2013 படங்கள் - ஒரு பார்வை 03 - ஹிந்தி
11:29:00 AM
"வருஷம் தாண்டிப்போச்சே இதுக்கு மேல எதுக்கு எழுதிக்கிட்டு" என்று தான் 2013 ஆம் ஆண்டு நான் பார்த்த ஹிந்தி படங்களைப் பற்றி எதுவும் எழுதாமல் விட்டிருந்தேன். ஆனால் எனது தொடர் வாசகனான நண்பன் ஒருவன் "உன் லிஸ்ட வச்சித்தான் மச்சி நான் படங்கள் பாக்குறேன், எங்க ஹிந்தி பட லிஸ்ட்?" என்று ஒரு பாசக் கேள்வியை வீச கரஞ்சு போச்சு என் பிஞ்சு மனசு, நமக்கு இப்படியொரு வாசகனா என்று. ஸோ, இதோ 2013 ஆம் ஆண்டு ஹிந்திப் படங்கள் ஒரு பார்வை. பாலிவுட்டில் நூற்றுக்கணக்கில் படங்கள் வந்து கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்திருந்தாலும் நான் பார்த்த, ரசித்த, வெறுத்த, மறந்த படங்களைப் பற்றி மட்டும் இந்த பதிவு.
இந்தப் பதிவு அந்த நண்பனுக்காக.
முதல் போஸ்டர் நிச்சயம் வெறுப்பைக் கிளப்பியது. ஆனால் படம் அப்படி இல்லை. செம்ம ஜாலியாக இருந்தது. ரா ஒன் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தவர்களுக்கு CHENNAI EXPRESS செம விருந்து. இது போன்ற படங்கள் தான் ஷாருக்கின் பிளஸ். கூடவே சரியான முறையில் தமிழ்நாட்டையையும் கவர் செய்துவிட்டதால் (விஜய் அவார்ட்ஸில் சிவாஜி விருது... ஹி ஹி...) படம் நம் ஊர்களிலும் பட்டையைக் கிளப்பியது. ஹிந்திப் படத்தில் நம் சத்யராஜின் லொள்ளு நன்றாக எடுபட்டிருந்தது. தீபிகாவின் நடிப்பு பற்றிச் சொல்லவேண்டியதில்லை. என்ன தேவையோ அது தாராளமாகவே இருந்தது. ஆனால் அவர் பேசிய தமிழை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். மற்ற தமிழர்கள் எல்லாம் நல்ல தமிழ் பேச இவர் மட்டும் கொலை செய்துகொண்டிருந்தார். மற்றபடி படம் எனக்கு பரம திருப்தி.
சப்-டைட்டில்கள் இல்லாமல் பார்த்த படம் BHAAG MILKHA BHAAG. பாஷை புரியவில்லையென்றாலும் படம் புரிந்தது. வாழும் வரலாறான (Living Legend என்று அர்த்தம் கொள்க. Legend என்பதன் சரியான தமிழ் அர்த்தம் தெரியவில்லை) மில்கா சிங்-ன் வாழ்க்கையை கொஞ்சம் சினிமா மசாலாக்களைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள். கிரணைட் கல்லை செதுக்கியது போன்ற உடல்வாகில் ஃபர்ஹான் அக்தர் கலக்கியிருந்தார். சற்றே பெரிய படம் ஆனாலும் சுவாரஸ்யமான திரைக்கதை + நல்ல நடிப்பு படத்தை எந்தப் பிரச்சனையுமில்லாமல் நகர்த்தியது. ஒலிம்பிக்ஸ் தோல்வியில் ஆரம்பித்து பாகிஸ்தானிடம் வெற்றி பெறுவதில் முடிந்திருந்தார்கள். ஒலிம்பிக்ஸில் தோற்பதை விட பாகிஸ்தானிடம் ஜெய்ப்பதுதான் நம் மக்களுக்குப் பிடிக்கும் என்று தெரிந்தே திரைக்கதையை அப்படி அமைத்திருக்கிறார் இயக்குனர், ராக்கேஷ் மெஹ்ரா. அவரது கணக்கு தப்பவில்லை. மில்கா சிங் போலவே படமும் வெறி ஓட்டம் ஓடியிருக்கிறது.
வெளியான போது ஆஹா ஓஹோ என்று எல்லோரும் பாராட்டித் தள்ள சப்-டைட்டில்களுக்காக பொறுமையாகக் காத்திருந்து, பின் பார்த்து, பின் நானும் ஆஹோ ஓஹோ என்று பாராட்டிய படம் SPECIAL 26. அக்ஷய் குமார் படங்களை நான் விரும்புவதில்லை. ஆனால் இந்தப் படம் நன்றாக இருந்தது. கூடவே அனுபம் கெர். அவரைப்பற்றிச் சொல்வது மீன்குஞ்சிற்கு நன்றாக நீந்த வருகிறது என்பது போல் இருக்கும். மனோஜ் பாஜபாய் லெவலுக்கு இந்தப் படம் கொஞ்சம் சப்பை தான். ஏன் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு கதாப்பாத்திரம் என்றால் காஜல் பாத்திரம் தான். படம் முழுக்க ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாது. ஆரம்பம், நடுவில் சில காட்சிகள், கடைசி அரை மணிநேரக் கிளைமாக்ஸ். இவை மட்டும்கூடப் போதும் இந்தப் படத்தைக் கொண்டாட.
இந்த வருடம் நான் தியேட்டரில் பார்த்த மூன்று ஹிந்தி படங்களில் முதல் படம் - நான்கு குறும்படங்கள் - BOMBAY TALKIES. நான்கு படங்களும் அற்புதம், உச்சகட்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் நான்கும் அருமையாகவே இருந்தது. 100 வருட இந்திய சினிமாவிற்கு சமர்பணம் செய்ய இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு முற்றிலும் சினிமா சம்பந்தமான படங்களாக கொடுத்திருக்கலாம். அப்படிப் பார்த்தால் அனுராக் காஷ்யபின் STAR எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக அந்த "முரப்பா" தீம்.
தியேட்டரில் சென்று பார்த்த மற்றுமொரு படம் SHIP OF THESEUS. முக்கால்வாரிப்படம் ஆங்கிலத்தில் தான் இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன்.
இந்த வருடம் நான் ரசித்துப் பார்த்த ஒரு படம் என்றால் அது D-DAY தான். கோல்ட்மேன் என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம்மை பாகிஸ்தானில் வைத்துப் பிடிக்க இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான் படம். அர்ஜுன் ராம்பால் கொஞ்சம் ஜேம்ஸ் பாண்டுத்தனமான சேட்டைகளைச் செய்தாலும் படம் ஒரு அருமையான ஆக்ஷன் திரில்லர். நிச்சயம் மேக்கிங் + திரைக்கதையில் ஹாலிவுட் தரம் என்று தாராளமாகச் சொல்லலாம். வழக்கம்போல இர்ஃபான் கான் கலக்கியிருந்தார். ரிஷி கபூர், நாசர், ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கான கச்சிதமான தேர்வு. 2013 ஆம் ஆண்டு வெளியான எந்தப் படம் மிஸ் ஆனாலும் பரவாயில்லை இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பது எனது பரிந்துரை.
சேத்தன் பகத் எழுதும் ஃபில்மி ஸ்டைல் நாவல்கள் எனக்குப் பிடிக்கும். KAI PO CHE! நாவலாக படித்ததைவிட திரையில் அருமையாக இருந்தது. பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருந்தது அதற்கு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நான் பெரிதும் விரும்பிய 'வித்யா' கதாப்பாத்திரம் மட்டும் மொக்கையாக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தது. அந்த வகையில் இந்தியாவில் வாழ்ந்து இந்தியப் படங்களைப் பார்ப்பது ஒரு சாபம் என்பேன்.
80களில் மும்பையை ஆண்டு கொண்டிருந்த டான்களில் ஒருவனான மான்யா சுர்வே பற்றிய படம் SHOOTOUT AT WADALA. தாவூத் ஆள் ஆவதற்கு முன் அவனுக்கு டஃப் பைட் கொடுத்தவன் தான் இந்த மான்யா என்பது தெரிந்தது. ஜான் ஆப்ரகாமின் நடிப்பு ஒரே மாதிரியே இருந்தாலும் பரவாயில்லை, பார்க்கலாம் என்ற வகையில் இருந்தது. கங்கனா ராவட் இந்தப் படத்திலும் சிலபல போல்ட் சீன்களில் கலக்கியிருக்கிறார். ஆக்ஷன் சீன்களும், சில சேஸ்களும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை விட இதன் முந்தைய பாகமான (கதைப்படி அடுத்து நடந்த) SHOOTOUT AT LOKHANDWALA எனக்கு முகவும் பிடித்த படம். வாண்டாலாவை மிஸ் செய்தாலும் லோகண்ட்வாலாவை தவற விடவேண்டாம்.
என்னமோ ஏதோ என்று ஆவலாக பார்க்க உட்கார்ந்த படம் B.A.PASS. சாதாரண படம் தான் ஆனால் புதிய ப்ளேவரில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் Ajay Bahl. டெம்ப்ளேட் கதை. டெம்ப்ளேட் கிளைமாக்ஸ். நியோ நாயர் ஸ்டைல் படத்தை கொஞ்சம் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. கிகோலோஸ் இந்தியாவிற்கு கொஞ்சம் புதிது என்பதால் படம் சென்சேஷனல் அந்தஸ்த்து பெற்றுவிட்டது. இது போன்ற ஒரு கதையை அமரர் சுஜாதா எழுதிப் படித்ததாக நியாபகம்.
RGV பேக் டு பார்ம் எடுத்த படம் ATTACKS OF 26/11. என்ன எதிர்பார்த்து பார்க்கிறோமோ அது இந்தப் படத்தில் இருந்தது. இது போன்ற உண்மைச் சம்பவங்களைப் படமாக எடுப்பதில் மனிதர் கில்லி என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தப் படத்தின் கூடுதல் பலம் கசாப் ஆக நடித்தவரின் திறமை. எனக்கு RGV யின் ரத்தசரித்திரம் இரண்டு பாகங்களும் பிடித்தது. மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி அனுராக் எடுத்த Black Friday (2004) படமும் பிடித்த படமே.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் "சரி பார்க்கலாம்" என்று உக்கார்ந்து கொஞ்சமே கொஞ்சம் மிரண்ட படம் - SHORTS. ஐந்து குறும்படங்களை உள்ளடக்கியது. SUJATA என்ற முதல் படமும் SHOR என்ற கடைசி படமும் எனது பேவரிட். AUDACITY என்ற படமும் செம ஜாலியான படமே. மீதி இரண்டு படங்கள் கண்ணாபின்னவென்று இருந்தது. புரியவில்லை. மலையாள 5 சுந்தரிகள் போல 5 விதமான பெண்களைப் பற்றிய படம். இதுபோன்ற வித்தியாச முயற்சிகள் பாலிவுட்டில் வந்தாலே அதில் அனுராக் காஷ்யப் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இதில் தயாரிப்பாளர்.
ஆபீஸ் கசமுசாக்களை கச்சிதமாக திரையில் காட்டியிருந்த படம் INKAAR. அர்ஜுன் ராம்பால் செம ஸ்மார்ட் ஆக்டிங். ஹீரோயின் நடிப்பும் பாராட்டும்படியாகவே இருந்தது. இந்தப் படத்தில் நடப்பது போல் தான் இப்பொழுது பெரும்பாலான கார்ப்பரேட்களில் நடக்கிறது என்பது தான் கசப்பான உண்மை. நிச்சயம் பார்த்து, தெரிந்து கொள்ள வேண்டிய படம்.
நண்பர் கீதப்பிரியன் சிபாரிசில் பார்த்த படம் MICKEY VIRUS. செம்ம கலர்ஃபுல்லான யூத் படம். 'ஆரம்பம்' ஆர்யா போன்ற ஒரு ஹேக்கர் தான் ஹீரோ. பல டெக்னிக்கல் ஜிலேபிகளைப் போட்டு அசத்தியிருந்தார்கள். கவர்ச்சிக்காமெடிப்படம் போல் தெரிந்தாலும் கொஞ்சம் த்ரில் கலந்து கொடுத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள். யோ யோ பாய் கேரக்டருக்கு பொருந்திப் போகும் ஒரு ஹீரோ. அப்புறம் ஒரு செம்ம ஹாட் ஹீரோயின்.
துப்பாக்கி வில்லன் Vidyut Jamwal-ற்காகவே பார்த்த படம் COMMANDO. ஒன் மேன் ஆர்மி என்ற டேக் லைனிற்கு துரோகம் செய்யாமல் படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் மயிர்கூசும் ஸ்டண்ட்களில் கவனம் இருந்த அளவிற்கு கதையில் கவனம் இல்லை. ரா ஆக்ஷன் படமே என்றாலும் கொஞ்சம் சால்ட், பெப்பர், மசாலா எல்லாம் போட்டுக் கொடுத்தால் தான் நம் மக்களுக்குப் பிடிக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
நன்றாக இருக்குமோ என்று நினைத்து மொக்கை வாங்கிய படம் ANY BODY CAN DANCE (ABCD). டெம்ப்ளேட் கதை. படம் நெடுக பிரபுதேவா புகழ் தான். இறுதி ஆட்டமான கணபதி பாப்ஆ மோரியா அற்புதம். சமீபத்தில்கூட ஏதோ ஒரு சேனலில் பார்க்கும் போது புல்லரித்தது. 3Dயில் ஏன் இந்தப் படத்தை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
ஆசையாக பார்க்க உக்கார்ந்து மொக்கை வாங்கிய மற்றொரு படம் GHANCHAKKAR. வித்யா பாலன் கண்டமேனிக்கு உடை அணிந்து வந்ததால் மட்டுமே படம் வித்தியாச படமாகி விடும் என்று நினைத்துவிட்டார்களோ என்னமோ தெரியவில்லை. குட்டியாக ஒன்றிரண்டு கில்மா சீன்கள் வேறு. எதுவும் எடுபடவில்லை. அருமையான ஒன்-லைன். ஆரம்ப பேங்க் கொள்ளைகூட நன்றாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக பேசிப்பேசியே சாகடித்துவிட்டார்கள். வித்யாவின் 'ஹ' மட்டும் நன்றாக இருந்தது. என்னைப் போன்ற பாஷை புரியாதவர்களுக்கு இருக்கும் பிரச்சனை அவர்களுக்குப் புரியவில்லை. இம்ரான் ஹஸ்மி சுவற்றில் அடித்த சாணம் போன்ற தனது அருமையான நடிப்பு / முகபாவனைகளால் என்னைக் கவர்ந்தார்.
நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன நமது தனுஷ் நடிப்பில் வந்த படமான RAANJHANAA படம் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. கதையையும் தனுஷின் நடிப்பையும்விட என்னை வெகுவாகக் கவர்ந்தவை ரஹ்மானின் இசையும் 'மிளகா' நட்டி நட்ராஜின் ஒளிப்பதிவும் தான். தமிழில் வெளியான படமெல்லாம் ஊத்திக்கொண்டிருக்கும் வேளையில் ஹிந்தியில் பெரிய வெற்றி அடைந்திருக்கிறார் தனுஷ். நல்லதுதான்.
பார்க்கவே கூடாது என்று நினைத்து ஆனாலும் பார்க்கத் தொடங்கிய படம் MADRAS CAFE. அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. டெக்னிக்கலாக இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் எதைக் காட்டுகிறோம் என்பதில் ஒரு அக்கறை இருக்க வேண்டும். தமிழகத்தில் வெளியாகவே இல்லை. வேறு எங்கும் பெரிதாக வசூலித்ததாகவும் தெரியவில்லை. பணம் விரயமானது தான் மிச்சம்.
சென்ற வருடம் கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட குப்பைகளில் முதல் இடத்தில் இருப்பது KRRISH 3. தியேட்டரில் பார்த்தேன். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியைக் காட்டி இது தான் மும்பை சிட்டி என்று காட்டிய போதே படம் எப்படி என்று தெரிந்துவிட்டது. இத்தனைக்கும் படத்திற்கு போவதற்கும் முன் விமர்சனமெல்லாம் படித்துவிட்டுத் தான் சென்றிருந்தேன். இருந்தாலும் சூ..கொழுப்பு, சூடு வாங்கிக் கொண்டு வந்தேன். படத்தில் ஒன்றுமே இல்லை. சும்மா சும்மா மார்லின் மன்ரோ போஸில் கிருஷ் நின்றுகொண்டிருந்தது தூக்கத்தை வரவழைத்தது. வில்லனைக் கண்டால் எரிச்சல் தான் வந்தது. உட்கார முடியவில்லை. நான் ரசித்த ஒரே கதாப்பாத்திரம் கங்கனா ராவட். செம ஹாட், செம பெர்பாமென்ஸ். படம் 200, 300 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளதாம். வசூலிக்கட்டும் வசூலிக்கட்டும்...
இரண்டாம் இடம் RACE 2. ரேஸ் முதல் பாகம் உண்மையிலேயே ஒரு ஆச்சரியம். ஒரு படத்தில் ஒன்றிரண்டு டுவிஸ்ட் இருக்கலாம். ஆனால் காட்சிக்கு காட்சி ஒன்றிரண்டு டுவுஸ்ட் வைத்து மிரட்டிய படம் ரேஸ் 1. ஆனால் இந்த இரண்டாம் பாகம் குப்பை. தீபிகாவைப் பார்க்கச் சகிக்கவில்லை. இதில் அமீஷா பட்டேல் வேறு. கெரகம்...
இவை தவிர அவசியம் பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ள படங்கள் கீழ்வருமாறு.
1) Lunchbox - பலநாட்களாகக் காத்திருக்கிறேன். நல்ல பிரிண்ட் + சப்-டைட்டில்களுக்காக வெயிடிங்
2) Shahid - தரவிறக்கம் முடிந்தது. கூடிய விரைவில் பார்த்துவிடுவேன்
3) Lootera - 50'களில் நடக்கும் காதல் காவியக் கதை என்கிறார்கள். அதனாலேயே ஒரு தயக்கம்.
4) Grand Masti - அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும்
5) Dhoom 3 - இன்றைய தேதிக்கும் 500 கோடி வசூலித்திருக்கும் ஒரே இந்தியப் படம். பார்த்தே ஆகவேண்டும்.
6) Satya 2 - RGV படம். அந்த ஒரு காரணத்திற்காகவே பார்ப்பேன்.
7) Shuddh Desi Romance - பர்னீத்தி சோப்ரா. வேறென்ன சொல்ல.
8) Aashiqui 2 - இந்தப் பெயரைக் கேட்டாலே சிலர் உருகுகிறார்கள். பார்க்க வேண்டும்.
9) Ram-Leela - நல்ல பிரிண்ட் + சப்-டைட்டில்களுக்காக வெயிடிங்
10) Ankur Arora Murder Case / Aurangazeb / Yeh Jawani Hai Dewani / Saheb, Biwi Aur Gangster Returns - இவையெல்லாம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்ட படங்கள்.
இவை தவிர நல்ல படங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பார்த்துவிடுகிறேன்.
மச்சி - திருப்திதான?
2 comments
Good..
ReplyDeleteI find it weird - Madras café is a brilliant movie .. compared to RGVs crap attacks of 26/11. And another worst movie is satya 2.. !!
ReplyDeleteInkaar is nothing much to boast about.
Dhoom 3 is a must watch in a movie hall. if u watch in dvd.. you feel it as crap. The grandeur you can enjoy only in movies...
Must watch : Lunch Box, Ram leela, Shahid,Shudh desi romance and lootera..
yeh jawani hei deewani is a feel good movie. and aashiqui 2 is tragic romance with some good music.
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...