BANGALORE DAYS | Malayalam | 2014
8:18:00 AM
Anjali Menon – மலையாளத் திரையுலம் தற்போது உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரே பெயர். ஒரு வாரம் முன்பு வரை மஞ்சு வாரியர் ரிட்டன்ஸ் பற்றிப் பேசிக்கொண்டிருந்த மீடியா இப்பொழுது முழுக்க முழுக்க அஞ்சலி மேனனது பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறது. காரணம் அவரது Bangalore Days. 8.5 கோடியில் தயாரிக்கப்பட்டு முதல் வாரத்திலேயே 10 கோடி சம்பாதித்திருக்கிறது இந்தப் படம். ‘த்ரிஷ்யம்’ சாதனையை சுலபமாக இந்தப் படம் தாண்டிவிடும் என்பது நிதர்சனம்.
இயக்குனர் – Anjali Menon
2009 ஆம் ஆண்டு வெளியான Kerala Café ‘யில் Happy Journey என்ற அருமையான குறும்படத்தை எடுத்த்தன் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்திருக்கிறார் அஞ்சலி மேனன் என்றாலும், 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற Manjadikuru தான் இவரது முதல் முழு நீளப்படம். சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரமும், மாநில அளவில் பல விருதுகளையும் அள்ளிய இந்தப் படம் தன் தாத்தாவின் இறுதிச் சடங்குகளுக்காக ஊருக்கு வரும் சிறுவனைப் பற்றியது. இயக்குனராக இவரது மூன்றாவது படம் ‘Bangalore Days’. துபாயில் வளர்ந்து, கோழிக்கோட்டில் மேற்படிப்பை முடித்து, London Film School ‘லில் சினிமா கற்ற இவரது வளர்ச்சி இன்று இந்தப் படத்தின் மூலம் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. கணவன், குழந்தை என்று ஒரு குடும்பத் தலைவியாக இருக்கும் போதும், இன்று கேரளமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம், வீட்டிற்குள் முடங்காமல் கனவுகளைத் துரத்திப் பிடித்த இவரது உழைப்பு தான்.
சமீபகாலமாக மலையாள சினிமா தரத்திலும் வியாபாரத்திலும் பெரும் வளர்ச்சி அடைந்து வருவது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் Bangalore Days மற்றுமொரு மைல் கல். இந்தப் படத்திற்காக இயக்குனர் சேர்த்திருக்கும் நட்சத்திரக் கூட்டணிதான் படத்தின் மிகப்பெரிய பலம். பாலிவுட்டே காணாத ஒரு அருமையான + ஆச்சரியமான இளமைக் கூட்டணி. தமிழில் இப்படி ஒரு கூட்டணி அமைய வாய்ப்புகளே இல்லை; வாய்ப்பிருந்தும் நடக்காது என்றும் மாற்றிச் சொல்லலாம்.
தயாரிப்பாளர் - Anwar Rasheed
மலையால சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை வைத்து 2005 ஆம் ஆண்டு ‘ராஜமாணிக்கம்’ என்கிற பிரம்மாண்ட வெற்றிப் படத்துடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கியவர் - தயாரிப்பாளராக அல்ல - இயக்குனராக. மீண்டும் மோகன்லாலை வைத்து Chotta Mumbai (2007), அடுத்து மம்மூட்டியை வைத்து Annam Thampi (2008), மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை வைத்து Ustad Hotel (2012), ஐந்து விதமான பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் ஐந்து குறும்படங்களைக் கொண்ட Anchu Sundharikal (2013) படத்தில் ஃபகத் ஃபாசிலை வைத்து Aami என்ற குறும்படம், அஞ்சலி மேனனைப் போலவே Kerala café ‘யில் Bridge என்ற குறும்படம் என்று இன்றுவரை தன்னை ஒரு வெற்றி இயக்குனராகவே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது உஸ்தாத் ஹோட்டலுக்கு கதை எழுதியவர் அஞ்சலி மேனன். இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. அதில் ஒன்று அஞ்சலி மேனனுக்குக் கிடைத்தது - சிறந்த திரைக்கதை - வசனத்திற்காக (National Film Award for Best Screenplay - Dialogues).
ஒளிப்பதிவாளர் - Sameer Thahir
மம்மூட்டி நடிப்பில் வெளியான Big B (2007) மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், 2009 ஆம் ஆண்டு Daddy Cool படத்திலும் ஒளிப்பதிவில் கவனிக்க வைத்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு Nidra, Diamond Necklace (ஃபகத் ஃபாசில் ஹீரோ) படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், 2011 ஆம் ஆண்டு Chaappa Kurish (தமிழில் ‘புலிவால்’) படத்தில் இயக்குனராக அறிமுகமானார். New Wave மலையாள சினிமாக்களில் மிக முக்கியமான படமாகப் பார்க்கப் படுகிறது இந்தப் படம். இதில் ஃபகத் ஃபாசில் வித்தியாசமான நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அடுத்து 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய மற்றுமொரு அருமையான Road Movie - Neelakasham Pachakadal Chuvanna Bhoomi. இதில் துலகர் சல்மான் ஹூரோ. இவை தவிர Anchu Sundharikal (2013) படத்திலும் Isha என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார் – நிவின் பாலி ஹீரோ.
கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருந்தது ‘Bangalore Days’ ஒளிப்பதிவு. கொடூர டிராபிக் பின்னணியில் தான் நான் பெரும்பாலும் பெங்களூரைக் கண்டிருக்கிறேன். ஆனால் இது எவ்வளவு ரம்மியமான நகரம் என்பதை சமீர் தனது ஒளிப்பதிவின் மூலம் உணர்த்தியுள்ளார். பாடல்களில் ததும்பும் இளமை அவற்றை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஃபகத்-நஸ்ரியா வீட்டினுள் செய்திருக்கும் லைடிங் ஒரு ஸ்பெஷல் மென்ஷன்.
இசையமைப்பாளர் – Gopi Sunder
மோனன்லாலின் Flash (2007) படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை 50 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். ப்ரித்விராஜின் Anwar (2010) படத்தில் கவனம் ஈர்த்தவருக்கு பெரிய ப்ரேக்காக அமைந்த படம் – உஸ்தாத் ஹோட்டல். துல்கரின் ABCD (2013), Salala Mobiles (2014) – நஸ்ரியா ஹீரோயின், ஃபகத் ‘தின் D Company (2013), One By Two (2014), நிவினின் 1983 (2014) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Bangalore Days படத்தின் மாங்கல்யம் பாடல், வெளியான நாள் முதலே ஹிட். இந்தப் பாடலைத் தவிர, பகத்-நித்யா மேனன் தோன்றும் ஆங்கிலப் பாடல் செம சூப்பர். 3 மணிநேரப் படத்திற்கு பின்னணி இசை கேட்கும்படி இருந்தால் தான் ரசிகர்களை அமைதியாக அமர வைக்க வேண்டும். இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார் கோபி சுந்தர்.
அடுத்து படத்தில் நடித்திருப்பவர்கள்.
மேல் சொன்ன டெக்னீஷியன்கள் வேலை செய்த படங்களில் எல்லாம் பொதுவாக இருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் இந்தப் படத்தில் உண்டு – துல்கர் சல்மான், பகத் ஃபாஸில், நிவின் பாலி, நஸ்ரியா நசிம், ‘பூ’ பார்வதி, நித்யா மேனன், இஷா தல்வார். இவர்கள் இதற்கு முன்னும் பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர முக்கிய கதாப்பாத்திரங்களில் நம் ‘குண்டூஸ்’ கல்பனா, பிரதாப் போத்தன், ‘கடலோரக் கவிதைகள்’ ரேக்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படி பல்வேறு படங்களில் பலமுறை இணைந்திருந்தவர்களை ஒரே படத்தில் இணைத்தது தான் அஞ்சலி மேனன் கண்ட முதல் வெற்றி. படத்திற்கான் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமானதும் இதனால் தான். இவர்களை இணைத்தது அஞ்சலி மேனன் எழுதியிருந்த அருமையான கதை + இளமையான திரைக்கதை. குடும்பம், உறவுகள், நட்பு, காதல் என்று சரியான விகிதத்தில் அனைத்தையும் கலந்து, தெளிவான கதாப்பாத்திரங்களை உருவாக்கி, அனைவருக்கும் திரையில் சரியான அளவு இடம் கொடுத்து, பெங்களூரையும் ஒரு கதாப்பாத்திரமாகவே காட்டி, ரசிக்கும்படியான வசனங்களின் உதவியுடன் மூன்று மணி நேரம் ஓடினாலும் கொஞ்சமும் அலுக்காத வகையில் படத்தைச் செதுக்கியிருக்கிறார் அஞ்சலி மேனன்.
கதை + கதாப்பாத்திரங்கள்
கிருஷ்ணன் P P (எ) குட்டன் பார்வையிலிருந்து கதை தொடங்குகிறது. முதல் காட்சியில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றின் இன்டர்வியூவில் குட்டன் சொல்லும் நீண்ண்ண்ட பதிலிலேயே அவனது கதாப்பாத்திரம் எப்படி என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. கிராமத்தில் வளர்ந்த, தன் மண்ணையும் கலாச்சாரத்தையும் பெரிது விரும்பும், பெங்களூர் போன்ற பெரும் ஐ.டி உலகத்தைப் பார்த்து மிரளும், ஆனாலும் அங்கு போக நினைக்கும் ஒரு சராசரி கேரள இளைஞன். குட்டனாக அடித்து பட்டையைக் கிளப்பியிருப்பவர் - நிவின். இவர் வரும் இடங்களில் எல்லாம் காமெடி கலைகட்டுகிறது. தான் மனதில் நினைத்த கேரளப் பெண்ணை கண்டுவிடும் தருணத்தில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்களும், அலப்பறைகளும் ஆசம், ஆசம். ஒரே பாட்டில் இவர் மார்டன் ஆகி, சால்சாவெல்லாம் ஆடி, பிறகு யூ டர்ன் எடுத்து மீண்டும் பழைய நிலைக்கு வருவது செம காமெடி. இவருக்கு இணையாக அசத்தியிருப்பவர், அம்மாவாக நடித்திருக்கும் கல்பனா. கணவன் சாமியாராகப் போய்விட்ட உடன் இவர் வெளியில் ஒரு மாதிரியும், உள்ளே மகனுடன் ஒரு மாதிரியும் பேசும் இடங்களும் அதற்கடுத்தடுத்து கொடுக்கும் அலப்பறைகளும் சூப்பரோ சூப்பர். நமக்கு கோவை சரளா மாதிரி மலையாள சினிமாவிற்கு கல்பனாவை. கலக்கிகொண்டிருக்கிறார்.
குட்டனது சித்தி மகள் திவ்யா பிரகாஷ் (எ) குஞ்சு. துபாயில் படித்தவள். பெங்களூரில் M.B.A படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவில் இருப்பவள். ஆனால் விதி யாரை விட்டது. ஜோசியக்காரன் செய்யும் சதியால் அவசர திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மணமகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியர், சிவதாஸ் - பகத். திவ்யா வாக – நஸ்ரியா. அறிமுகக் காட்சியிலேயே தனது க்யூட்னஸால் கவர்ந்து விடுகிறார் நஸ்ரியா. மணக்கோலத்தில் அள்ளுகிறார். ஆசையாசையாக பெங்களூருக்கு வருவதும், பார்த்து பார்த்து கணவனுக்குப் பணிவிடை செய்வதும், சிறு ஸ்பரிசங்களில் சிவப்பதும், கணவன் கண்டுகொள்ளாத்தால் தனிமையில் வாடுவதும், பின்னர் குட்டன் / அஜுவுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதும் என்று சின்னச் சின்ன செய்கைகளாக இருந்தாலும் அசத்துகிறார். பத்தாத குறைக்கு ஒரு பாடல் வேறு பாடியிருக்கிறார். முதல் முறை ஃபகத்தும் இவரும் இணையும் காட்சியில் இவர் முகத்தில் காட்டும் ரியாக்ஷங்கள் இருக்கிறதே – சூப்பரோ சூப்பர் (பொண்ண நல்லா பாத்துக்கனும் ஃபகத் – பிரச்சன ஆச்சு செம காண்டாகிருவோம் ஜாக்கிரதை)
திவ்யாவின் மாமன் மகன் அர்ஜுன் (எ) அஜு. பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு உலகத்தை சுற்றிக்கொண்டிருக்கும் நவீன நாடோடி. பைக் ரேசர். கோபக்காரன். ஊரே இவனை வெட்டிப்பயல் என்று நினைத்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே என்றிருப்பவன். பெங்களூர் மீது இவனுக்கு அளவுகடந்த மோகம். அஜு ‘வாக – துல்கர். படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே வருகிறார் துல்கர். ‘நீலாகாசம்...’ படத்திலும் இதே போன்றதொரு freaky கேரக்டர் ஸ்கெட்ச் தான் என்றாலும், இந்தப் படத்தில் இன்னும் பொருத்தமாக இருக்கிறார். கூடவே MOTO RACING எல்லாம் செய்து அசத்தியிருக்கிறார். இவரது கதாப்பாத்திர வடிவமைப்பிற்கு அப்படியே நேர் எதிராக இவருக்கும் பார்வதிக்குமான காட்சிகள் அவ்வளவு இதமாக இருக்கிறது. சூப்பர்.
குட்டன், குஞ்சு, அஜு மூவரும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் ஒரு அருமையான நட்பு, புரிதல், அன்பு இருக்கிறது. வெவ்வேறு காரணங்களுக்காக எப்படியோ அவர்களது கனவுநகரமான பெங்களூருக்கு வந்து சேர்கிறார்கள். ஊர் நினைப்பிலேயே இருக்கும் குட்டனுக்கு அல்ட்ரா மாடர்ன் மீனாக்ஷியுடன் (இஷா) பழக்கம் ஏற்படுகிறது. ஆங்கில ரேடியோ சேனலில் RJ ‘ வாக இருக்கும் சாரா ‘வின் மீது அஜுவிற்கு காதல் ஏற்படுகிறது. தன்னை கொஞ்சமும் கவனிக்காமல் வேலை வேலை என்று அழைந்து கொண்டிருக்கும் கணவன் தாஸ் ‘ஆல் குஞ்சுவின் மனம் வாடுகிறது. அடுத்தடுத்து இவர்களது வாழ்வில் என்னென்ன நடந்தது, மூவர் மட்டும் வாழும் இவர்கள் உலகத்தில் யார் யாரெல்லாம் சேர்ந்தார்கள் என்பது தான் Bangalore Days.
‘தட்டத்தின் மறையத்து’ பீலிங்கை வைத்து அருமையாக குட்டன் காதலை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இஷா தல்வார் இதில் அப்படியே ஆப்போஸிட். பிரதான கதாப்பாத்திரங்கள் மூவருக்கும் இணையான ஒரு கதாப்பாத்திரம் என்றால் அது ஃபகத் ‘திற்கு தான். இந்த சிவதாஸிற்கு என்று ஒரு தனி கதை இருக்கிறது. செம ரிச் ஆன இளமை ததும்பும் அந்த பிளாஷ் பேக்கின் நாயகி, நித்யா மேனன். சிறிது நேரமே வந்தாலும் மனதில் தங்கும் கதாப்பாத்திரம். புது மனைவியைப் பிடித்திருந்தாலும், பழைய காதலி நினைப்பிலேயே வாடுவதும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவதும், கண்டிப்பும், தனிமையும் சேர்ந்த ஒரு தேர்ந்த நடிகனுக்கான பாத்திரத்தில் வழக்கம்போல அசத்தியிருக்கிறார். ஆட்டோ டிரைவராக, சைக்கோவாக, பிசினஸ்மேனாக, அரசியல்வாதியாக, டாக்டராக, அப்பார்ட்மெண்ட் கேர்டேக்கராக, போலீஸ் அதிகாரியாக, லவ்வர் பாயாக, சந்தேகக் கணவனாக, பேண்டு வாத்தியக்காரனாக, ஓவியனாக, குருடனாக – எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் இவரால் மாட்டும் எப்படிக் கச்சிதமாகப் பொருந்திப்போக முடிகிறது என்று தான் தெரியவில்லை. இத்தனைக்கு ஆள் பார்க்க ஏறுநெற்றியுடன் குட்டியாகத் தான் இருக்கிறார்! நான் இந்த ஆளின் பயங்கர ஃபேன்! நீ கலக்கு சித்தப்பா...
படத்தில் பல நாயகிகள் இருந்தாலும் நம் மனதைக் கவர்வது RJ சாராவாக வரும் பார்வதி தான். நுணிநாக்கு ஆங்கிலத்தில் பாதி படம் நம்முடன் உரையாடும் சாரா ‘வை அஜூ தேடித் செல்கிறான். அப்போது நமக்கு அறிமுகமாகிறாள் சாரா. நடக்க முடியாத ஆனால் தன்னம்பிக்கையால் பறக்கக்கூடிய அளவிற்கு அசரடிக்கும் அழகு தேவதை, சாரா! புட்டி கண்ணாடியும், குருவிக்கூடு ஹேர் ஸ்டைலும், கண்களும் சேர்ந்து சிரிக்கும் புன்னகையுமாக செம அழக்காக இருந்தார் பார்வதி. மரியானை விட இதில் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தார். ஆனால் அது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. துல்கருக்கும் இவருக்குமான கடைசிகளில் சில (பழையதாக இருந்தாலும்) க்ளாஸிக் தரம்.
படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. ஃபகத்திற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் முசுடு போன்ற பாத்திரம், அதுவும் பின்னர் சரியாகிவிடும். தமிழ் வேலைக்காரி பாத்திரம் ஒன்று மட்டும் தான் நெகட்டிவ் கதாப்பாத்திரமாகக் காட்டப்படுகிறது. நாம் என்று மலையாளிகளை வெறும் டீ விற்பவர்களாகவும், மாராப்பை விளக்கி கதாநாயகனை மயக்கும் பெண்ணாகவும் காட்டுவதை நிறுத்துகிறோமோ அன்று தான் இவர்களும் நம்மைக் கேவலமாகக் காட்டுவதை நிறுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் அஞ்சலி மேனன் எழுதி தேசிய விருது பெற்ற உஸ்தாத் ஹோட்டலின் நிஜ ஹீரோவாகக் காட்டப்படுபவன் ஒரு தமிழன். இந்தப் படத்தில் இப்படி.
படமெங்கும் கொட்டிக்கிடக்கும் இளமை, டைட்டிலில் பிரதான கதாப்பாத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள், Free Hugs, Moto Racing போன்ற சினிமா காணாத புதுமை, கல்பனாவிற்கு எழுதப்பட்டதைப் போன்ற அருமையான கதாப்பாத்திரங்கள், ஆரம்பத் திருமணக் காட்சிகள், துல்கர் – பார்வதி மான்டேஜ்கள், நிவின் – கல்பனா காட்சிகள் என்று சின்ன சின்ன சீக்வென்ஸ்களில் இருக்கும் இளமை புதுமை, வில்லனே இல்லாமல் முழுக்க முழுக்க உறவுகளை மட்டும் வைத்தே கதை சொல்லப்பட்ட விதம், பெங்களூரை முழுதாகப் பயன்படுத்தியிருக்கும் அழகு என்று படம் பட்டையக் கிளப்புகிறது.
சமீபமாக இவர்கள் செய்திருக்கும் மகா முக்கியமான விஷயம், இரண்டு வாரங்கள் கழித்து (அதாவது மலையாளிகள் அனைவரும் படம் பார்த்துவிட்ட பிறகு) அனைத்து திரையரங்குகளிலும் சப்-டைட்டில்களுடன் படத்தைக் வெளியிட்டது. இதுவே எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இப்பொழுது மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷ்யம் பெற்ற வெற்றியை அசால்ட்டாக இந்தப் படம் தாண்டப்போவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். கன்னட ‘லூசியா’ வெற்றியில் பெரும் பங்கு வகித்தது சப்-டைட்டில்கள்.
நிறைய இருக்கிறது தமிழ் சினிமா பக்கத்து ஏரியாக்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது. மொத்தத்தில் இந்த BANGALORE DAYS - அடிப்பொலி சாரே...!
படத்தின் காணொளி
மாங்கல்யம் பாடல்
தெலுங்கில் ‘மனம்’ வந்திருக்கிறது - அதைப் பற்றி இன்னொரு பெரிய பதிவு எழுத வேண்டும்.
பார்க்கலாம் இது போல் மற்ற மொழிக்காரர்கள் சிலாகிக்கும் அளவிற்கான முயற்சிகளை என்று ‘தமிழ் சினிமா’ கொடுக்கப்போகிறதென்று.
5 comments
nice review loved it..
ReplyDeleteஅருமை .. தாடி வச்சா லோக்கல் பாய் ஆவும், ஷேவ் பண்ணிட்டா ஒரு டியூட் ஆவும், எல்லா கெட்டப்பும் செட் ஆகுற ஒரே ஆள் பாஹாத் பாசில் தான். செம்ம ஆக்டர்.
ReplyDeleteஅற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.. நானும் இந்தப்படத்தைப்பற்றி எழுதி இருந்தேன்.. உங்கள் பதிவில் படிக்கும் போது இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்
ReplyDeleteenanga january ku apuram june a .. ivlo gap ah....
ReplyDeleteHi... Super review.
ReplyDeleteIt would be helpful,if you give youtube links of movies like Drishium and other good movies which are having sub titles.
:(
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...