் சம்பவம் தான். ஆனால் எதையும் நேரடியாகக் கூறாமல், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் (மணிரத்னத்தின் 'இருவர்' போல) ஒரு தீவிரவாத இயக்கம், அவர்களது போராட்டம், இயக்கத்திற்காக நடத்தப்படும் தற்கொலைத் தாக்குதல் என்று பொதுவாகச் சொன்ன படம். தன் அண்ணனின் இறப்பால் பாதிக்கப் பட்டு தீவிரவாதியான ஒரு பெண்ணின் கதை, தி டெரரிஸ்ட்.
போரில் ஆண்களை விட பன்மடங்கு வீரமும், வேகமும் காட்டியஅந்தப் பெண், தான் இருக்கும் போராளி இயக்கத்திற்காக நடத்தப்படும் முக்கிய வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாள். தயார் செய்யப் படுகிறாள். ஒரு உயிரைக் கொல்வதில் எந்த விதமான தயக்கமோ, வருத்தமோ, யோசனையோ செய்திராத அவளின் பெயர் மல்லி! முக்கியப் பிரமுகரைத் தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வது என்று முடிவானவுடன், இயக்கத்திலிருக்கும் சிறந்த பெண் போராளிகளை வரவழைத்து, பேசி, பின் அதில் மல்லியைத் தேர்ந்தெடுத்து, ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் அந்த ஊரிற்கு அழைத்துச் சென்று, ஊரே அரைக் கிறுக்கன் என்று சொல்லும் விவசாயம் செய்யும் ஒரு பெரியவர் வீட்டில், ஆராய்ச்சி மாணவி என்று பொய் சொல்லி தங்க வைக்கிறார்கள், இயக்கத்தினர். பிரமுகர் அந்த ஊரிற்கு வர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் மல்லிக்கு பயிற்சி ஆரம்பம் ஆகிறது. கூடவே அதிர்ச்சியும்! போர் முனையில் இறக்கும் தருவாயில் இருந்த, பின் இறந்த ஒரு வீரனால் தான் தாயாகி இருப்பது தெரியவருகிறது. சாவதற்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் அவளுக்கு வாழும் ஆசை வருகிறது. ஆண்களை மிஞ்சும் வீரம் இவளது பலமாகக் இயக்கத்தில் காட்டப்பட்டது. ஆனால் பெண்களுக்கே உரிய மென்மை, தாய்மை இறுதியில் இவள் கொள்கைக்கே சவாலாக வந்து நிற்கிறது. ஒவ்வொரு முறையும் தன் வயிற்றில் வெடிகுண்டைக் கட்டிப் பார்க்கும் போது, வாழ வேண்டும் என்கிற ஆசை வலுவடைவது அவளுக்குத் தெரிகிறது. இவள் தாயாகப் போவதைத் தெரிந்து கொண்ட, மகனை இழந்த அந்தப் பெரியவர், இவளை மகளாக நினைத்துக் காட்டும் அன்பில் மனம் கரைவதும், தன் லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற பயத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்வதும், மழையில் ஓடுவதும், நனைவதும் என்று நாள் நெருங்க நெருங்க காட்டப்படும் மல்லி முதலில் காட்டப்படும் மல்லியே அல்ல. சாகப் போகும் மனிதனின் மன வலியை மல்லியாக நடித்த AyeshaDharker அற்புதமாகக் காட்டியிருப்பார். வெள்ளை நிறத்தில் ஆடை உடுத்தி, கையில் மாலையுடன் பிரமுகர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு போய் அவரைப் பார்த்து புன்னகைத்து, காலில் விழுந்து எழுந்து... லிங்க் கொடுத்துள்ளேன்... பாருங்கள் |:-)
அடர்ந்த காட்டிற்குள்ளிருந்து ஆற்றைக் கடக்க உதவும் அந்த 'லோட்டஸ்' சிறுவனின் கதையும், சுவற்றில் மாட்டப் பட்டிருக்கும் படங்களில் உள்ள பெண்களைப் போல் மல்லி நின்று பார்ப்பதும், புது உடைகளை ஆசையாக முகர்ந்து பார்ப்பதும், இலையில் போட்ட உணவை பருக்கை விடாமல் ருசித்து உண்பதும் சூழ்நிலையால் தீவிரவாதியானவர்களின் வலிகளைப் பதிவு செய்யும் இடங்கள். மகனை இழந்த பெரியவர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவரது மனைவி, மகன் இருந்த இடத்தை இவள் நிரப்பி விட மாட்டாளா என்னும் ஏக்கம் என்று உறவின் வலிகளையும் பதிவு செய்கிறது இந்தப் படம். படத்தின் ஒளிப்பதிவு...யப்பப்பா...அதி அற்புதம். ஒரிஜினல் லைட்டிங்கில் மனுஷன் விளையாடியிருப்பார். வெளியே மழை பெய்து கொண்டிருக்கும் போது அதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் மல்லி திடீரென்று ஜன்னலை ஒரு குத்து விட்டு உடைக்க, உள்ளே சாரல் தெறிக்கும். அந்த பிரேம் சான்ஸே இல்லை... அவ்வளவு அழகு. அசைவின்றி படுத்துக் கிடக்கும் பெரியவரின் மனைவியை முதலில் சுவரில் மாட்டப் பட்டிருக்கும் போட்டோ என்று மல்லியுடன் சேர்ந்து நாமும் நினைக்கும் படி காட்டியிருப்பார். அதே போல் நீர்த்துளி, மழைத்துளி போன்ற சமாச்சாரங்கள் சந்தோஷ் சிவனிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அழகாக ஸ்லோ மோசனில் ஹைடெபனிசன் கேமரா வைத்து எடுத்திருப்பார்.
1999 ஆம் ஆண்டு வெறும் பதினைந்து நாட்களில் எடுக்கப் பட்ட இந்தப் படம், சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்துள்ளது . கெய்ரோ திரைப்பட விழாவில் (CairoInternationalfilmFestival) இந்தப் படத்தைப் பார்த்த JohnMalkovich (ஹாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்) அதை வாங்கி பின்பு உலகளவில் வெளியிட்டு உள்ளார். இதே 'தீமில்' (இடுப்பில் வெடி குண்டு கட்டிக் கொண்டு...) சமீபத்தில் வெளியான, உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பாலஸ்தீனியப் படமான ParadiseNowவிற்கு சற்றும் சளைக்காத இந்தப் படம், உலகின் சிறந்த சினிமா விமர்சகர்கில் ஒருவரான RogerEbert டின் சிறந்த பட விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தைப் பற்றி அவர் சொன்னது,
தி டெரரிஸ்ட் - சந்தோஷ் சிவன் காட்டிய மல்லி வாசம்...
டிஸ்கி: வெடிகுண்டு தயாரிக்கும் ஆளாக இந்தப் படத்தில் வரும் கொஞ்சம் முடிஉள்ள மொட்டைத் தலை, டோரா கண்ணாடி என்று ஒரு ஒல்லிபிச்சான் வருவான். அது வேறு யாரும் இல்லை; நம்ம பட்டியல்,பில்லா விஷ்ணுவர்தன் தான்...
உலகில் தமிழர் இல்லாத இடம் இல்லை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று எல்லா இடங்களுக்கும் இங்கு காணாததைத் தேடிக் கண்டுபிடித்து பிழைக்கப் போவது தமிழன் ஸ்டைல். போனவன் அங்கு நிம்மதியாக வாழ்கிறானா என்பது வேறு கதை. அது இப்போது வேண்டாம். தமிழன் எங்கும் இருக்கிறான் என்பது மட்டும் தான் இப்போது நான் சொல்ல வரும் விஷயம். அப்படி சிங்கப்பூரில் பிழைக்கப் போன ஒரு தமிழ் குடும்பத்தைப் பற்றிய ஒரு படம் தான் மைமேஜிக். இந்தப் படத்தை எடுத்தவர் தமிழரும் இல்லை, இந்தியரும் இல்லை. அவர் ஒரு சிங்கப்பூரார் ! சிங்கப்பூரின் பிரபல இயக்குனர் எரிக்கூவின் சமீபத்திய படம் தான் இது... முதலில் இந்த மாதிரி ஒரு படம் வந்ததே என்னையும் சேர்த்துப் பல பேருக்குத் தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் இந்தப் படத்தை தமிழ் படம் என்றே யாரும் சொல்ல வில்லை. எரிக் வூ வின் அடுத்த படம் என்ற அளவில் தான் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் 2009 ஆம் ஆண்டின் சிறந்த வேற்று மொழிப் படத்திற்கான ஆஸ்கார் விருதிற்கு சிங்கபூரின் சார்பில் இந்தப் படம் தான் சென்றது. சிறந்த ஐந்தில் வராததால் அப்போதும் தெரியவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான PalmeD'Or எனப்படும் கோல்டன்பால்ம் விருதிற்காக பரிந்துரைக்கப் பட்ட முதல் சிங்கபூர் திரைப்படமாக இது இருந்த போதும் வெளியே தெரியவில்லை. இந்தப் படத்தின் இயக்குனர் எரிக் கூ எனக்கு அறிமுகமானது(!) BeWithMe படத்தின் மூலம் தான். ஆனந்த விகடனில் உலகசினிமா என்ற தலைப்பில் எழுத்தாளர்செழியன் பீ வித் மீ படத்தைப் பற்றி எழுதியிருந்தார். அந்தப் படம் பார்த்த வகையில் எரிக் கூ எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். நிறைய படம் பார்க்கும் பழக்கமுள்ள நான், பார்த்த படங்களின் 'behind the scenes' பற்றி தெரிந்து கொள்ள, விக்கிபீடியா, imdb போன்ற வலை தளங்களை பயன்படுத்துவேன். அப்படி ஒரு முறை விக்கிபீடியாவில் 'தமிழ் சினிமா' என்று கொடுத்து எதையோ வாசித்துக் கொண்டிருந்த போது, மைமேஜிக் என்னும் லிங்க் கண்ணில் பட்டது. தட்டிப் பார்த்தால், எரிக் கூ படம்! மேலும் வாசித்துப் பார்த்தால் தமிழ் படம் !!
படத்தின் கதை இதுதான்
ஒரு குடிகார அப்பா. பேசுவதிலிருந்து பிழைக்க சிங்கப்பூர் வந்த தமிழன் என்பது தெரிகிறது. ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்யும் அவர் கிடைக்கும் பணத்தை எல்லாம் குடித்தே கழிக்கிறார். அந்த வீணாப் போன அப்பாவிற்கு ஒரு மகன். குடித்து விட்டு நடு வீட்டில் வாந்தி எடுக்கும் அப்பாவை கழுவி விடுவது, மற்ற சிறுவர்களுக்கு வீட்டுப் பாடம் செய்து கொடுத்து சம்பாதித்து, அதில் அப்பனுக்கும் சேர்த்து நூடுல்ஸ் வாங்கி வருவது என்று அவ்வபோது அப்பாவைத் திட்டிக் கொண்டே, அம்மாவை நினைத்து அழுபவன் அவன். தன் மகன் தன்னை வெறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தனக்குத் தெரிந்த மேஜிக் வித்தைகளின் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் அந்த அப்பா. தான் வேலை செய்யும் ஹோட்டல் மானேஜருக்கு சின்ன சின்ன விதைகள் செய்து காட்டி, பணம் சேர்க்கிறார். அதீத வலி தாங்கும் வலிமை உடைய அந்த அப்பாவை வைத்து பணம் பண்ண ஆசைப் படும் அந்த மேனேஜர், ஹோட்டலில் இவரது மேஜிக் சாகசங்களை காட்சிப் படுத்துகிறார். இதைப் பார்க்கும் ஒரு பணக் கார முதலாளி "உன்னால் எவ்வளவு வலி தாங்க முடியும்" என்று இவரைப் பார்த்துக் கேட்க, "எவ்வளவு வேண்டுமானாலும்" என்று இவர் பதில் சொல்கிறார். மனைவி தன்னை விட்டுப் பிரிந்த சோகத்தில் இந்த அப்பாவால், குடிப்பதை நிறுத்த முடியவில்லை. குடி போதையில் ஒரு நாள் தன் மகனிடம் தான் ஒரு பிரபல மேஜிக் கலைஞன் என்றும், அவனுக்கும் மேஜிக் சொல்லித் தருவதாகவும் சொல்கிறார். முதலில் கோபமாகப் படுக்கப் போகும் மகன், அப்பா செய்யும் வித்தையைப் பார்த்து, நெருங்கி வருகிறான், சில வித்தைகளையும் கற்றுக்கொள்கிறான். ஹோட்டலில் செய்யும் வித்தையால் கொஞ்சம் பணம் சேர்ந்தாலும், இந்தியாவிற்கு திரும்பும் அளவிற்கு பணம் சேரவில்லை. அதனால் கிறுக்கனான அந்த முதலாளிக்காக உயிரைப் பணயம் வைக்கும் சவாலிற்கு அப்பா தயாராகிறார். கிளைமாக்ஸ்... கடைசியில் லிங்க் கொடுத்துள்ளேன். நீங்களே பாருங்கள். அப்போதுதான் அந்த வலியை உணர முடியும்.
இப்போது வரும் தமிழ், ஆங்கிலப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த படம் டெக்னிக்கல் விஷயத்தில் பின்தங்கி இருந்தாலும், அது தரும் உணர்வு காலம் கடந்தது. தினம் இரவு குடித்து விட்டு வரும் அப்பாவை பார்த்து பார்த்து வெறுத்து போய் தன்னை அனாதையாக விட்டுப் போன தன் தாயையும், இறந்த பாட்டியையும் நினைத்து அழும் மகன், கனெக்சன் கட்டாகிப் போன போனில் தினம் தன் மனைவிக்கு போன் செய்து "சீக்கிரம் வந்திடு" என்று அழும் அப்பா என்று படம் நெடுக ஒரு சோகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த 'அம்மா/மனைவி' என்ன ஆனாள் என்று தெரியும் போது நமக்கும் அந்த தொற்றிக் கொள்கிறது...
தனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து "இந்த உலகம் ஒரு மோசமான உலகம். நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்" என்று மகனுக்கு அந்தத் தந்தை சொல்லிக் கொடுப்பது நம் மண்டையிலும் ஏறுகிறது. கடைசி காட்சியில் தன் அப்பாவையும் அம்மாவையும் ஒரே மேடையில் சேர்த்து இந்த மகன் பார்க்க, படம் முடியும் இடம்... சொன்னால் புரியாது...
எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியான ஒரு சூழலில் பார்த்தால் இந்தப் படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
மை மேஜிக் - சிங்கப்பூரில் ஒரு தமிழ்க் குடும்பம். படத்தின் டிரைலர்...
படத்தை தரவிறக்கம் செய்ய... http://rapidshare.com/files/270490253/MY_MAGIC.part1.rar http://rapidshare.com/files/270530830/MY_MAGIC.part2.rar http://rapidshare.com/files/270569900/MY_MAGIC.part3.rar http://rapidshare.com/files/270618065/MY_MAGIC.part4.rar