Hong Kong / Hollywood இயக்குனர் John Woo படங்கள் ஒரு பார்வை
5:44:00 AM
A BETTER TOMORROW
John Woo | Hong Kong | 1986 | 95 min.
கேங்ஸ்டர் படங்களின் பிதாமகன் John Woo உலகளவில் பிரபலமாகக் காரணமாக இருந்த படம் A Better Tomorrow. வெளியாகும்வரை இப்படி ஒரு படம் வருவதே யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவு மிகக்குறைந்த பட்ஜெட்டில் எந்தவித விளம்பரம், ஆடம்பரம் இல்லாமல் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய படம். ரைட்ஸ் வாங்கி கொரியர்கள் 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் படத்தை ரீமேக் செய்து கல்லா கட்டினார்கள். பாலிவுட்காரரகள் யாருக்கும் சொலாமல் “இன்ஸ்பயர்” ஆகி Aatish: Feel the Fire என்ற பெயரில் படத்தை எடுத்து கல்லா கட்டினார்கள். முதல் பாகத்தின் வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் மேலும் இரண்டு படங்கள் வெளியாகி கல்லா கட்டியது - John Woo இயக்கத்தில் A Better Tomorrow 2 என்ற sequel, இயக்குனர் Tsui Hark (Jet Li’s Once Upon a Time in China film series, Flying Swords of Dragon Gate, Detective Dee series) இயக்கத்தில் A Better Tomorrow 3: Love & Death in Saigon என்ற prequel.
இத்தனைக்கும் A Better Tomorrow முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் திரைப்படம் கிடையாது. திருந்தி வாழ நினைக்கும் கேங்ஸ்டர் அண்ணன், அவனை மன்னிக்காத போலீஸ் தம்பி. எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? நம் தலைவர் நடித்த ‘தீ’ படத்தின் கதையும் இதுதான். ‘தீ’ வெளியானது 1981. Amitabh Bachchan நடிப்பில் Yash Chopra இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டே வெளியான Deewaar படத்தின் ரீமேக் தான் ‘தீ’ என்பதையும் நினைவில் கொள்க. Global Subject. அதனால் தான் எடுத்த மொழிகளிலெல்லாம் ஹிட் அடிக்கிறது.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான அந்த அண்ணன் தம்பியை விட ஹீரோவின் நண்பனாக நடித்த Chow Yun-fat வின் நடிப்பு தான் எனக்கு மிகவும் பிடித்தது. Chow Yun-fat ற்கு இதெல்லாம் சர்வசாதாரணம் என்பது உலகறிந்தது.
என்னைப் பொறுத்தவரை Glamorized Gangster படங்கள் எடுப்பதில் Ph.D வாங்கியவர் John Woo (இவர் பட்டம் வாங்கிய பல்கலைக்கழகத்தின் HOD - Martin Scorsese!). John Woo இயக்கத்தில் வந்த அத்தனை கேங்ஸ்டர் படங்களையும் ஆக்ஷன் பிரியர்களுக்கு செம்ம விருந்தாக இருப்பது நிச்சயம். A Better Tomorrow தொடங்குவது உசிதம்.
THE KILLER
John Woo | Hong Kong | 1989 | 110 min.
ஆக்ஷன் - கேங்ஸ்டர் படங்களெடுப்பதில் முன்னோடிகளான Jean-Pierre Melville மற்றும் Martin Scorsese மீது எப்போதுமே John Woo விற்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களது Le Samouraï, Mean Streets போன்ற படங்களின் பாதிப்பில் அவர் எடுத்த படம் The Killer. இவரது முந்தையப் படங்களைப் போலவே The Killer படமும் ஒரு Glamorized Gangster படமே.
ஒரு ஷூட் அவுட்டில் ஹீரோ Ah Jong துப்பாக்கியிலிருந்து வெளியாகும் தீப்பொறி கண்களில் பட்டு, பாடகி Jennie தனது பார்வையை இழக்கிறார். தன்னால் குருடான நாயகி மேல் காதல் கொள்ளும் நாயகன் அவளுடன் பழகத் தொடங்குகிறான். அவளது பார்வையைத் திருப்பித் தரவேண்டி, இறுதியாக இன்னொரு வேலையைச் செய்து முடிக்க சம்மதிக்கிறான். அந்த வேலையை முடித்தவுடன் இவனைப் போட்டுத் தள்ளச் சொல்கிறான் கேங்ஸ்டர் தலைவன். இதனிடையே போலீஸ் துரத்தல் வேறு. இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை. இதே கதையை ஏதோவொரு தமிழ்படத்தில் பார்த்த நியாபகம் வருகிறதல்லவா? சரத்குமார், சங்கவி, மீனா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ரிஷி’ படத்தில் The Killer படத்தின் பல காட்சிகளை அப்பட்டமாகத் தழுவியிருப்பார்கள்.
இந்தப் படத்திலும் John Woo வின் ஆஸ்தான ஹீரோவான Chow Yun-fat தான் ஆக பட்டையைக் கிளப்பியிருப்பார். மனிதரிடம் ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. படத்தின் opening scene இன்னும் அப்படியே நினைவிலிருக்கிறது. பின்னணியில் ராக்/பாப் இசையை பயன்படுத்துவதிலும், ஸ்லோ மோஷன் காட்சிகளைப் பயன்படுத்துவதிலும் John Woo விற்கு இணை யாரும் இல்லை. இந்தப் படத்திலும் இவரது மற்ற படங்களையும் பார்த்தவர்களுக்கு அது எவ்வளவு உண்மை தெரியும்.
A Better Tomorrow படம் உலகளவில் John Woo விற்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது என்றால், The Killer ஹாலிவுட்டை இவர் வீட்டுக்கதவைத் தட்ட வைத்தது.
Quentin Tarantino (Jackie Brown படத்தில் The Killer பற்றிய வசனம் உண்டு), Robert Rodriguez (El Mariachi, Desperado படங்களில் காட்சிகளின் தாக்கம் தெரியும்), Johnnie Too (A Hero Never Dies, Running Out of Time, Fulltime Killer படங்களின் ஷூட் அவுட் காட்சிகளுக்கு The Killer படத்தை reference எடுத்திருக்கிறார்), Luc Besson (Nikita, Léon சண்டைக்காட்சிகள்) போன்ற இயக்குனர்கள் தாங்கள் John Woo வின் The Killer படத்தால் பெருமளவில் தாக்கமடைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் (தகவல்: wikipedia)
HARD BOILED
John Woo | Hong Kong | 1992 | 128 min.
Movie Link - https://www.youtube.com/watch?v=HUAu1i59XP0
ஹாலிவுட்டிற்கு செல்லும் முன் ஒரு அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த John Woo விற்கு மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க விருப்பமில்லை. சமூகவிரோதிகளை சூப்பர் ஹீரோக்களாக காட்டிப் படமெடுப்பவர் (Glamorized Gangster) என்ற தொடர் குற்றச்சாட்டும் அதற்கு முக்கிய காரணம். எனவே இம்முறை போலீஸின் பெருமையைச் சொல்லும் “Dirty Harry” டைப் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்து இந்தப் படத்தை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் John Woo. கூடவே ஹாங் காங் போலீஸை விட சமூகவிரோதிகளான கேங்ஸ்டர்களிடம் நவீன ஆயுதங்களும், பணமும், பலமும் இருப்பதைச் சுட்டிக்காட்டவே ஆயுத கடத்தல் கும்பல்களைச் சுற்றி கதையமைத்ததாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்தப் படத்தில் முந்தையை படங்களில் பார்த்தததைவிர துப்பாக்கிச் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
சிம்பிள் கதை – போலீஸிற்கும் கேங்ஸ்டர் கூட்டம் ஒன்றிற்குமிடையே நடக்கும் சண்டை. எதற்கும், யாருக்கும் அஞ்சாத போலீஸ் அதிகாரி "Tequila" Yuen. Infernal Affairs டைப்பில் கேங்ஸ்டர் கூட்டத்தில் கலந்திருக்கும் ஒரு undercover. இவர்கள் இருவரும் ஒரு மாபெரும் கேங்ஸ்டர் கூட்டத்தை எதிர்க்கிறார்கள். பாதி படத்திலேயே கிளைமாக்ஸ் வந்துவிடுகிறது. டீ ஹௌஸ் ஒன்றில் செம்ம துப்பாக்கிச்சண்டையில் தொடங்கும் படம், அங்கிருந்து கிளைமாக்ஸ் நடக்கும் மருத்துவமனை வரை அதிரடி ஆக்ஷன் விருந்தாக நம்மை அசத்துகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. ஏதாவதொன்று வெடித்துச் சிதறிக்கொண்டே இருக்கிறது. மருத்துவமனையில் புதுந்து கொள்ளும் வில்லன்களுக்கும் போலீஸிற்கும் நடக்கும் அந்த நீண்ண்ண்ட கிளைமாக்ஸ் துப்பாக்கி சண்டை அதிஅற்புதமாக படம் பிடிக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டிருக்கிறது. ‘ஆ’வென்று வாயைப் பிளந்தவாரு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
கேங்ஸ்டராக John Woo வின் முந்தைய படங்களில் பட்டையைக் கிளப்பிய Chow Yun-fat இம்முறை போலீஸாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் (‘வாய்ல குச்சி வச்சிருந்தா அண்ணன் ராஜூ பாய்’ - Chow Yun-Fat 1992 லிலேயே இந்தப் படத்தில் அந்த ஸ்டைலை வைத்து மாஸ் காட்டிவிட்டார்). Undercover போலீஸாக நடித்திருக்கும் Tony Leung அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு பேட்டியில் தனது பேவரிட்டான Chow Yun-Fat ஐ விட Tony Leung அருமையாக நடித்திருந்ததாகச் (method acting) சொல்லியிருக்கிறார் John Woo.
A Better Tomorrow, A Better Tomorrow 2, The Killer, Hard Boiled படங்களுக்கு இடையில் வெளியான Heroes Shed No Tears (1986), Just Heroes (1989), Bullet in the Head (1990), Once a Thief (1991) படங்கள் அதிகம் வெளியே தெரியாதவை என்றாலும், நிச்சயம் ஒருமுறையாவது பார்க்கக்கூடியவை தான்.
இந்தப் படத்திற்குப் பிறகு Hard Target (1993) படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு சென்று விட்டார் John Woo. மீண்டும் 15 வருடங்களுக்குப் பிறகு தான் Red Cliff என்ற படத்தின் மூலம் மீண்டும் தாய்மொழிக்கு வந்தார்.
FACE / OFF
John Woo | U.S | 1997 | 139 min.
John Woo இயக்கிய மிக முக்கியமான படங்களில் ஒன்று Face Off
வரிசையாக ஆங்கிலப் படங்கள் பார்க்கத் தொடங்குவதற்கு முன்பே ஏதோ ஒரு சமயத்தில் டி.வி யில் பார்த்த ஆக்ஷன் திரைப்படம் இது. பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்னும் அப்படியே நியாபகத்தில் இருக்கிறது. அப்படியொரு ஆக்ஷன் விருந்து இந்தப் படம். முன்பெல்லாம் ஸ்டார் மூவீஸ் வைத்தாலே இந்தப் படம் தான் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வளவு ஸ்பெஷல்!
செம்ம த்ரில்லிங்கான கதையைக்கொண்டது Face/Off. இந்தப் படத்தில் ஹீரோ தான் நிஜத்தில் வில்லன். வில்லன் தான் ஹீரோ. இப்போது தமிழ் சினிமாவை நாறடித்துக்கொண்டிருக்கும் 'ஆன்டி-ஹீரோ' டைப் கதையெல்லாம் கிடையாது. Sean Archer (John Travolta) ஒரு FBI Special Agent. பெர்சனலாகவும் இவருக்கு எதிரியாக இருப்பது தீவிரவாதியான Castor Troy (Nicolas Cage). வெடிகுண்டு ஒன்றை மறைத்து வைக்கும் Troy உடன் Archer போடும் சண்டையில் கோமாவில் விழுகிறான் Troy. வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது Troyக்கும் சிறையிலிருக்கும் அவனது தம்பிக்கும் மட்டும் தான் தெரியும். அண்ணனைத் தவிர வேறு யாருடனும் தம்பி பேச மறுக்கிறான். அண்ணன் கோமாவில். வேறு வழியே இல்லாததால், Troy முகத்தைப் போல தன் முகத்தை சர்ஜரி செய்து (Face Transplantation) சிறைக்குள் செல்கிறார் Archer (Troy முகத்துடன்). இந்தச் சமயத்தில் ஒரிஜினல் Troy விழித்துக்கொண்டு மருத்துவர்களை மிரட்டி Archer முகத்தைப் பொருத்திக்கொள்கிறான். அதகளம் ஆரம்பம்.
ஏதோ சீப்பான B Grade ஆக்ஷன் படத்தின் கதை போலத் தெரிந்தாலும் செம்ம த்ரில்லிங்கான ஆக்ஷன் திரைப்படம் இது. John Travolta, Nicolas Cage இருவருமே பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். டபுள் ஹீரோ சப்ஜெக்டிற்கு இந்தப் படம் தான் முதல் ரெப்ரென்சாக இருக்க வேண்டும். சண்டைக்காட்சிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். வயலன்ட் + அதகளம். சிறையில் "I am Castor Troy" என்று கத்தும் காட்சி, Archer முகத்துடன் இருக்கும் Troy, Archer மகளுக்கு சண்டை கற்றுக்கொடுக்கும் காட்சி, முகம் மாற்றிக்கொண்ட இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொள்ளும் காட்சி என்று பல மாஸ் காட்சிகள் படத்தில் உண்டு. ஹாலிவுட்டில் இயக்குனர் John Woo வின் முந்தைய படங்களான Hard Target மற்றும் Broken Arrow இரண்டும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தராத மாபெரும் வெற்றியை இந்தப் படம் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு தான் Brian De Palma இயக்கிய Spy Thriller ஆன Mission Impossible படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் John Woo.
WINDTALKERS
John Woo | U.S | 2002 | 134 min.
இரண்டாம் உலகப் போரின் சமயம், அமெரிக்கர்களுக்கு பேருதவியாக இருந்தவர்கள் அமெரிக்கப் பழங்குடியினரான Navajo மக்களும், அவர்களது பழங்குடி மொழியும் தான். எவ்வளவு சிக்கலான குறியீடாக இருந்தாலும் அவற்றச் சுலபமாக மொழிபெயர்த்து, போர்க்களத்தில் அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியைத் தந்தனர் ஜப்பானியர்கள். Navajo இன மக்களின் மொழி கற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமான மொழி. அமெரிக்காவைத் தவிர வேறு எங்கும் இந்த மொழி பேசும் மக்கள் கிடையாது. எனவே அமெரிக்க ராணுவம் தங்களது பழங்குடியினரை ராணுவத்தில் Code Talkers ஆக சேர்த்துக் கொண்டது. சிறப்புப் பயிற்சியளிக்கப்படும் இவர்கள், போர்க்களத்தில் முன்வரிசையில் போரிடுவார்கள் (Frontliners). ஆனால் எதிரியைக் கொல்வதை விட, எதிரியின் இருப்பிடத்தை தலைமையிடத்திற்கு சொல்வது தான் இவர்களது பிரதான வேலை. இவர்களில் ஒருவர் மாட்டிக்கொண்டாலும், மீண்டும் ஜப்பானியர்களைக் கட்டுபடுத்துவது முடியாத காரியமாகிவிடும். ரகசியத் தாக்குதல்கள் எதையும் நடத்த முடியாது. எனவே Navajo Code Talkers பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் எக்காரணம் கொண்டும் உயிரோடு எதிரியின் கையில் சிக்கிவிடக்கூடாது. இது முன்கதை.
Yahzee, Whitehorse இருவரும் நண்பர்கள். Navajo இனத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் பயிற்சியளிக்கப்பட்டு Navajo Code Talkers ஆக ஜப்பானிற்கு அனுப்பபடுகிறார்கள். இவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்படும் உயரதிகாரிகளாக (Sergeant) Joe Enders (Nicolas Cage) மற்றும் Anderson (Christian Slater) இருவரும் நியமிக்கப்படுகிறார்கள். இதில் Joe ஏற்கனவே போரினால் மனதளவிலும் உடலளவிலும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறான். இவர்களது கதை தான் Windtalkers.
இரண்டாம் உலகப்போரை வைத்து வதவதவென்று பல படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. பல கதைகளை (கட்டுக்கதைகள் உட்பட) அவை இந்த உலகத்திற்குச் சொல்லியிருக்கிறது. அதிலிருந்து தனித்துத் தெரிய வேண்டும் அல்லது ஒரு புதிய கதையைச் சொல்லவேண்டுமென்றால், நியாயப்படி Navajo வான Yahzee தான் இந்தப் படத்தின் கதாநாயகனாக இருக்க வேண்டும். காரணம் Navajo இன மக்களின் பங்களிப்பைப் பற்றி வேறு எந்தப் படமும் இல்லை. ஆனால் இந்தப் படம் வழக்கம்போல அமெரிக்க கேப்டனான Joe Enders ஐ முன்னிறுத்துகிறது. அவரது கதையாகத்தான் சம்பவங்கள் விரிகிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய எதிர்வினையாக அமைந்தது. மேலும் அதே நட்பு, காதல், துரோகம், இயலாமை, மேலதிகாரிகளின் லூசுத்தனமான ஆணைகள், அதனால் கண்முன்னேயே நண்பர்களை இழக்கும் ஹீரோ என்று பல படங்களில் பார்த்த அதே காட்சிகளே இந்தப் படத்திலும் ரிபீட் ஆக இருக்க (Cliché) படம் பாக்ஸ் ஆபீஸில் படு ஃபிளாப் ஆனது. மேலும் படத்தை இயக்கியது John Woo என்ற சீனர் என்பதால் "அமெரிக்க வரலாறு தெரியாதவரால் எப்படி இந்தப் படத்தை இயக்க முடியும்?" என்று பெரிய அளவில் படத்தைக் கழுவி கழுவி ஊற்றினார்கள் அமெரிக்க மீடியாவும் விமர்சகர்களும். இந்தப் படமே John Wooவின அமெரிக்க பயணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியாக அமைந்தது என்றும் சொல்லலாம் (இந்தப் படத்திற்கு பிறகு Ben Affleck கதாநாயகனாக நடிக்க, John Woo இயக்கிய Paycheck என்ற படமும் பெரிய வெற்றியைத் தரவில்லை).
Navajo மக்களை முன்னிறுத்தாமல், அமெரிக்கனை கதாநாயகனாக்கியதைத் தவிர படத்தில் வேறு எந்தக் குறையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு WAR genre படத்தில் என்னென்ன இருக்க வேண்டுமோ, என்னென்ன ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அவையனைத்தும் Windtalkers படத்தில் நிரம்பவே இருக்கிறது. சொல்லப்போனால் பல உலகப்போர் படங்களை விட இந்தப் படத்தின் தரம் மேலோங்கி இருக்கிறது. போர்க்களக்காட்சிகளில் உயிர்ப்பு இருக்கிறது. பிரம்மாண்டம் இருக்கிறது. எனவே தாராளமாக Windtalkers படத்தை ரசிக்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை சென்சார் ஒரு மிகப்பெரிய தலைவலி, இந்தியாவைப் போலவே. அதிக வயலன்ஸ் என்று சொல்லியே வெளிநாட்டிலிருந்து படமெடுக்க வருபவர்களை நோண்டிச் சாவடிப்பார்கள். சமீபத்தில் Snowpiercer படம் வெளியாவதில் பெரும் சிக்கல் இருந்ததும் இதனால்தான். எனவே Windtalkers Director’s Cut கிடைத்தால் பாருங்கள். அதில் இன்னும் நிறைய அருமையான காட்சிகள் (deleted scenes) காணக்கிடைக்கும்.
RED CLIFF 1 & 2
John Woo | China | 2008-2009 | 288 min.
t7520954.html(கொஞ்சம் பெரிய 'ஸைஸ்' தான். ஆனால் இந்தக் குவாலிட்டியில் பார்த்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்பதால், this link is highly recommended for this movie)
Epic War – இந்த Genre ரில் வந்த அத்தனைப் படங்களையும் தேடித் தேடிப் பார்ப்பவன் நான். அப்படி நான் பார்த்த படங்களில் சந்தேகமில்லாமல் “THE BEST” Red Cliff தான். இயக்குனர் John Woo விஸ்வரூபமெடுத்தத் திரைப்படம். ஹாலிவுட் போரடிக்கத் தொடங்க, 15 வருடங்களுக்குப் பிறகு “Back with a BANG!” என தனது தாய்மொழிக்கே இந்தப் படத்தின் மூலம் திரும்ப வந்தார் John Woo.
கி.பி 208 – 209 ஆண்டுகளில் நடந்த Battle of Red Cliffs மற்றும் அதனைச் சுற்றி நடந்த சம்பவங்கள் தான் Red Cliff படத்தின் கதைக்களம். ஆசிய வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட, மொத்தமாக 288 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை இரண்டு பாகமாக ஆறு மாத இடைவெளியில் வெளியிட்டு ஹாலிவுட்டையும் சேர்த்து வாய்பிளக்க வைத்தார் John Woo (படத்தின் தயாரிப்பாளரும் இவரே!)
கதை ரொம்ப சிம்பிள் – மொத்த சீனாவையும் தனது சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்றால் எந்த நிபந்தனையுமின்றி அண்டை நாடுகளான East Wu மற்றும் West Wu இரண்டின் மீதும் படையெடுத்து அவற்றை வெல்ல வேண்டுமென்று சக்ரவர்த்தி ஹானைத் (Emperor Han) தூண்டுகிறார் பிரதான மந்திரியான Cao Cao. பேராசையினால் Han இதற்குச் சம்மதிக்க, வேறு வழியே இல்லாமல், East Wu மற்றும் West Wu ஒன்று சேர்ந்து Han / Cao Cao வின் படைகளை எதிர்கொள்கிறார்கள். அந்தச் சமயத்தில் நடந்த பல போர்களின் தொகுப்பு தான் Red Cliff படம். இப்படிச் சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும், John Woo படைத்திற்கும் இந்த பிரம்மாண்டத்தைக் காண இரண்டு கண்கள் போதாது. பார்த்து முடித்த பிறகும் பல நாட்கள் இந்தப் படம் நம் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஓடும் என்பது உறுதி.
பாதி படம் போர்க்களத்தில் தான் நடக்கிறது. மீதி போர் வியூகக்காட்சிகள். அடுத்தடுத்து வரிசையாக வெவ்வேறு விதமான சண்டைக்காட்சிகள், வன்முறை, ரத்தம். படம் முழுக்க இப்படியே இருந்தாலும் கொஞ்சம் கூட அலுக்காமல், விஷுவல் பிரம்மாண்டமாக, ஆக்ஷன் விருந்தாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் John Woo. ஒவ்வொரு முக்கிய கதாப்பாத்திரத்திற்கு ஒரு ஸ்பெஷல் சண்டைக்காட்சி. அவை ஒவ்வொன்றும் அந்தக் கதாப்பாத்திரத்தை நம்மிடையே நெருக்கமாக்கும். இடையிடையே மொத்தமாக அனைவரும் மோதிக்கொள்ளும் முக்கிய போர்க்காட்சிகள் என்று படத்தின் டிராவலே பிரமாதமாக இருக்கும். முதல் பாகத்தின் கிளைமாக்ஸான “ஆமை வடிவ” போர் வியூகத்திற்கு வாய் பிளக்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.
இவ்வளவு பிரம்மாண்ட படத்திற்கு ஒளிப்பதிவு எவ்வளவு தூரம் உதவியிருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மிக ஆற்புதமான முறையில் போடப்பட்ட செட்களில், எது நிஜம், எது கிராபிக்ஸ் என்று தெரியாத அளவிற்கு மிகப் பிரமாதமாகப் படம்பிடித்திருக்கிறார்கள்.பெரும்பாலும் ஒரிஜினலக்ளையே பயன்படுத்தியிருந்தாலும், சில இடங்களில் “மீனியேச்சர்”களையும் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவிற்கு இணையாக படத்தில் மிரட்டுவது இசை. John Woo மிகப்பரிய இசைப்பிரியர். முழு நீள ‘மியூசிக் டிராமா’ ஒன்றை இயக்குவது தனது கனவு என்று John Woo பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கையில் இப்படிப் பட்ட ஒரு பிரம்மாண்டப் படத்திற்கு எப்படிப்பட்ட இசைக்கோர்வைகளை அவர் வாங்கியிருப்பார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
படத்தின் பல ப்ரேம்களில் ஆயிரம் பேருக்கு குறையாமல் ஆட்கள் இருப்பார்கள். பெரும்பாலும் அந்த மொத்தக் கூட்டத்தையும் நீண்ட ஹெலிகாப்டர் ஷாட்களில் காட்டிவிட்டுத்தான் கேமரா களத்தில் நுளையும். சீன ராணுவம் தனது ராணுவ வீரர்கள் 1500 பேரை இந்தப் படத்தில் நடிக்க வைத்து John Woo விற்கு உதவினார்கள் என்பது Trivia. John Woo வின் பேவரிட்டான Yun-Fat Chow இந்தப் படத்தில் இல்லாதது பெரிய ஆச்சரியம் தான். ஆனால் பிரதான கதாப்பாத்திரத்திற்கு இவரைத் தான் John Woo முதலில் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் ஏதோ காராணங்களால் படப்பிடிப்புத் தொடங்கிய சமயம் Yun-Fat Chow விலகிக்கொள்ள அவர் இடத்தில் Tony Leung வை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
John Woo வின் முந்தைய படங்கள் மட்டுமல்லாமல், உலகளவில் இந்தப் படம் ஒரு benchmark. John Woo வின் MASTERPIECE! ஹாலிவுட் John Woo வை பெரிதாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது இந்தப் படத்தைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
படத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் படத்தைப் பார்ப்பது போல் வராது என்பதால் சுருக்கமாக நிறுத்திக்கொள்கிறேன். இந்தப் படம் உங்களைப் மயக்கப் போவது உறுதி. உடனடியாகப் பாருங்கள்.
2 comments
This comment has been removed by the author.
ReplyDeleteWindtalkers படம் பாருடா.. பாருடான்னு ஒரு நண்பன் நச்சரித்துக்கொண்டே இருப்பான். ஆனால் IMDB ரேட்டிங் சுமாராக இருந்நதாலும், அவன் ஒரு நிக்கலஸ் கேஜ் விசிறி என்பதாலும் அதை பெரிதாக சட்டை செய்யவில்லை. இத வாசிச்சதுக்கப்புறம்தான் நான் John Woo வின் படங்கள் ஒன்றுகூட (MI-2 தவிர்த்து) பார்த்ததேயில்லை என்பதையேஅறிந்துகொண்டேன். நீங்க சொல்ற மாதிரி இவர் Scorceseக்கு அடுத்தபடின்னா நான் செய்து கொண்டிருப்பது மகாபாவம் :P Its time to start hitting
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...