ஜிகர்தண்டா - தமிழில் மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சி...

5:11:00 AM


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை போலீஸ் படங்களுக்கும், கேங்ஸ்டர் படங்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம். காரணம் வெரி சிம்பிள். இந்த இருவரையும் நாம் தூரத்திலிருந்து ரசிப்போம். அருகிலோ நம் வாழ்க்கையிலோ இருந்தால் பயந்து நடுங்குவோம். ஆக எப்படிப் பார்த்தாலும் இந்த இரு வகையினரும் நமக்கு ஆச்சரியம் தான். 

போலீஸ் படங்கள் காலம்காலமாக டிரண்டில் இருக்கிறது. ஆனால் கேங்ஸ்டர் படங்கள் சில வருடங்களுக்கு முன் தான் தொடர்ச்சியாக வரத் தொடங்கியது (டிரெண்ட்). சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இதை ஆரம்பிதது வைத்தது “அமர்க்களம்” (கேங்ஸ்டர் படங்களின் டிரெண்டைத் தமிழ் சினிமாவில் தான் தான் தொடங்கிவைத்ததாக இயக்குனர் ‘சரண்’ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்). இதற்கு முன்னரே நாயகன், தளபதி என்று மணி பின்னியெடுத்தார் என்றாலும், அப்போது தொடர்சியாக கேங்ஸ்டர் படங்கள் வரவில்லை (பார்த்திபனின் ‘புதிய பாதை’ கேங்ஸ்டர் லிஸ்டில் வராது என்று நினைக்கிறேன். அது ஹீரோ ரௌடியாக நடித்த படம். அதாவது படத்தில் ரௌடி தனியாள் அவனுக்கென்று ஒரு “கேங்” இருக்காது) அமர்க்களத்திற்குப் பிறகு வதவதவென்று எல்லா முன்னணி, பின்னணி ஹீரோக்களும் விரும்பி கேங்ஸ்டர் படங்களாகத் தேந்தெடுத்து நடிக்கத் தொடங்கினர். அஜித் வரிசையாக தீனா, அட்டகாசம், ரெட், அசல், பில்லா என்று கேங்ஸ்டர் படமாக நடித்துத் தள்ளினார். தலைவர் – பாபா நடித்தார் (பாட்ஷா ப்ளாஷ்பேக்கை மறக்க வேண்டாம்). விஜய் – நெஞ்சினிலே, பகவதி, தலைவா. சூர்யா – நந்தா, ஆறு, அஞ்சான் (‘ஸ்ரீ’னு ஒரு ரௌடி படம் வந்துச்சு). விக்ரம் – ஜெமினி. இவர்கள் தவிர பல அடுத்தகட்ட ஹீரோக்கள் நடித்த கேங்ஸ்டர் படங்களும் உண்டு. இந்தப் படங்கள் எல்லாம் இரண்டே இரண்டு டெம்ப்ளேட்களுக்குள் அடங்கிவிடும் 1) வாழ்வும் மரணமும் - நாயகன், புதுப்பேட்டை, ஹிந்தியில் Gangs of Wasseypur, Sarkar, Sarkar Raj, Raktha Charitra, ஆங்கிலத்தில் Godfather, Scarface, Donnie Brasco போன்ற படங்கள். 2) வாழ்வும் மாற்றமும் – தளபதி உட்பட மற்ற படங்கள் அனைத்துமே இந்த வகையில் அடங்கிவிடும். ரௌடி / கேங்ஸ்டராக வாழும் ஹீரோ ஏதாவது ஒரு காராணம் அது பெரும்பாலும் காதல், அம்மா, தங்கை செண்டிமெண்டிற்காக அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வருவார். மெயின் வில்லனைக் (பெரும்பாலும் அவன் இதுநாள் வரையிருந்த கேங்கின் தலைவன்) ஹீரோ கொல்வார் அல்லது எப்போதாவது திருத்தவும் செய்வார்.

ஆரண்ய காண்டம் இந்த இரண்டு வகையிலும் சேராமல் கேங்ஸ்டர்கள் வாழ்க்கையையில் ஒரு குறிப்பிட்ட எப்பிசோடை மட்டும் சொன்ன ஒரு படம். சிங்கப்பெருமாள் என்ற கேங்ஸ்டரின் வாழ்வும் மரணமும் என்று கூட சொல்லலாம்.  

ஜிகர்தண்டா இரண்டாம் வகையில் சேர வேண்டியது. ஆனால் ஜஸ்ட் மிஸ். டெம்ப்ளேட்டில் ஏற்படுத்திய ஒரு சிறிய மாற்றத்தால் முதல் வகையிலும் சிக்காமகல் இரண்டாவது வகையிலும் முழுமையாக நுளையாமல் ஒருமாதிரி தனித்து நிற்கிறது.

பீட்ஸா - புதிய இயக்குனரின் படமென்பதால், வழக்கம்போல பெங்களூரில் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் சக்கை போடு போட்டதால் சாகவாசமாக இரண்டாவது வாரம் வெளியானது. அடித்துபிடித்து நான் பார்ப்பதற்குள், ஏற்கனவே படத்தைப் பார்த்திருந்தவர்கள் கொடுத்த பில்டப் காரணமாக ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏகத்துக்கு ஏறி, நன்றாக இருந்திருக்க வேண்டிய படம் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. முதல் வாரமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சூட்டோடு சூடாக படம் பார்த்திருந்தால் பீட்ஸா வை நான் கொண்டாடியிருப்பேன். Peer Pressure எனது படம் பார்க்கும் ரசனையைக் கெடுத்துவிட்டது. மேலும் இரண்டாம் பாதியை நான் ஏற்றுக்கொள்ளவும் கொஞ்சம் நேரம் ஆனது. ஆக, என்ன ஆனாலும் சரி, ‘ஜிகர்தண்டா’வை முதல் நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவது என்று முடிவுசெய்திருந்தேன். பார்த்தும் விட்டேன். (இதே தான் நளன் குமாரசாமி யின் அடுத்த படத்திற்கும்).

கார்த்திக் சுப்பாராஜ் இந்தப் படத்தை தான் முதலில் எழுதினார் என்பதில் ஆச்சரியமே இல்லை. படமே “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் நடுவர்கள் தீர்ப்பு சொல்வதில் தான் தொடங்குகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவரும் (நாசர்), பிரபல தயாரிப்பாளர் (‘ஆடுகளம்’ நரேன்) ஒருவரும் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள். ஹீரோ கார்த்திக் (சித்தார்த் சுப்ரமணியம்) தனது ரிசல்ட்டிற்காக டென்ஷனாக காத்திருக்கிறார். பின்னணியில் நளன் (guest appearance) உட்பட மேலும் மூன்று போட்டியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நாசர் மைக்கை வாங்கி பெரும் அமைதிக்குப் பிறகு “குப்பப் படம்” என்று சொல்கிறார் (இயக்குனர் ‘பிரதாப் போத்தன்’ தான் இன்ஸ்பிரேஷ்ன் என்று நான் நினைக்கிறேன்). அதிர்ச்சி. நரேனோ “நான் பாத்ததுலயே இந்தப் படம் தான் பெஸ்ட்டு” என்கிறார். குழப்பம். பிரபலங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சமரசம் செய்து தீர்ப்பைச் சொல்லச் சொல்கிறார்கள். நாசர் கார்த்திக்கை ரிஜெக்ட் செய்கிறார். நரேன் “நான் உன் படத்த புரொடியூஸ் பண்றேன். நாளைக்கே ஆபீஸ் வா” என்று சொல்கிறார். அதிர்ச்சி, சந்தோஷம் இரண்டும் கலந்தடிக்கிறது கார்த்திக்கிற்கு (படமும் இப்படித் தான் கலந்தடிக்கிறது). அடுத்த நாள் ஆபீஸிற்குப் போனால், கார்த்திக்கின் யூஸ்வல் மெசேஜ் சொல்லும் கதையைக் கேட்டுக் காரித்துப்பும் தயாரிப்பாளர் ரத்தம் தெறிக்கத் தெறிக்க நாயகன், தளபதி மாதிரி ஒரு கேங்ஸ்டர் படத்தை தயார் செய்து வரச் சொல்கிறார். சவாலை ஏற்றுக்கொள்ளும் கார்த்திக், கரண்ட் டிரெண்டில் இருக்கும் கேங்ஸ்டர் ஒருவனது வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்து உணர்வுப்பூர்வமான ஒரு கதையைத் தயார் செய்ய முடிவு செய்கிறார். அதற்காக அவர் தேர்வு செய்யும் கேங்ஸ்டர், மதுரையைச் சேர்ந்த ‘அசால்ட் சேது’ (சிம்ஹா). இது முதல் பத்து நிமிடக் கதை. படத்தை கார்த்திக் எடுத்து முடித்தாரா இல்லையா என்பது தான் கதை.

சிம்ஹா – நிஜமாகவே இவர் நடிப்பில் சிம்மம் தான். ‘சூதுகவ்வும்’ படத்தில் இவர் சொல்வது போல் “பாஸ், நிஜமாவே இவர்கிட்ட ஏதோ ஒரு ஷக்தி இருக்கு” என்று நான் வியந்து கொண்டிருந்தேன். டிரைலர் பார்த்ததிலிருந்தே இந்த “சேது” கதாப்பாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. செம லாவகமாக தனது கேரக்டரைப்பதிவு செய்கிறார், சுமந்து செல்கிறார். எந்த இடத்திலும் ஒரு சிறிய மாற்றம் கூட இல்லை. வசன உச்சரிப்பையும், உருவத்தையும் மட்டும் கொஞ்சம் ‘டிரிம்’ செய்தால் இவர் பெரிய ரவுண்ட் வருவார். ஹீரோவாக முயற்சி செய்யாமல் இது போன்ற கதாப்பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் இன்னும் பல காலம் நிலைத்து நிற்கலாம்

சித்தார்த் – பாராட்டுக்கள். ஹீரோவாக இருந்தாலும் தனக்கு இரண்டாம் இடம் தான் கிடைக்கும் என்று தெரிந்தே இந்தப் படத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு. எது தேவையோ அதையே தெளிவாகக் செய்திருக்கிறார். எனது ‘சாக்லேட் பாய்’ இமேஜ் மாற இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்தாகப் பேட்டிகளில் சொன்னார். என்ன மாறியது என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் சாக்லேட் இல்லை. ஒரு frustrated film maker ஆகத் தெரிந்தார். Frustration எல்லாருக்கும் இருப்பது தான். அதில் என்ன வித்தியாசத்தைக் கண்டார் என்று தெரியவில்லை.

கருணா – செகண்ட் ஹீரோ (என்னைப் பொறுத்தவரை மூன்றாவது தான்). கிட்டத்தட்ட படம் முழுக்க வருகிறார். சித்தார்த் இருந்தால் அவருக்குப் பக்கத்தில் இவரும் இருக்கிறார். சில இடங்களில் தான் இவரது நடிப்பை ரசிக்க முடிந்தது, காமெடிக்கு சிரிக்க முடிந்தது. டாஸ்மாக் காட்கி ஒன்று உண்டு, அதில் செம பெர்பாமன்ஸ். Kill and Laugh என்றொரு சீக்வென்ஸ் உண்டு. அதிலும் சூப்பர். மற்றபடி ஏற்கனவே பார்த்தது தான். இப்படியே போனால் நிலைப்பது கொஞ்சம் ரிஸ்க். ‘யாமிருக்க பயமே’ போன்ற டெரர் ஸ்கிரிப்ட்கள் இவரைக் காப்பாற்றும்.

சேதுவின் இடது + வலதாக நடித்தவர்கள் - வலதாக நடித்தவர் பெயர் ராமச்சந்திரன் துரைராஜ். நான் மகான் அல்ல, சதுரங்கவேட்டை, சில அருமையான குறும்படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திலும் மிரட்டுகிறார். இன்னும் கொஞ்சம் ரியாக்ஷங்களை முகத்தில் கொண்டு வந்தால் பெரிய எதிர்காலம் இருக்கிறது. இடது கையாக நடித்தவரும் பல படங்களில் வந்திருக்கிறார். இதில் கவர்கிறார். இவர்கள் இருவரைத் தவிர பலர் இருக்கிறார்கள் சேது கேங்கில். அவர்களும் சூப்பர்.

‘ஆடுகளம்’ நரேன் – 90களில் பாலுகேந்திராவின் ‘கதை நேரம்’ காலத்திலிருந்து நடித்துவந்தாலும், இன்றைய தமிழ் சினிமாவில் தவிரிக்க முடியாத கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகி விட்டார். வாழ்த்துக்கள்.  
‘ஆரண்ய காண்டம் (காளையன்)’ குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் இரண்டாம் பாதியில் வருகிறார். படம் பார்த்த பலர் இவரை ஆரண்ய காண்டம் பாதிப்பில் ‘ஆஹா, ஓஹோ’ என்கிறார்கள். இவரைக் காட்டியவுடன் அடையாளம் கண்டு தியேட்டரும் விசிலடிக்கிறது. ஆனால் ஆரண்ய காண்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த நடிப்பெல்லாம் இவருக்கு சப்ப மேட்டர் (கடல் படத்தில் கூட அசத்தியிருப்பார். கவனித்துப் பார்த்தால் தெரியும்) இதில் கொஞ்சம் ஓவர் அக்ட்டிங் போலத் தெரிந்தது (கூத்துப்பட்டறை “நாடக” பாதிப்போ?). அதை காமெடியாகவெல்லாம் ரசிக்க முடியவில்லை. வசனமேயில்லாமல் இவர் நடித்தக் குறும்படம் ஒன்றிருக்கிறது. அதைப் பார்த்தால் தெரியும் எத்தனை பெரிய நடிகனைப் பயன்படுத்தத் தெரியாமல் நாம் வீணடித்துக் கொண்டிருகிறோம் என்பது. ‘பாண்டிய நாடு’ படத்திலும் இவரை வீணடித்திருப்பார்கள். அதுவும் சரிதான், ஆரண்ய காண்டம் படக் கதாப்பாத்திரம் போல் ஒன்று இவருக்கு (வேறு எந்த நடிகருக்கும்) இனிமேல் அமைவது ‘மிராக்கில்’ தான்.

THE LOST PARADISE குறும்படம் - https://www.youtube.com/watch?v=cz-BB93ZVws
 
ஒளிப்பதிவாளர் Gavemic U Ary – படமே இவரை நம்பித் தான் என்பது போல் இருக்கிறது. இயக்குனர் சொன்னதை விட பலமடங்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார் என்பது படக்குழுவினர் இவரைப் பற்றிச் சொல்வதிலிருந்து தெரிகிறது. ‘Director of Cinematography’ என்று பெயர் போட்டார்கள். ஆக ஷாட்களை கம்போஸ் செய்வதிலிருந்து இவரது பங்களிப்பு இருக்கிறது என்று தெரிகிறது. பல காட்சிகளில் ஸ்கிரீன் முழுக்க ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அருமையாக கம்போஸ் செய்து மதுரை “சிட்டி”யை அழக்காகக் காட்டியிருக்கிறார்கள். படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் வண்ணங்கள் அற்புதம். அடுத்தடுத்து பல இயக்குனர்கள் இவரை அழைத்துப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. டிரைலர் ஹிட் ஆனதற்கே இவர் தானே காரணம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – A Musical Gangster Story என்று போட்டதற்கு கார்த்திக் “படத்தில் நிறைய transitions இருக்கிறது. அதையெல்லாம் மியூசிக் மூலமாகத் தான் நகர்த்தப் போகிறோம்” என்று சொன்னார். எனது இசையறிவு உலகமறிந்தது என்பதால் எந்த அளவிற்கு இசை கதையோட்டத்தில் பயன்பட்டது என்று சொல்லத் தெரியவில்லை. பின்னணி இசை ‘ஆரண்ய காண்டம்’ போல் அநியாயத்துக்கு அசத்தலாக இல்லையென்றாலும் நன்றாககே இருந்தது. பாடல்கள் பிரமாதம் என்பது பழைய செய்தி. ஆனால் Sound Design ஏரியாவில் பிரமாதமாக உழைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது (Vishnu Govind and Sree Sankar) நல்ல ஸ்பீக்கர்களைக் கொண்ட மல்டிப்ளக்ஸ்களில் இந்தப் படம் பார்ப்பது மிரட்டலாக இருக்கும்.

படத்தொகுப்பாளர் Vivek Harshan. இவர் யாரென்றே தெரியவில்லை. அசத்தியிருக்கிறார். இவர் தனது வேலையைச் சரியாகச் செய்திருக்கவில்லையென்றால் படம் படுத்திருக்கும். மிகவும் குழப்பமான, கத்திமேல் நடப்பது போன்ற இந்த ஸ்கிரிப்டிற்கு அருமையாக படத்தொகுப்பு செய்து படத்தைப் புரிய வைத்திருக்கிறார் இவர். ஹாட்ஸ் ஆஃப்! டிரைலர் பட்டையைக் கிளப்பியத்ற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். அதிலேயே இவரது ஆளுமை தெரிந்தது. படத்திலும் அப்படியே.

சிம்ஹா வீடு, கருணா வீடு, மதுரைத் தெருக்கள் எல்லாம் அட்டகாசமாக இருந்தது. கலை இயக்கம் அற்புதம். சேது அறிமுகக்காட்சியில் உயிரோடு ஒருவனைக் கொளுத்தும் காட்சியிலிருக்கும் துல்லியம் சூப்பர். டிரைலரிலேயே இந்தக் காட்சி அசத்தும். ஆனால் சித்தார்த் முகத்தில் தண்ணீர் தான் ஊற்றுகிறார்கள் என்பதும் துல்லியமாக படத்தின் முதல் டீசரிலேயே தெரிந்தது. டிசைன் டிசைனாக இருக்கும் கத்தி, அருவாக்களைப் பார்த்தால் ஒரிஜினலாக மிரட்டுகிறது ஆனால் துப்பாக்கிகளைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. அவற்றை மதுரை மீனாட்சியம்மன் கோவில் சந்தையில் மூணு பத்து ரூபாய்க்கு வாங்கியிருப்பார்கள் போல. கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

லட்சுமி மேனன் – படத்தில் இவர் எதற்கு என்றே தெரியவில்லை. ஒரே ஒரு முக்கியமான இடத்தில் ஹீரோவை கோர்த்துவிடுவதில் மட்டும் தான் இவரது பங்கு இருக்கிறது. ஆனால் அதையும் வேறு யாரையாவது வைத்துச் செய்திருக்கலாம். இவரது பகுதியை வெட்டியிருந்தால் படம் இன்னும் டிரிம்மாக நீட்டாக இருந்திருக்கும். ‘கண்ணம்மா’ என்று தொடங்கும் பாடலலையும், சிம்ஹாவுடன் சேர்ந்து ‘பாண்டி நாட்டுக்கொடி’க்கு இவர் ஆடும் டீஸரையும் பார்த்து பெரிதாக எதிர்பார்த்திருந்தேன். புஸ்ஸாகிப்போனது. ஹீரோயின் வேண்டுமே, அவருக்கு காட்சிகள் வேண்டுமே என்று தண்டமாக எதையோ எடுத்திருக்கிறார்கள். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கார்த்திக் சுப்பாராஜ் போன்ற young, new-gen இயக்குனர்கள் படமெடுத்தால் கூட ஹீரோயின்களுக்கு வேலையில்லாமல் இருப்பது வருத்தம் தான்.

இதற்கு மேல் இயக்குனர் பெருமை, படம் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கும் என்பதால் படம் பார்க்காதவர்கள் வழக்கம் போல கடைசி பத்திக்குச் சென்றுவிடவும். படம் பார்த்து முடித்த பின்னர் அவசியம் விட்டுப்போனவற்றை மறக்காமல் வந்து வாசித்துவிடுங்கள்.

*********************Spoilers*********************

“இது அந்த மாதிரி படம் இல்ல சார். சமுதாயத்துக்கு ஸ்ட்ராங்கா இரு மெசேஜ் சொல்ல போறோம்” என்று ஹீரோ வொல்வதாக டிரைலரிலேயே ஒரு வசனம் வந்தது. அது உண்மை தான். பலருக்கு ஸ்ட்ராங்காக பல மெசேஜ்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். “நான் கேங்ஸ்டர் படம் மட்டும் தான் புரொடியூஸ் பண்ணுவேன்” என்று தயாரிப்பாளர் சொல்வதும், ஜஸ்ட் லைக் தட் “நான் கூடத் தான் ரெண்டு கதை ரெடியா வச்சிருக்கேன்” என்று குடித்துவிட்டு கருணா சொல்வதும், “கண்டவனெல்லாம் நடிக்கும் போது நீயே ஏன் நடிக்கக்கூடாது” என்று சேதுவைப் பார்த்து அவனது சகாக்கள் சொல்வதும் என்று சீரியஸான சினிமா மீடியத்தை மக்கள் எவ்வளவு சாதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். தயாரிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடி, ஹீரோக்கள் செய்யும் அராஜகம் போன்றவற்றையும் தொட்டுச் சென்றிருக்கிறார். சினிமாவில் உள்ளவர்களுக்கு இது நன்றாகவே புரியும். சினிமா என்பது எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்தது, ஒரு சினிமா இயக்குனரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்தை அருமையாகச் சொல்லி, யாரும் இதுவரை தொடாத ஒரு உயரத்தை தனது இரண்டாவது படத்திலேயே (முதல் ஸ்கிரிப்ட்டிலேயே) தொட்டிருக்கிறார் கார்த்திக்.

ஒரு இயக்குனரின் ஆளுமையை இந்தப் படத்தில் கண்டேன். “என்னைப் பார், நான் ஒரு தாதா” என்று வலுக்கட்டாயமாக காட்சிகளைத் திணிக்காமல், அவர்களது சாதாரண வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்று யதார்த்தமாகக் காட்டடியிருக்கிறார் இயக்குனர். சாம்பார் சாதம் சாப்பிட்டுக்கொண்டே சாகவாசமாக தன்னைக் கொல்ல வந்தவனை விசாரிப்பது, நிதானமாக டம்பல்ஸ் தூக்கி - குளித்து முடித்து - ரிலாக்ஸ் ஆகி - சாமி கும்பிட்டு - திருநீர் பூசி - காரில் கொலை செய்யக் கிளம்பிப் போகும் ஸ்டைல், டிரமாட்டிக் ரீசன்கள் எதுவுமில்லாமல் ‘கெத்தாக இருக்கிறது’ என்பதற்காகவே சேது என்ற ஒருவன், முதலில் ஒரு சண்டைக்காரனாகி, பின்னர் ரௌடியாகி, பின் ஒன்றிரண்டு பெரிய செய்கைகளுக்குப் பிறகு கேங்ஸ்டர் என்று உயருவது, “என்னை மிஞ்ச எவனும் இல்லை” என்ற மொட்டைக் கர்வம் இல்லாமல் தன்னிலை உணர்ந்து “வாழும் வரை கெத்தாக வாழ வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற நினைப்பில் ஸ்ட்ராங்காக இருப்பது, டைட்டானிக் படம் பார்த்துக்கொண்டு சின்ன வீட்டுடன் ஜல்சாவில் இருக்கும் சக கேங்ஸ்டர், ஆளு / பஞ்சாயத்திற்கேற்ப பேகேஜ் போட்டு தொழில் செய்யும் தர்மம் என்று என்ன தான் QT, Guy Ritche சாயல்கள் இருந்தாலும் அவற்றை தமிழில் பார்க்க செம்ம ஸ்டைலாக இருக்கிறது. ‘படமெடுக்கத்தான் ஃபாலோ செய்கிறார்கள்’ என்று தெரிந்த பிறகு சித்தார்த்துடன் சேர்ந்தது கொண்டு சிம்ஹா கூட்டணி செய்யும் அலப்பறை தூள். ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் சொல்ல வந்த விஷயத்த்தைத் தாண்டி இயக்குனருக்கு இருக்கும் “கேங்ஸ்டர்” மோகத்தின் உச்சம் அந்தக் காட்சிகள். காமெடியாக இருந்தாலும் “கேங்ஸ்டர்” என்பது சீர்யஸ் பிஸினஸ் என்பதையும் அடுத்த ஒரு சில காட்சிகளிலேயே சொல்லிவிடுகிறார் – “தூரத்துல இருக்கும்போது இருந்த பயம், கூப்டுத் தோள்ல கைபோட்ட உடனே போயிருச்சுல்ல” – செம சீன்.

நான் மிகவும் ரசித்த காட்சி, தியேட்டர் டாய்லெட் சீன் தான். செம ஸ்டைலாக இருந்தது அந்த ஒரே ஷாட்டும், அதில் சிம்ஹாவின் பெர்பாமன்ஸும்.

குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு சீக்வென்ஸ் இன்டர்வெல் பிளாக். சுலபமாகச் சிக்கிவிட்டனர் சுள்ளான்கள். சேதுவா கொக்கா!

சேதுவின் பிளாஷ்பேக் – முன்பெல்லாம் வசனத்தில் பிளாஷ்பேக்கைச் சொல்லி சிம்பிளாக முடித்துவிடுவார்கள், அல்லது அந்த கதாப்பாத்திரங்களை இளமை கெட்டப்பில் வந்து நம்மை சாவடிப்பார்கள், சமீபகாலமாக 2D அமிமேஷன்களைக் கொண்டு பிளாஷ்பேக் சொல்லும் முறை டிரெண்டாகி இருக்கிறது (மூடர்கூடம், சதுரங்க வேட்டை). இரண்டும் இல்லாமல், சேது தன் கடையைச் சொல்லச் சொல்ல, விஜய் சேதுபதியை வைத்து கார்த்திக் சீன்-பை-சீன் அதை நினைத்துப் பார்ப்பது போலக் காட்டியிருப்பது கிரியேட்டிவிட்டியின் உச்சம். செம சர்ப்ரைஸ், செம ரெஸ்பான்ஸ்!

இயக்குனர் ‘தலைவர்’ வெறியர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பீட்ஸாவிலேயே அதை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். இந்தப் படத்திலும் ஆங்காங்கே தலைவர் போட்டோ, பாடல் (“தளபதி மாதிரி ஒரு படம் எடுக்க போறேன்” என்று கார்த்திக் சொல்ல ‘சேது’ நிமிர ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ BGM), படக்காட்சி (கார்த்திக் தப்பிக்க நினைத்து மாட்டிக்கொள்ளும் காட்சி மீண்டும் தளபதி பின்னணியில்) எல்லாம் வந்துகொண்டே இருக்கிறது.

என்னதான் பாராட்டினாலும் படத்தில் சில பிரச்சனைகள், ஓட்டைகள் உண்டு. ஆஹா ஓஹோ வென்று படத்தைப் பாராட்டிவிட்டு “ரேட்டிங்” என்று வரும் போது மட்டும் முழு மனதாக 4 அல்லது அதற்கு மேல் கொடுக்காமல் 3.5, 3.75 என்றே நம்மவர்கள் சுற்றி சுற்றி வருவதற்குக் காரணம் அது தான். படம் நிறைய குறும்படங்களைச் சேர்த்துப் பார்த்தது போல இருந்தது. முதல் பாதியில் ஒரு கதை (முதல் படத்தை எடுக்க முயற்சிக்கும் இயக்குனர், ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கை), இடைவேளைக்குப் பிறகு ஒரு கதை (படமெடுக்க ஒத்துழைக்கும் கேங்ஸ்டர்), கிளைமாக்ஸில் ஒரு காமெடிக்கதை (அ.குமார் படமும் ரிசல்ட்டும்) என்று பிரிந்து பிரிந்து இருக்கிறது. இயக்குனர் சொன்ன transitions மற்றும் twists இவை தான். ஆனால் அது எவ்வளவு தூரம் convincing ஆக அமைந்திருக்கிறது என்பது தான் முக்கியம்.

கொரிய சினிமாக்களான A Dirty Carnival (டைரக்டர் நண்பனுக்காக உதவும் கேங்ஸ்டர்), Rough Cut (நடிகராகும் கேங்ஸ்டர்) தமிழில் அஜித் நடித்த ‘ரெட்’ (பத்திரிக்கயாளர் கேங்ஸ்டரை ஃபாலோ செய்து விகடனுக்கு கதையெழுதுவது), வெள்ளித்திரை (குடைச்சல் கொடுக்கும் ஹீரோவிற்கு தெரியாமல் candid ஆக சில ஷாட்களை படத்தில் இணைக்கும் இயக்குனர்), QT யின் Pulp Fiction (வசனங்கள், ஷாட்கள், BGM), Guy Richie யின் Rock n’ Rolla போன்ற படங்கள் வரிசையாக நியாபகத்திற்கு வந்தது. நாசர் கேரக்டரைப் பார்த்து ‘பிரதாப் போத்தன்’ நியாபகத்துக்கு வந்தது போல, ஏனென்று தெரியவில்லை எனக்கு ‘Power Star’ சீனிவாசன் நியாபகத்துக்கு வந்தார். திரையில் கோமாளியாகப் பார்க்கும் இந்த “டாக்டர்” உண்மையில் ஒரு ‘ரியல் எஸ்டேட் தாதா’வாக இருக்கவும் கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது இல்லாமலா கோர்ட் கேஸ் என்று அலைகிறார்?

நண்பர் ஒருவர் தனக்கு காட்சிகளில் Sergio Leone (Dollars Trilogy) மற்றும் Clint Eastwood படங்களின் தாக்கமும் இசையில் Ennio Morricone தாக்கமும் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார். ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைப்பைத் தூண்டியிருக்கிறது படம்.

ஆங்காங்கே பலமாக ரசிக்கவைக்கும் படம், மொத்தமாக சிறப்பாக இல்லாதது வருத்தமளிக்கிறது.

கேங்ஸ்டர் சேதுவின் பின்னணி, அவனது செய்கைகள் எல்லாம் டெரராக இருந்தாலும், அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள கார்த்திக் கையாளும் மூன்று வழிகள் செம மொக்கை. இவர்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பின்னர் வருகிறதென்றாலும், சரக்கு, கில்மா படம், அருவை தாத்தா சீன்கள் கொஞ்சம் அதிகமாகப் பட்டது. குறைத்திருக்கலாம் அல்லது வேறு ஆக்கப்பூர்வமான வழிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் தான் அவ்வளவு காமெடிகள் வருகிறதே, பிறகெதற்கு இதையும் மொக்கைக் காமடியாகவே நகர்த்த வேண்டும்? அதே போல இரண்டாம் பாதியில் நடிப்பு ஆர்வத்திற்காக இப்படியெல்லாம் கூடவா ஒரு தாதா அசிங்கப்படுவான் என்றும் தோன்றியது. தயாரிப்பாளரையே தூக்கி வந்து ஒப்புக்கொள்ள வைக்கும் இவனால் உயிர்பயம் உள்ள டைரக்டரையோ, நடிப்பு சொல்லிக்கொடுக்க வந்திருக்கும் சிரிப்பு குருவையோ “நான் நடிக்கிறது தான் நடிப்பு” என்று மிரட்டி ஏன் கட்டாயப்படுத்தியிருக்ககூடாது? அதையெல்லாம் விட பெரிய கொடுமை, “பத்திரிக்கைல ஏன் பொம்மப் படம் போட்டுருக்க என் படத்தை ஏன் போடல” என்று கோபப்பட்டு போட்டவனைக் கொளுத்தும் தாதா, சாதாரண எஸ்.ஐ வருவதற்கே பயப்படுகிறார். இன்னும் contrast ஆக கார்த்திக் கேட்ட உடன் கேங்காக வொயிட் அண்ட் வொயிடில் உட்கார்ந்து கொண்டு தங்களது அருமை பெருமைகளை கேமராவில் ஒப்பிக்கிறார். “மாட்டிக்கொள்கிற பயம்” பற்றி சேதுவின் உண்மை மனநிலை என்ன என்ற தெளிபே இல்லை. சேது குரூப் செய்யும் கொலைகள் முதற்கொண்டு அனைத்தையும் “பதிவு” செய்யும் கார்த்திக், இவ்வளவு பெரிய விஷயத்தை “மறந்துட்டேன்” என்று சாதாரணமாகக் கடைசியாகச் சொல்கிறார். தன் வாழ்க்கையே கேள்விக்குறியாகிப் போன சமயத்தில் இதை வலுவாக உபயோகித்து எஸ்கேப் ஆகியிருக்கலாம்.

ஹீரோயின், காதல் எப்பிலோட்கள் மொக்கை என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.

இரண்டாம் பாதியில் நடிப்பு சொல்லித் தர ‘குரு’ வந்திறங்கியவுடன் படம் போரடிக்கத் தொடங்கிவிட்டது. அ.குமார் படம் என்று அவர்கள் தியேட்டரில் ஓட்டும் படத்தின் நரேஷனே சொல்லிவிடுகிறது, நிஜமாகவே இப்படி ஒரு படம் வந்திருந்தாலும், அது இவ்வளவு சிரிப்பாகவெல்லாம் இருக்க நிச்சயம் சாத்தியமே இல்லை. சரி, “அந்த” படத்தின் முடிவு எப்படி இருந்திருக்கும்? இவர்கள் சொல்வது போல் அ.குமார் ஓடோ ஓடென்றெல்லாம் ஓடியிருக்க வாய்ப்பே இல்லை (இதற்கு இவ்வளவு ஆராய்ச்சிகள் தேவையில்லையோ?) வெள்ளித்திரை படத்தில் இதை அருமையாக handle செய்திருப்பார்கள். அந்த பட ரிசல்ட்டால் கோபப்பட்டு, பின் ஒரு குழந்தை ரசிகையால் திருந்தி, கார்த்திக் மாட்டிய பிறகு சினிமா பாஷை (சுத்த வொர்ஸ்ட்) பேசி அவனை மன்னித்து விடுவதெல்லாம் சுத்த சினிமாத்தனம். இதற்குமுன் இருந்த யதார்த்தம் கிளைமாக்ஸில் இல்லை. அதன் பிறகும் post-climax போல “அடி உதவுறா மாதிரி” வசனப் பின்னணியில் சித்தார்த் களமிறங்குவதும் சுத்தத் சினிமாத்தனம்.

ஆக, தப்பித்து ஓடப்பார்க்கும் கார்த்திக்கை சேது பிடித்து அடித்து, தயாரிப்பாளரையும் கொண்டு வந்து உட்காரவைத்து படமெடுக்கச் சம்மதிக்க வைக்கும் வரை படம் எனக்கு செம்மையாகப் பிடித்திருந்தது.

வித்தியாச கேங்ஸ்டர் கதையை எடுக்க நினைத்து, எந்த வகையிலும் (genre) அடங்காத மாதிரி பார்த்து பார்த்து ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் (முதல் பாதி action, crime, இரண்டாம் பாதி action, ஆங்காங்கே கொஞ்சம் drama). ஆனால் அது ரொம்பவும் வித்தியாசமாகப் போனது தான் பிரச்சனை. 

இதனால் தான், படத்திற்கு இது தான் முடிவா? அல்லது எப்படி முடிப்பது என்று முடிக்கத் தெரியாமல் இயக்குனர் படத்தை முடித்துவிட்டாரா? அல்லது எதைச் சுற்றி (கதாப்பாத்திரம், கதை) படம் செல்கிறது என்ற தெளிவில்லாததால் இப்படி முடித்துவிட்டாரா போன்ற கேள்விகலெல்லாம் எழுகிறது. கேங்ஸ்டர் படமென்று நினைத்து வந்த ரசிகனுக்கு காமெடியைக் காட்டி ஆச்சரியப்படுத்த நினைத்தது நல்ல முயற்சி தான் (பேய் படம் என்று நினைத்து பீட்ஸா பார்க்க வந்தவர்களுக்கு Con movie ஒன்றைக் காட்டியதுபோல) ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே?

எனக்குத் தெரிந்த இன்னொரு பெரிய குறை, என்னதான் வேறுமாதிரி மதுரையைக் காட்டுகிறார்கள் என்றாலும், மதுரையின் ஸ்பெஷல்கள் எதையுமே ஒரு ப்ரேமில் கூடக் காட்டவில்லை. அதனால் nativity எனக்கு மிஸ்ஸிங்காக தெரிந்தது. அட, “ஜிகர்தண்டா”வை யாராவது ரசித்துக் குடிப்பது போல்கூட படத்தில் காட்சி இல்லை. கருணாவின் வளையல் கடையை மீனாட்சி அம்மன் கோவில் வீதி என்று ஒரு ஷாட்டிலாவது காட்டியிருக்கலாம். பெரியாரைக் காடியிருக்கலாம், தேவர் சிலையைக் காட்டியிருக்கலாம், பூக்கடை, கோணார் மெஸ் எதையும் காட்டவில்லை. எடுக்க விடவில்லையோ என்னவோ. அதே போல மான்டெஜில் வரும் ‘சேது கொலை முயற்சியும்’, சேது அறிமுகமாகும் ‘ரிப்போட்டர் எரிப்பும்’ ஒரே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. டிரைலர் பார்த்து விட்ட அவுட்டோர்ஸ் பிண்ணியிருப்பார்கள் என்று நினைத்தேன். அப்படியொன்றும் பிரமாதமாகவெல்லாம் இல்லை.

*********************End of Spoilers*********************

இவ்வளவு இருந்தும் படத்தை நான் நிச்சயம் இன்னொரு முறை பார்ப்பேன் என்பது தான் படத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி (கொஞ்சம் ஓவரோ?). இந்தப் படம் நிச்சயம் ஒருமுறைக்கு இருமுறை கூட அனைவரும் பார்க்க வேண்டிய, வணிக ரீதியாக வெற்றியடைய வேண்டிய படம். கார்த்திக் சுப்பாராஜ் தனது இரண்டாம் படத்தையும் வெற்றிகரமான படமாக எடுத்துவிட்டதால், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் சிறப்பாக இடம்பெறுகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேங்கம் இல்லை. ஆனாலும், எதையும் காட்டலாம் என்ற மனநிலையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் வெளியே வர வேண்டும் என்பது ரசிகனாக எனது வேண்டுகோள்.

பி.கு – படம் பார்த்த நேரத்தைவிட அதைப் பற்றி எழுத அதிக நேரம் செலவளித்திருப்பதால், பதிவைப் படிக்கும் நண்பர்கள் எழுத்துப்பிழைகளை மன்னித்து பதிவில் சொல்லப்பட்ட விஷயம் நன்றாக இருப்பதாகத் தோன்றினால், உங்களது நண்பர்களுக்கு ‘ஷேர்’ செய்து, பதிவு பலரைச் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

You Might Also Like

9 comments

  1. முதலில் ஒரு நன்றி பேஸ்புக் எழதாமல் அதுவும் ரொம்ப பெரிய பதிவாய் எழதியமைக்கு இன்னும் விமர்சனத்தை படிக்கலை படித்துவிட்டு வரேன்!!!!

    ReplyDelete
  2. படம் ரொம்ப பெரிது அது மட்டும்மே கொஞ்சம் கடுப்பு மற்றபடி எனக்கு பிடித்து இருந்தது உங்க பதிவிற்க்கு பிறக்கு இவ்வளவு இருக்கா என தோனுது!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சின்னமலை. படம் எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் குறைகளாகப் பட்டதை சொல்லாமல் இருப்பது தவறு என்று தோன்றியதால் சொல்லிவிட்டேன் - விமர்சன தர்மம் :)

      Delete
  3. அருமையான விமர்சனம் (y)

    ReplyDelete
  4. Great.... I will be sharing it on my FB.. for your wounder full review.. :-)

    ReplyDelete
  5. உங்கள் விமர்சனங்கள் எல்லாமே எனக்கும் இருக்கிறது! ஆச்சர்யம்! :)

    ReplyDelete
  6. சினிமா என்பது விஷூவல் மீடியம். அதை கணெக்கிலெடுக்கவே இல்லை இந்த இயக்குனர். ஜவுளிக்கடை திருடி என்கிற கதாபாத்திரம் ஆடிப்பாடுவதற்கு...காதலிப்பதற்கு மட்டுமே பயன் படுகிறது, நாயகன் திரைப்படத்தில் ஒவ்வொரு கரெக்டரும் திரைக்கதையை நகர்த்தும். ராம் கோபால் வர்மாவின் உதயம் கேங்ஸ்டர் பட இலக்கணத்தை பரிபூர்ணமாக கொண்டு இருந்தது. ஏன் பாஷா ! எங்க வீட்டுப்பிள்ளைக்குப்பிறகு தமிழ் சினிமா திரும்ப திரும்ப கையாண்ட திரைக்கதை பார்முலா.சண்டைக்கோழி கூட அற்புதமான கேங்ஸ்டர் படமே ! கொண்டாடப்பட வேண்டிய தரத்தில் இப்படம் இல்லை.

    ReplyDelete
  7. Fantastic Review....Keep it Up Boss..!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...