சிறுகதை - அத்தியாயம் #1

5:50:00 AM

கண்களைக் குறுக்கிப் பார்த்தேன். கடிகாரத்தில் மணி இரண்டைத் தாண்டியிருந்தது.

எழுந்து போய் தண்ணீர் குடிக்கலாம் என்று தோன்றியது.

தண்ணீர் குடிக்க லைட் போட வேண்டும், குடித்துவிட்டு பாத்ரூம் போக வேண்டுமென்றாலும் லைட் போட வேண்டும். அப்பா அம்மா இருவரில் ஒருவர் விழித்துக் கொண்டாலும் கஷ்டம்.

புரண்டு படுத்தேன். ஜன்னல் வழியாக வெளியே அமைதியாகத் தெரிந்தது எங்கள் தெரு. ஊளையிடும் நாய்கள்கூட உறங்கியிருந்தன. எனக்குத்தான் தூக்கம் வரவில்லை.

இன்று முதல் தடவை அல்ல. பெங்களூரைக் காலி செய்துகொண்டு வந்ததிலிருந்தே தூக்கம் ஒரு பிரச்சனையாகத் தான் இருக்கிறது. புது இடம் அதனால் தான் தூக்கம் வரவில்லை - என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். பிறந்ததே இந்த ஊரில்தான் என்பது வேறு விஷயம். வந்து ஒரு மாதமாகப் போகிறது. இன்னும் அதே பிரச்சனை. ஒருவேளை Insomnia வாக இருக்குமோ? Insomnia என்பது தூக்கம் சுத்தமாக வராமல் கொட்டக் கொட்ட விழித்திருப்பது. Machinist படத்தில் Christian Bale உட்கார்ந்திருப்பானே அதுபோல. அவனாவது கொலை செய்தான்; தூக்கம் தொலைத்தான். எனக்குத் தெரிந்து நான் கொலையெல்லாம் எதுவும் செய்யவில்லை. ஒருவேளை பிசாசு படத்தில் வந்தது போல் எதுவும் நடந்திருக்குமோ? "நதி போகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை..." எலும்பும் தோலுமாக Christian Bale கையில் தட்டுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதைப் போல, நான் அவனருகில் நின்று வயலின் வாசித்துக்கொண்டிருப்பதைப் போல - தோன்றியது. தூங்காமலிருந்தால் நானும் அவனைப் போல எலும்பும் தோலுமாக ஆகிவிடுவேனோ? இப்போது நான் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன், எலும்பும் தோலுமாக. அப்படியாவது மெலிந்தால் சந்தோஷம்தான். காலேஜ் படிக்கும் போது அப்படித்தானே இருந்தேன். இப்போது 77கிலோ இருக்கிறேன். “பாவா… உங்களைத் தூக்கி வச்சுக் கொஞ்சலாம் போல இருக்கு” என்றானே அத்தை மகன்; எவ்வளவு பெரிய அவமானம். வெயிட்டைக் குறைக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இப்போது குடிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் சாப்பாடு… ஆஹா! நேற்றைய காளான் குழம்பும், அதற்கு முந்தைய நாள் அயிரை மீன் குழம்பும் இன்னும் நாவிலேயே உட்கார்ந்துகொண்டு போவேனா என்கிறது. ஏன் போக வேண்டும்? McD McChicken Burger சாப்பிட வேண்டும் போலிருந்தது.

வெளியே கூர்க்கா விசில் ஊதும் சத்தம் கேட்டது.

“நான் வர்றேன் ஒளிஞ்சிக்கோ” என்பது சிக்னலா அல்லது “நான் ஒரு ரவுண்டு வந்துட்டு போய்ட்டேன், இனி நீவரலாம்” என்பது சிக்னலா தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் புதன்கிழமை இரவு கூர்க்கா வருவன், மறுநாள் “ஸார் சாப்” என்று கேட் தட்டி பத்து ரூபா கேப்பான் என்பது வந்து ஒருவாரம் ஆன எனக்கே தெரியும் போது, திருடனுக்குத் தெரியாதா? வீட்டுக்கு பத்து ரூபா நல்ல வருமானம் தான். ஆனால் வீட்டுக்கு வீடு அதைக் கொடுக்க வேண்டுமே. இந்த ஊர்க்காரர்களிடம் அவ்வளவு எளிதில் பணம் வாங்கிவிட்டாலும்…

லேசாக இருமல் வந்தது. கிளைமேட் சேஞ்ச் என்பதாலோ என்னவோ தொண்டை வலியில் தொடங்கி, மூக்கு வழியாக வழிந்து இப்போதுவரை இருமிக்கொண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இருமல் அதிகமாகிவிடும்.

லைட் போடாமல் இருட்டிலேயே திறம்பட ஜலமருந்தச் சென்று பாத்திரத்தை உருட்டினேன். ஒரு டம்ளர் தரையில் விழுந்து 15 நொடிகள் தாண்டி நான் கண்டெடுக்கும் வரை சந்தோஷமாக உருண்டது. மீண்டும் வந்து படுத்துக் கொண்டேன். மணி இரண்டேமுக்கால்.

கூர்க்கா ஒரு ரவுண்டு போய்விட்டு ரிட்டர்ன் வருவது கேட்டது. இனி அவனும் தூங்கப் போய்விடுவான்.

டாங்க் நிரம்பியதற்கான சிக்னலை மூளை உணர்த்தியது. தண்ணீர் குடித்து ஐந்தாவது நிமிடத்தில் டாங்க் ரொம்புகிறது என்ற அதிசயம்தான் எப்படி என்று தெரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தேன். மூணே கால். அப்போ ஒரு அரை மணிநேரம் தூங்கியிருக்கிறேன். Insomnia பயம் இல்லை.

எழுந்தேன்.

இம்முறை வேறு வழியில்லாததால் லைட் போட்டே சென்றேன். குழாய் திறக்கும் சத்தம், பிளஷ் சத்தம் எல்லாம் DTS Surround சத்தமாகக் கேட்டது. கூடவே தூக்கம் கலைந்து அம்மா புரண்டு படுப்பதும் கேட்டது. வீட்டில் acoustics சரியில்லை + என்ரூமில் அட்டாச் டாய்லெட் இல்லை.

வேலையை முடித்து விட்டு வந்து படுத்தேன். கண்கள் அகல விரிந்திருந்தது. மூடிப்பார்த்தேன். நெருப்புச் ஜூவாலை ஒன்று கண்களை மூடவிடாமல் தடுப்பது போலிருந்தது. சுடவில்லை ஆனால் கூசியது. கண்களைக் திறந்து வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆயிரம் கண்ணுடையாள் எல்லாம் எப்படித் தூங்குவாள் தெரியவில்லை. இரண்டு கண்களுக்கே இங்கே அயிரம் பிரச்சனைகள் - “கலக்கிடடா காபி” நியாபகத்திற்கு வந்த்து – ஓ… சீ… அது “ஆயிரம் கரங்கள் தாங்கி அணைக்கின்ற தாயே போற்றி”. இது வேற மாரியம்மா. கூடவே ஐய்யப்ப சுவாமியின் நியாபகமும் அவன் பெற்றோர் பற்றிக் கேட்ட பெங்களூரில் வசிக்கும் என் 15 வயது அக்காள் மகள் நியாபகமும் வந்தது. பள்ளியிலிருனந்து வந்த அவள், அக்காவிடம் இப்படிக் கேட்டிருக்கிறாள் – “Mummy, Lord Aiyappa is a God, Agreed. Who are his parents?” அதற்கு என் அக்காவும் விபரமாக “Lord Shiva and Lord Vishnu” என்று சொல்லியிருக்கிறாள். அதற்கு உடனே அவள் “Are they ‘GAY’” என்று கேட்டிருக்கிறாள். அக்கா பதறிப்போய் தமிழில் “விஷ்ணு மோகினினு ஒரு லேடி அவதாரம் எடுத்தப்போ பிறந்தவர் ஐய்யப்பன்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவள் “So Lord Krishna is a Trans?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாளாம். அந்தக் கேள்விக்கு அக்காவிடமும் பதிலில்லை, என்னிடமும் பதில் இல்லை. நாமெல்லாம் அவ்வளவு விவரம் இல்லையே. ஜன்னல் வழியே பார்த்தேன். மின் விளக்கு எந்த மாற்றமும் இல்லாமல் எரிந்துகொண்டிருந்தது. தெருவும் அப்படியே. ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று தோன்றியது.

என் அறையின் லைட்டைப் போட்டுவிட்டு, திறந்திருந்த அறைக்கதவை மெதுவாக மூடினேன். மெதுவாக மூடியதற்கே அது ஏகத்துக்கும் சத்தம் போட்டது. நான் படக்கென்று வேகமாக மூடியிருக்க வேண்டும். உடனே செக் செய்து விடலாமென்று எண்ணி வேகமாகக் கதவைத் திறந்து பார்த்தேன். அதே டெசிபலில் மீண்டும் கிறீச்சியது. இது எப்படி மூடித் திறந்தாலும் அலறும் என்று முடிவுசெய்து மீண்டும் அதே சத்தத்துடன் கதவை மூடிவிட்டு வந்து படுத்தேன்.

மணி மூணு இருபத்தி ஐந்து.

கம்ப்யூட்டர் கண்ணில் பட்டது. புத்தகம் படிப்பதை விட, இராப்பொழுதை இனிமையாகக் கழிக்க கணினியே சிறந்த வழி என்று தோன்றியது. லைட்டை அணைத்தேன். கம்பியூட்டரைப் போட்டேன். ஸ்பீக்கரை Off செய்யமறந்திருப்பேன் போல. அதுவேறு ‘டிங்டிங்டிங்டிங்ங்’ என்று கம்ப்யூட்டர் ஆன் ஆவதை உறங்கிக் கொண்டிருக்கும் என் பெற்றோருக்குச் சொன்னது. ஸ்பீக்கர் சவுண்டைக் குறைத்துவிட்டு மேற்படி வெப்சைட்டைடைப் தட்டி ‘Enter’ அடித்தால் ‘This page cannot be displayed’ என்று வந்தது. நெட் கனெக்ட்டாகவில்லை. காத்திருந்தேன். மணி மூணே முக்கால் ஆனது. செம கடுப்பில் கம்ப்யூட்டரை Shut Down செய்தேன். இனி அதில் பார்ப்பதற்கு எதுவுமில்லை.

புத்தகம் தான் ஒரே வழி. சிம்பிளாக ஏதாவது ராஜேஷ் குமாரைப் புரட்டலாம் என்று தோன்றியது. பிக்-ஷாப்பரில் இருக்கும் கட்டிலிருந்து “மார்ச்சுவரி ஹவுஸ்ஃபுல்” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இவரால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் தலைப்பு பிடிக்க முடிகிறது என்று தெரியவில்லை. ‘வெல்வெட் குற்றங்கள்’, ‘நள்ளிரவு வானவில்’, ‘வேட்டையாடு விவேக்’, ‘தினம் தினம் திகில் திகில்’, ‘கிலி, கிளி, கிழி’, ‘சிவப்பாய் சில கனவுகள்’, ‘வண்ண வண்ண துரோகங்கள்’, – வாரே வா!

மார்ச்சுவரியை புரட்டத்தொடங்கினேன்.

பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவனை கவனித்தேன். லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான். போடிநாயக்கனூர் சத்துக்கு இது அபூர்வ சம்பவம். நான் முன்பு பார்த்ததற்கு ஊர் எவ்வளோ முன்னேறிக்கொண்டிருக்கிறது. “சொத்து வாங்கி வழிவழியா இங்கயே இருந்து விவசாயம் பண்ற எங்களுக்கே பட்டா இல்ல, ஆனா இந்த மலைல இருக்குற குடியானவங்களுக்கு கவர்மன்ட்டே பக்கா பட்டாவோட ஆளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் + சொந்த வீடு கொடுத்துக்கிட்டு இருக்கு” என்று முதல் நாள் சொன்ன 'போடி-மெட்டு' மல்லீஸ் நியாபகம் வந்தது. கூடவே அவரைப் பார்க்கப் போகும் முன் வழியில் பார்த்த ப்ரெஷ் யானை லத்தியும்.

கோழி கத்தும் சத்தமும், கிழவிகள் கண்டக்டருடன் சண்டையிடும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. மல்லிகை வாசம் கலந்த பழ வாசம் ஒன்று நாசியை நிறைத்திருந்தது.

என் அருகில் உட்கார்ந்திருந்தவன் போனில் “இன்னிக்கி டெஸ்டிங் முடிச்சிருறேன், நாளைக்கு அனுப்பிடலாம், ‘பக்ஸ்’ ஒன்னும் இருக்க சான்ஸ் இல்ல, டெலிவரி குடுத்துடலாம்” என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.

எனக்கு மூன்று சீட்டுகள் முன்னால் அமர்ந்திருந்தவன் ஹெட்போன் மாட்டிக் கேட்டுக்கொண்டிருந்த பாடல் எனக்குக் கேட்டது. கன்டக்டர் அவனைத் தட்டி, "ஏப்பா யேய், சவுண்டக்கொறப்பா... காது கொய்ங்குதுள்ள" என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த இரு ஜோடிகள் ரொம்ப நேரம் ஹிந்தியில் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது. அவர்களையும் கன்டக்டர் அதட்டினால் பரவாயில்லை என்று தோன்றியது.

ரேணுகா மில்ஸ் ஸ்டாப்பில் லேப்டாப் பேக் சகிதம் யுவதிகள் இறாங்குவது தெரிந்தது. அவர்காளுக்கு நாள் கூலி வெறும் 170 ரூபாய்தான் என்பது ஆச்சரியமாக இருந்தது.

“வீரபாண்டி ஸ்டாப் எல்லாம் இறங்குங்க” என்று கண்டக்டர் கத்தவும் பஸ் நிற்கவும் சரியாக இருந்தது. ஏதேதோ மூட்டைகளுடன் வரிசையாக ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். ஸ்லீவ் லெஸ் சுடிதார் போட்டுக்கொண்டு காய்கறிக்கூடையுடன் ஒரு பெண் இறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வயது 60 ஆவது இருக்கவேண்டும். பார்க்க படுகன்றாவியாக இருந்தது.

பஸ் கடந்து சென்ற பின் நிமிர்ந்து பார்த்தேன். பிரம்மாண்ட கட்டடம் ஒன்று தெரிந்தது. கட்டிட வாசலில் ‘Accenture, வீரபாண்டி’ என்ற Sign Board கண்ணி பட்டது. அடுத்த நொடி மண்டைக்குள் ‘கினிங்’ ‘கினிங்’ ‘கினிங்’ என்ற மிருகச்சத்தமும் “அம்மா… பால்….!” என்று எவனோ பெருங்குரலில் கத்தும் சத்தமும் கேட்டது.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...