2014 ஹிந்தி திரைப்படங்கள் ஒரு பார்வை
6:44:00 AM
எனக்கு ஹிந்தி புரியாது. எனவே ஆங்கில
சப்-டைட்டில்களுடன் படம் வந்த பிறகு தான் படம் பார்ப்பேன். அதுவும் Critically
Acclaimed படங்கள் மட்டும் தான். எனவே நான் பார்க்கும் படங்கள் அனைத்துமே பலர் பரிந்துரைத்த
ஓரளவிற்கு நல்ல, ஒருமுறையாவது பார்க்கக்கூடிய படங்களாகத் தான் இருக்கும். கொரிய படங்களில்
கூட நான் இவ்வளவு செலெக்டிவாக இருப்பது கிடையாது. ஏனென்றே தெரியவில்லை ஹிந்தி எனக்கு
செட் ஆவதே இல்லை. இந்த வருடங்கள் நான் பார்த்த படங்கள் எதுவும் ஏமாற்றவில்லை. மேலும்
PK மற்றும் Ugly இல்லாமல் ஒரு லிஸ்ட் கொடுக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்த படங்களை நான் பார்க்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அவை இல்லாமல் ஒரு லிஸ்டைக்
கொடுத்திருக்கிறேன்.
MARY KOM
இந்தியாவின் பெருமையை படமாக்கிய ஒரே
காரணத்திற்காகத் தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். Priyanka Chopra அசத்தியிருக்கிறார்.
லொக்கேஷன்கள் அருமை. பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அவையெல்லாம் கோர்வையாக
இல்லை. ரெண்டு சீன், கட், ரெண்டு மேட்ச் கட், கல்யாணம் கட், மீண்டும் பயிற்சி என்று
“அப்பாடா எல்லாத்தையும் ஒருவழியா சொல்லியாச்சு” என்பது போல் முடித்திருக்கிறார்கள்.
திரைக்கதை மஹா சொதப்பல். ஒரு முறை PC நடிப்பிற்காக மட்டும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
HASEE TOH PHASEE
இந்தப் படத்தின் மேல் பெரிய ஆர்வமெல்லாம்
இல்லை. ஆனால் பலர் படம் நன்றாக இருந்தது என்ற சொன்னதால் சமீபத்தில் தான் பார்த்தேன்.
கதையென்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் படம் நன்றாக இருந்தது. Parineeti Chopra
வின் கேரக்டரைசேஷன், நடிப்பு அற்புதம். முதல் பாதியில் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்
என்பதற்கு சரியான, கன்வின்சிங்கான விளக்கம் இல்லை அல்லது எனக்குப் புரியவில்லை. ஆனால்
நன்றாக இருந்தது. Desperate Boyfriend ஆக Sidharth Malhotra செம பொருத்தம். ஒரு கல்யாண
வீடு, அதைச் சுற்றி நடக்கும் கதை – இந்தத் தீம் இல் இன்னும் எத்தைனைப் படங்கள் வர போகிறதோ
தெரியவில்லை. பெரும்பாலும் அந்தப் படங்கள் நன்றாக இருந்து விடுவதால் பிரச்சனை இல்லை.
2 STATES
இதெல்லாம் ஒரு படமா என்று சிலர் காறித்துப்பலாம்.
ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. Alia Bhatt, Arjun Kapoor இருவருமே மிக அழகாக அந்தக்
கதாப்பாத்திரங்களில் பொருந்திப் போனார்கள். இவர்களுக்கு அடுத்து நான் ரசித்தது Ronit
Roy + Amrita Singh ஜோடியைத் தான். அருமை. பல நாட்களுக்குப் பிறகு ரேவதியைப் பார்த்தது
மகிழ்ச்சி. ஹிந்திப் படத்தில் தமிழ் அம்மாவாக நடிக்கிறார் ஆனால் தமிழ் படங்களில் தலைகாட்ட
மறுக்கிறார். கடைசியாக ஒஸ்தி யில் பார்த்தது. என்ன பிரச்சனையோ தெரியவில்லை. படத்தைப்
பொறுத்தவரை, புத்தகத்தை விட Short & Sweet ஆக ஜாலியாக, நன்றாக இருந்தது.
FILMISTAN
பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும்
ஒரு சினிமா கிறுக்கனின் கதை. நாடி, நரம்பு, ரத்தம், சதை அனைத்திலும் நடிப்பு, சினிமா
ஊறிய ‘Sunny’ ஆக Sharib Hashmi என்பவர் நடித்திருக்கிறார். செம்ம ஆக்டிங். மொழி தெரியாத
நானே இந்தப் படத்தை ரசித்தேன் என்னும் பொழுது, 90களின் ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு
இந்தப் படம் நல்ல விருந்தாக இருக்கும். நமக்கும் நம் பக்கத்து வீட்டுக்காரர்களையும்
இணைக்கும் முக்கிய விஷயமாக சினிமா இருக்கிறது என்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அன்பைத் தவிர எதுவும் தெரியாத வெள்ளந்தியாக Sunny கதாப்பாத்திரத்தை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.
பார்க்க வேண்டிய படம்.
MARDAANI
குதூகலமான ரோல்களிலேயே பார்த்துப் பழகிப்
போன ராணி முகர்ஜியை ஆக்ஷன் ஹீரோயினாகப் பார்க்க நன்றாகவே இருந்தது. வெறுமனே ராணியை
மட்டும் சுற்றி வராமல் வித்தியாசமான வில்லன், Sex trafficking என்று மொத்தமாகவே படம்
நன்றாக, ஒரிஜினலாக இருந்தது. சந்தேகமே இல்லாமல் நல்ல படம், அவசியம் பார்க்க வேண்டிய
படம்.
HIGHWAY
Imtiaz Ali இதற்கு முன் இயக்கிய Jab
We Met எனது ஆல்-டைம்-பேவரிட் படம். அதே பாணியில் ஒரு பெண்ணின் பயணத்தைப் பற்றிய கதை
என்பதாலே Highway மீது எனக்கு அதீத எதிர்ப்பார்ப்பு இருந்தது. Alia Bhatt அவ்வளவு அழகு,
அவ்வளவு பொருத்தம். படம் வெகுவாக நம் ‘மே மாதம்’ படத்தை நினைவுபடுத்தியது என்றாலும்
இரண்டும் சூப்பர். இந்தப் படத்தை எப்படி எழுதியிருப்பார்கள் என்று ஒரே யோசனையாக இருக்கிறது.
வண்டி செல்கிறது, ஓர் இடத்தில் நிற்கிறது, பேசுகிறார்கள், மீண்டும் வண்டி நகர்கிறது,
ஓரிடத்திற்கு வந்திறங்குகிறார்கள், பேசுகிறார்கள் – இதுவே ரிபீட் மோடில் தொடர்கிறது.
போரடிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம். காதல், காமம், நட்பு, பரிவு அனைத்தையும் தாண்டி
‘அன்பு’ என்ற ஒற்றைப் புள்ளியில் எதிரெதிர் துருவங்களான இருவரும் சேர்வதைக் காட்டிய
விதம் அருமை. பாடல்கள் சூப்பர் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை, கிளைமாக்ஸ் சொல்லேஷன்கள்
சூப்பரோ சூப்பர்.
AANKHON DEKHI
சமீபத்தில் தான் இந்தப் படத்தையும்
பார்த்தேன். ஹிந்தியில் ஒர் உலக சினிமா. 60 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் நடுத்தர
வயது குடும்பஸ்தர் ஒருவர் தான் ஹீரோ. அந்தக் கதாப்பாத்திரத்தின் பெயர் Bauji. கூட்டுக்குடும்பமாக
நகர்புறத்தை விட்டு வெளியே ஒண்டிக்குடித்தனத்தில் வாழும் டெல்லிவாசி. ஒரு சிறிய சம்பவத்திற்குப்
பிறகு திடீரென்று “இனி நானே என் கண்ணால் பார்த்து உணரும் விஷயங்களைத் தவிர வேறு எதையும்
நம்பமட்டேன்” என்ற முடிவை எடுத்து அதன்படியே நடக்கத் தொடங்குகிறார். பிராக்டிகலாக இப்படி
ஒருவரால் வாழ முடியாது என்ற காரணத்தினால் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வருகிறது.
ஆனாலும் தன் வாழ்க்கையை ஒரு அர்த்தத்துடன் வாழ்வதை நினைத்து மகிழ்ச்சியாகவே இருக்கிறார்.
இவரது தியரிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்று இவரையும் சில இந்திய மரபுப் படி பின்பற்றத்
தொடங்குகிறார்கள். வீட்டில் தன் காதலைச் சொல்லும் இளம்பெண்ணில் தொடங்கி அந்தப் பெண்ணிற்கு
அதே பையனுடன் திருமணம் நடப்பதோடு படம் முடிகிறது. அப்பா, அம்மா, மகள், மகன், சித்தப்பா,
சித்தி, அவரது மக்கள், கோவில் ஆள், வாத்தியார், காதலன், அவனது பெற்றோர், உடன்வேலை செய்வோர்,
நண்பர்கள், பக்தர்கள் என்று ஒவ்வொரு கதாப்பாத்திரமுமே கனக்கச்சிதம். மிக மிக அருமையான
இசை, கச்சிதமான இயற்கையான ஒளிப்பதிவு, ஒரிஜினல் செட் என்று அனைத்துமே பிரமாதம். ரசித்து
ரசித்து படத்தைப் பார்த்தேன். படம் முடிந்த பிறகு இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கக்கூடாதா
என்று ஏங்கினேன். நல்ல படம். அவசியம் பாருங்கள்.
FINDING FANNY
சாதாரண படம். ஆனால் மனம் முழுவதும்
நிறைந்து கிடக்கிறது. ஏதோ இத்தாலிய காதல் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு. Deepika
Padukone வின் கொள்ளை அழகில் அப்படியே சொக்கிப் போய் விட்டேன். படம் நெடுக அந்த அழகு
முகத்தில் ஒட்டி இருக்கும் மென்சோகம் அபாரம். Naseeruddin Shah – என்னா மனுஷன், என்னா
ஆக்டங்! Simply Superb. ‘மீண்டும் மீண்டும் வா’ Dimple Kapadia வா இது. அவரும் செம.
அவரை உருகி உருகிப் பின்தொடரும் Pankaj Kapur ஆக்டிங்கும் சூப்பர். இவர்களுடன் கம்பேர்
செய்யும் போது தண்டமாக Arjun Kapoor. பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்துமே
சூப்பர். Peter Jackson படத்தில் Hobbit கள் வாழும் Shire போலிருக்கும் அந்த சின்ன
கோவா ஊரும் சூப்பர். படத்தில் ஆங்காங்கே ஹியூமர் இருந்தாலும் அவையனைத்திலுமே ஒரு மென்சோகம்
கலந்திருக்கும். நிச்சயம் மறக்க முடியாத அருமையான படம். ஹிந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில்
பார்த்தால் இன்னும் கூடுதலாக ரசிக்கலாம்.
HAIDER
ஊர் உலகமே ஆஹா ஓஹோ என்று சொன்ன இந்தப்
படத்தைக் காண வழியில்லாமல் காத்திருந்து காத்திருந்து நேற்று தான் பார்த்தேன். இந்தப்
படம் பார்க்காமல் இந்தப் பதிவையே எழுதக் கூடாது என்பதில் மிகக்கராராக இருந்தேன். மூன்று
மணிநேரம் ஓடினாலும் படம் என்னை ஏமாற்றவில்லை. எனக்கு Hamlet கதை தெரியாது. டிரைலரைப்
பார்த்துவிட்டு காஷ்மீர் – தீவிரவாதம் – ஆக்ஷன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்
படம் அப்படியே வேறு flavor இல் இருந்தது. இவ்வளவு அழகான காஷ்மீரில் இவ்வளவு பிரச்சனைகளா
என்று நினைக்கும்போதே மனம் வாடுகிறது. Shahid Kapoor உச்சகட்ட நடிப்பு. நீண்ட நாட்களுக்குப்
பிறகு தபு – Twisted ஆன ஒரு கதாப்பாத்திரத்தில் அவ்வளவு இயல்பாகப் பொருந்திப் போய்
நடித்திருக்கிறார். Kay Kay மேனனை ஏன் ஹிந்திக்காரர்கள் கொண்டுகிறார்கள் என்பது இது
போன்ற படங்களைப் பார்க்கும் போது தான் தெரிகிறது. Shraddha Kapoor – அழகு + நடிப்பு
= சூப்பர்! சிறிது நேரமே வந்தாலும் Irrfan Khan அசத்தல். ஒளிப்பதிவிற்காகவே இந்தப்
படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாமென்றிருக்கிறேன். Vishal Bhardwaj இயக்கிய படங்களில்
Kaminey மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
உடனடியாக Omkara, Maqbool இரண்டையும் பார்த்து விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
சமீபத்தில், உலக அளவில் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று Haider. நன்றி Vishal
Bhardwaj.
QUEEN
எத்தனை படங்கள் வந்தாலும் Queen ற்கு
அவை ஈடாகாது. English Vingilish படத்தையே கொஞ்சம் வேறு மாதிரி சொன்னால் இந்தப் படம்
வந்துவிடும். ஆனால் அதைவிட இது பலமடங்கு சூப்பர் (அதுவும் சந்தேகமில்லாமல் நல்ல படம்).
Kangana Ranaut – இவரை அவ்வளவு பெரிய நடிகையாகவெல்லாம் நான் யோசித்துக்கூடப்பார்க்கவில்லை.
தமிழில் தாம் தூமில் சுமாரான நடிப்பு. ஆனால் Fashion படத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.
இந்த இரண்டு படங்களை வைத்துத்தான் இவரை எனக்கு அடையாளம் தெரியும். இவை தவிர பெரும்பாலான
படப்போஸ்டர்கள் + பாடல்களில் இவரைக் கண்டு, மேலும் ஒரு சாதாரண ஹிந்தி கவர்ச்கிக்கன்னி
என்ற பிம்பமே இருந்தது. ஆனால் Queen மொத்த பிம்பத்தையும் சுக்குநூறாக்கிவிட்டது. என்னா
சூப்பர் நடிப்பு, expressions, வசன உச்சரிப்பு, டான்ஸ் – எல்லாமே டாப் கிளாஸ். ரசித்து
ரசித்து இந்தப் படத்தைப் பார்த்தேன். Baby Day Out (ஒரு உதாரணத்திற்கு) போல நிறைய நிறைய
விஷயங்கள் + அனுபவங்களைச் சொல்லியிருக்கலாம் என்றாலும் இதுவே சூப்பர். ஹிந்தி சந்தோஷ்
நாராயணன் என்று சொல்லப்படும் Amit Trivedi இசை மிக அற்புதம். Paris பாரில் குடித்துவிட்டு
Raani ஆடும் ஆட்டம், செய்யும் சேட்டைகள் அந்தப் பாடல், இசை – சூப்பரோ சூப்பர். ஒரு
சின்ன நெருடல் கூட இல்லாமல் ஒரு படம் நம்மை திருப்திபடுத்த வேண்டும் – அப்படி இந்த
வருடம் நான் பார்த்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று.
இந்த 10 படங்களைத் தவிர Indie படங்களை
நிச்சயம் ஆதரித்தே ஆக வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த வருடம் திரையரங்கில் சென்று பார்த்த
ஒரே படம் ‘Sulemani Keeda’. மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இந்தப் படத்தை தியேட்டரில்
சென்று பார்க்க நான் முடிவு செய்தேன் என்று இன்னமும் தெரியவில்லை. PVR Director’s
Rare பிரிவில் திரையிடுவதால் ஆங்கில சப்டைடில்கள் இருக்கும் என்று நினைத்தேன் – இல்லை.
படத்தில் பேசிக்கொண்டே இருந்தார்கள். பாலிவுட்டில் கால்பதிக்க நினைக்கும் இரண்டு எழுத்தாளர்
இளைஞர்களின் கதை. படம் முழுவதும் Cliché என்ற வார்த்தை ஒட்டப்பட்டிருக்கிறது. மொழி
புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, தியேட்டரில் இருந்த மற்றவர்களுக்கும்
வெகுசில இடங்களில் மட்டும் தான் சிரிப்பு வந்தது. சற்றே பெரிய Amateur குறும்படத்தைப்
பார்த்த உணர்வு. Realistic ஆக Independent படங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
என்று நினைத்து எடுத்திருப்பார்கள் போல. ஸாரி, படம் எனக்குப் புடிக்கல, புரிஞ்சு பாக்க
எதுவும் இருந்த மாதிரியும் தெர்ல. படம் ரொம்ப ரொம்ப சுமார் தான்.
இவை தவிர இந்த ஆண்டு வெளியான படங்களில்
‘நல்ல படங்கள்’ என்று பலர் சொல்லக்கேட்டு நான் பார்க்கலாம் என்று எடுத்துவைத்திருக்கும்
படங்கள்.
Lootera
Dedh Ishqiya
Kya Dilli Kya Lahore
City Lights
Hawaa Hawaai
Miss Lovely
Manjunath
Lakshmi
Humpty Sharma Ki Dulhania
Khoobsurat
இந்தப் படங்களைப் பற்றிய உங்களது கருத்துக்களை
மறக்காமல் சொல்லுங்கள். காலவிரயத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இவை தவிர வேறு
ஏதாவது நல்ல படங்கள் இருந்தாலும் சொல்லவும், மறக்காமல் தெரிவிக்கவும்.
வேறு எந்த மொழியிலும் இல்லாத வகையில்
இந்த ஆண்டு ஹிந்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி, அவை
ரசிகர்களையும் திருதிபடுத்தி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்
பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பெயரளவில் வசூல் சக்ரவ்ர்த்திகளாக இருக்கும்
படா நடிகர்களின் படங்கள் அனைத்துமே மண்ணைக்கவ்வியதில் ஆனந்தம். மேலும் காமெடி என்ற
பெயரில் வெளியாகும் மிகக்கேவலமான படங்களை அனைத்தையும் ஹிந்தி ரசிகர்கள் ஓட ஓட விரட்டியதைப்
பார்க்கும் பொழும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உலக அளவில் அதிக படங்களைக் கொடுக்கும்
பாலிவுட்டிலிருந்து மிகச் சொற்பமான நல்ல படங்களே வருகிறது. அந்த காரணத்தினாலேயே ஹிந்தி
படங்கள் என்றாலே நான் ஒதுங்கிவிடுவேன். என்னைப் போலவே இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வெளிநாட்டவரை விடுங்கள், ஹிந்தி தெரியாத மற்ற சில மாநிலத்தவரை முதலில் பாலிவுட் ஈர்க்கவேண்டும்.
நல்ல படங்கள் வெளிவர வேண்டும். கோடிகளைக் குறிவைக்காமல் ரசனையைக் குறிவைத்து நல்ல படங்கள்
வெளிவர வேண்டும்.
2014 தமிழ் சினிமா - எனக்குப் பிடித்த
10 படங்கள்
முதல் 5 படங்களை வெகுசுலபமாகத் தேர்ந்தெடுத்து
விட்டேன். ஆனால் அடுத்த ஐந்தை தேர்தெடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இந்த
வருடம் வெளியான மற்ற படங்களுக்கு இவை பரவாயில்லை என்பதாலேயே இந்த இடம்.
யாமிருக்க பயமே
‘பேய் காமெடி’ என்ற பெயரில் இந்த ஒரு
படம் ஹிட் ஆனாலும் ஆனது தமிழில் வதவதவென்று பல பேய்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் காவு
வாங்கியது. ஆனால் அவை எதுவுமே இதன் அருகில் கூட வர முடியாது என்பதே உண்மை. பத்து பேர்
சேர்ந்து எழுதியது போல கலவையான, புதிதான டிராக்குகள் படம் முழுக்க வந்து வயிறைப் பதம்
பார்த்தது. “பாஸ்… உங்க மேல யாரோ குத்த வச்சு ஒக்காந்திருக்காங்க” – Laugh Riot. சிறந்த
படமெல்லாம் இல்லை ஆனால் சிரிப்பு கியாரண்டி.
கயல்
பலருக்கு ‘கயல்’ படம் பிடிக்கவில்லை.
ஆனால் எனக்குப் பிடித்திருந்தது. கும்கிக்கு இந்தப் படம் பரவாயில்லை என்றே தோன்றியது.
காரணம் தெரியவில்லை. ஆனால் அடுத்த படத்திலும் பிரபு சாலமன் காதலைத் தான் காட்டுவார்
என்றால் கட்டாயம் அந்தப் படம் எனக்கும் அது பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. காதலும்
திகட்டும். அதுவும் ஒரே இயக்குனரிடமிருந்து திரும்பத் திரும்ப வந்தால் கட்டாயம் திகட்டும்.
எனது விமர்சனம் -
மான்கராத்தே
படத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் தியேட்டர்
விட்டு வெளியே வரும்பொழுது பரம் திருப்தி. சிவகார்த்திகேயனைத் தவிர இந்தப் படத்தில்
வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதன் அவசியமும் இல்லை. அனிருத்தின்
பின்னணி இசை படத்திற்கு அசுர பலம். ஹிந்திப்பட தரத்தில் இருந்த ஒளிப்பதிவு அபாரம்.
ஹன்சிகாவிற்கு இது மற்றுமொரு படம். அவ்வளவு தான், டார்லிங்கு டம்பக்கு பாடல் மட்டுமே
இவர் அந்த படத்தில் நடித்தார் என்பதை எனக்கு நினைவுபடுத்துகிறது.
காவியத் தலைவன்
தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்த
பொழுது என்னுள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது பள்ளி / கல்லூரி நாட்களை நினைத்துக்கொண்டே
படம் பார்த்தது அலாதி அனுபவம். ஆனால் இரண்டாம் பாதி கற்பனை வறட்சி. சுலபமாக முதல்
5 படங்களில் ஒன்றாக இடம் பெற வேண்டியது மிகவும் வீக்கான திரைக்கதையால் இரண்டு இடம்
இறங்கிவிட்டிருக்கிறது. ஆனாலும் விமர்சனங்களைத் தாண்டி படம் எனக்குப் பிடித்திருந்தது.
எனது விமர்சனம் -
வேலையில்லா பட்டதாரி
படத்தில் சுத்தமாக ஒன்றுமே இல்லை. காலம்காலமாக
தமிழ் சினிமாவில் நாம் பார்த்த அதே கதை. தனுஷ் இதே போன்ற வேடத்தில் இதற்கு முன்பு
101 படங்களில் நடித்திருக்கிறார். இது 102 ஆவது படம். ஆனாலும் நன்றாக இருந்தது. முதல்
பாதி செம்ம ஜாலி. வழக்கம்போல சரண்யா மேடம் செம்ம ஆக்டிங். மான்கராத்தே போலவே ஹீரோ தனுஷ்
+ இசையமைப்பாளர் அனிருத் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. மற்றபடி ‘இன்ஜினியர்கள்
கொண்டாடும் படம்’ என்று போஸ்டர் அடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
எனது விமர்சனம் -
கத்தி
திருட்டுக்கதை குற்றச்சாட்டைத் தள்ளி
வைத்து விட்டுப் பார்த்தால் கத்தியில் கொண்டாட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. விஜய்
படம் ஒன்றிற்குச் சென்று நான் கண்கலங்கி வெளியே வருவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
அப்பட்டக்காப்பியான காயின் ஃபைட் தியேட்டரில் பார்க்க அவ்வளவு சூப்பராக இருந்த்து.
குழாயில் உட்கார்ந்திருக்கும் விஜய் & கோ வைக் காட்டியவுடன் தியேட்டரே அதிரும்
விதமாக கைத்தட்டி விசிலடித்தவர்களில் நானும் அனிருத் இந்தப் படத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
எது எப்படியிருந்தாலும் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது
உண்மையென்றால் ரசிகர்களை ஏமாற்றிய பாவம் ஒருநாள் அவரையும் சூளும், கீழே தள்ளும். இதைச்
தமிழ் சினிமா ரசிகன் ஒருவனது சாபம் என்று எடுத்துக்கொள்ளலாம். போலிக்குற்றச்சாட்டு
என்றால் எந்தப் பழிபாவத்திற்கும் அவர் அஞ்சவேண்டியதில்லை. காலம் ‘கோபி’க்கு பதில் சொல்லும்.
எனது விமர்சனம் –
ஜிகர்தண்டா
மிக மிக அதிகமாக எதிர்பார்த்துவிட்டதாலோ
என்னவோ இரண்டாம் பாதியை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும்
இதுவரை மூன்று நான்கு முறை படத்த்தை முழுதாகப் பார்த்துவிட்டேன். இந்த வருடத்தின் சிறந்த
பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டையும் கொண்ட படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா புத்திசாலித்தனமாக
படங்களைத் தேர்வு செய்தால் இந்தப் படம் கொடுத்த புகழை விட பன்மடங்கு உயரத்திற்கு வரலாம்.
தமிழ் சினிமா ஆவலுடன் எதிர்பார்க்கு இளம் தலைமுறை இயக்குனர்களில் முதலில் வருபவர் இயக்குனர்
கார்த்திக் சுப்பாராஜ் தான். தீவிர ‘தலைவர்’ வெறியரான இவர், அவர் வயதுக்கு ஏற்றார்போன்ற
கதை ஒன்றை எழுதி இயக்க வேண்டும் என்பது என் ஆசை.
எனது விமர்சனம் –
மெட்ராஸ்
இந்த லிஸ்டில் உள்ள மற்ற படங்களைப்
போல இந்தப் படம் என் நினைவில் தங்கிவிடவில்லை. ஆனால் தியேட்டரில் முதல் முறை படம் பார்க்கும்
பொழுது அவ்வளவு திருப்தியாக இருந்தது. ஆல் ஏரியாவும் அற்புதம். சந்தோஷ் நாராயணின் பாடல்கள்
என்னை அவ்வளவாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை சூப்பர். சுவர் அரசியல், அதைச்
சுற்றி நடக்கும் நார்த் மெட்ராஸ் கதை, கார்த்தி மற்றும் பிற கதாப்பாத்திரங்களின் மிக
அருமையான நடிப்பு எல்லாமே சூப்பர்.
எனது விமர்சனம் –
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
இந்தப் படத்தின் இரண்டாம் பாதி எனக்குப்
பிடிக்கவில்லை. ஆனால் முதல் பாதி நான் ஆசையாக ஒரே ஒரு மாதம் வாழ்ந்து பார்த்த வாழ்க்கை.
இந்த வருடம் வெளியான படங்களில் இருமுறை தியேட்டருக்குச் சென்று பார்த்த ஒரே படம். இருமுறை
என்னுள் எழுந்த மகிழ்ச்சி வெள்ளத்தை விவரிக்க வார்த்தை இல்லை. இரண்டாம் பாதியும் சளைத்ததல்ல
என்றாலும், இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம். மற்றபடி மறக்க முடியாத ஒரு
படத்தைக் கொடுத்த இயக்குனர் பார்த்திபனுக்கு கோடி நன்றிகள். மேலே நீங்கள் பார்ப்பது
படத்தைப் பார்த்துவிட்டு நான் ‘போஸ்ட்’ செய்த போஸ்டர்.
பிசாசு
நிறைய சொல்லிவிட்டேன். மீண்டும் ஏதாவது
சொல்ல வேண்டுமானால் - நன்றி மிஷ்கின்.
எனது விமர்சனம்.
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...