சென்ற ஆண்டு இறுதியில் வெளியான இரண்டு படங்கள் மிக மிக முக்கியமானவை. உலகலளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள இரண்டு இயக்குனர்களின் சமீபத்திய படங்கள் அவை. சிறிதளவு கூட காம்பரமைஸ் செய்து கொள்ளாமல் தாங்கள் நினைத்ததை திரையில் கொண்டுவரும் அந்த இயக்குனர்கள் Alejandro Gonzalez Innaritu மற்றும் Quentin Tarantino. இவர்களது படங்களான முறையே The Revenant மற்றும் The Hateful Eight இரண்டும் சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியானது. இந்த இரண்டு படங்களைப் பற்றி பேசாத சினிமா ரசிகர் / தளம் இருக்க முடியாது. இதில் The Hateful Eight மூன்று வாரங்களுக்கு முன் இந்தியாவில் வெளியானது. எத்தைனை பேர் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை பார்த்திருக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை இந்த வாரம் The Revenant வெளியாகிறது - இதைப் பார்த்துவிடுங்கள்.
‘Cinematic Experience’ என்று சொல்வார்கள். திரையில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து, படத்தில் மொத்தமாக மூழ்கிப் போகும் அனுபவம். இந்த அனுபவத்தை எப்பொழுதாவது, ஏதாவது ஒரு சில படங்கள் தான் கொடுக்கும். அப்படி ஒரு படம் - The Revenant. இந்தப் படம் சினிமா வரலாற்றில் ஒரு மயில்கல். ஒரு இயக்குனரின் உச்சகட்ட கனவு. ஒரு சினிமா ரசிகனுக்கு இதுவரை கண்டிராத புதியதோர் பிரம்மாண்டக் காண் அனுபவம்.
மெக்ஸிகரான Alejandro Gonzalez Innaritu விற்கு 'The Revenant' ஆறாவது படம்.
'Death Trilogy' என்ற கூட்டுத்தலைப்பில் இவரது 3 படங்களான Amores Perros (2000), 21 Grams
(2003), Babel (2006) - ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்த்தே தீர வேண்டிய படங்கள். Biutiful (2010) முதல் மூன்று படங்கள் அளவிற்குப் பிரபலமான படம் கிடையாது என்றாலும் வெற்றிகரமான பார்க்க வேண்டிய படமே. இந்த நான்கு படங்களுக்குப் பிறகு Innaritu தொடங்கிய படம் தான் The Revenant. இதே ப்யரில் வெளியான நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு Mark L. Smith என்பவர் எழுதிய திரைக்கதையைப் படமாக்க முயற்சித்துக்கொண்டிருந்தர். இதற்கிடையில் படத்தின் நாயகனான Leonardo DiCaprio வேறி படத்தில் (The Wolf of Wall Street) கமிட் ஆகியிருந்ததால், குறுகிய காலப்படைப்பாக Innaritu இயக்கிய படம் - Birdman (The Unexpected Virtue
of Ignorance). சென்ற வருடம் நடந்த 87 ஆவது ஆஸ்கரில் சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு என்று நான்கு ஆஸ்கர்களை அள்ளிய படம். அந்தப் படம் முடிந்த பின் மீண்டும் The Revenant படத்தை எடுக்கத் தொடங்கி இந்த வருடம் நடக்கவிருக்கும் 88 ஆவது விழாவிற்குத் தயாராகிவிட்டார். இம்முறை சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு தவிர இந்த வருடம் அதிகப்படியாக சிறந்த நடிகர், சிறந்த துணைநடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசைக்கோர்வை, சிறந்த ஒலியமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த உடை அலங்காரம், சிறந்த மேக்கப், சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ் என்று மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகர் என்று மூன்று விருதுகளை வென்றுள்ளது The Revenant. இந்த சாதனை சாத்தியப்பட்டது ஒருவரால் மட்டுமே. அவர் - இயக்குனர் Alejandro Gonzalez Innaritu.
படப்பிடிப்பு நடந்த விதத்தை 'A Living Hell' என்று சொல்கின்றனர் படக்குழுவினர். கடும்பனியில் ஒரு நாளுக்கு வெறும் ஒன்றை மணிநேரமே வெயில் வரும் லொக்கேஷன்களில், கடும் சிரமங்களுக்கிடையே படப்பிடிப்பு நடத்த்தியிருக்கிறார்கள். கனடா நாட்டில் இவர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்த இடத்தில் பனி உருகத் தொடங்க, செட் போடமாட்டேன் என்ற இயக்குனரின் பிடிவாதத்தால் மொத்தப் படப்பிடிப்பையும் அர்ஜண்டினாவிற்கு மாற்றியிருக்கிறார்கள். படம் முழுவதையும் இயற்கை ஒளியிலேயே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் (ஒரே ஒரு காட்சியைத் தவிர). முடிந்தவரை கிராபிக்ஸ் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கிறார்கள். அது பற்றிய ஒரு கேள்விக்கு இயக்குனர் கொடுத்த பதில் –
"If we ended up in
greenscreen with coffee and everybody having a good time, everybody will be
happy, but most likely the film would be a piece of shit"
இயக்குனர் Innaritu மிகவும் கடுமையாக நடந்து கொண்டார், பட்ஜெட் எகிறிக்கொண்டே போனது (60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று முடிவு செய்யப்பட்ட படம் கடைசியில் 135 மில்லியன் டாலர்கள் செலவுசெய்யப்பட்டு முடிக்கப்பட்டது. உலகளவில் இதுவரை 382 மில்லியன் டாலர்காள் வசூலித்திருக்கிறது - பட்ஜெட் எகிறும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்று பேட்டிகளில் சொன்னார் இயக்குனர்), சிரமம் காரணமாக படக்குழுவினர் பலர் விலகிக்கொண்டனர், இயக்குனரது செய்கைகளால் படத்தில் நடித்த Tom Hardyக்கும் இயக்குனருக்கும் சண்டை நடந்தது என்று பல குறைகள் சொல்லப்பட்டது. இன்று படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்துவிட்டு தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் சரியான பலன் கிடைத்திருப்பதாக அவர்களே சொல்கிறார்கள். ஆனால் இது போதாது. சாதாரண ஹாலிவுட் சினிமா பெரும் அதே குறுகிய வெற்றி மட்டும் போதும் என்று நிலை இந்தப் படத்திற்கு வரக்கூடாது. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். Titanic போல, Avatar போல, Life of Pi போல...!
இயக்குனருக்கு அடுத்தபடியாக படத்தைத் தாங்கி நிற்பவர் ஒளிப்பதிவாளர் Emmanuel Lubezki. 8 முறை சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இவர், 'Gravity (2014)', 'Birdman (2015)' படங்களுக்காக அடுத்தடுத்து இருமுறை விருதை வென்ற இவர் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக The Revenant படத்திற்காக ஆஸ்கார் வென்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார். ஆஸ்கார் வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். 'Gravity' படத்தின் இயக்கிய Alfonso Cuaron ற்கு ஆஸ்தான ஒளிப்பதிவாளர். Cuaron னின் 'Children of Men' படத்தில் இவரது ஒளிப்பதிவைப் பாராட்டாதவர் இல்லை. Innaritu போன்ற பிடிவாத இயக்குனருடன் கூட்டு சேர்ந்து, அவர் தன் எழுத்தில் கொண்டுவந்ததைத் திரையில் கொண்டு வருவது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. 'Birdman' படம் முழுவதும் ஒரே சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது போலிருக்கும். 'The Revenant' படத்தைக் கடும் பனிபொழியும் காடு, மலை பிரதேசங்களில் முழுக்க முழுக்க இயற்கை ஒளியில் படம்பிடித்திருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம். சில சவாலான காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
படத்திற்கு இசையமைத்திருப்பவர் Ryuichi Sakamoto. இவரும் லேசுப்பட்டவர் கிடையாது. The Last Emperor (1987) படத்திற்காக ஆஸ்கார், கோல்டன் குளோப் உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். படத்தொகுப்பு செய்திருப்பவர் Stephen Mirrione. இவரும் ஆஸ்கார் நாயகன் தான் - Traffic (2000) படத்திற்காக ஆஸ்கார் வென்றிருக்கிறார்.
இவர்கள் திரைக்குப் பின்னால் இருப்பவர்கள். திரைஆளுமை ஒருவரே - Leonardo DiCaprio.
The Wolf of Wall Street (2013) படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிறது. தொடர்ந்து 9 மாதங்கள் இந்தப் படத்தில் தன் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் DiCaprio. படப்பிடிப்பில் உடலளவில் தனக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று இவர் சொன்னாலும், அவரது கேரியரிலேயே மிகச் சவாலான படம் என்றால் அது The Revenant தான். 6 மணிநேரம் மேக்கப் போட்டு, ஒரு காட்சிக்காக காட்டெருமையின் கல்லீரலை உண்டு, அமெரிக்கப் பழங்குடியினரின் இரண்டு மொழிகளைக் கற்று, காடு, மலை என்று உருண்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். Innaritu உடன் சேர்த்து இதுவரை 8 ஆஸ்கார் இயக்குனர்களுடன் இணைந்து வேலை செய்திருக்கிறார். ஏற்கனவே 4 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ஏமாந்து, உலகத்தையே தன் பக்கம் திருப்பி, ஒரு வழியாக The Revenant படத்திற்காக ஆஸ்கார் வென்றிருக்கிறார். இந்த வருட ஆஸ்கார் நாயகன் DiCaprio தான்.
DiCaprio விற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் Tom Hardy. கிடைக்கிற கேப்பில் எல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். இவரது Brosnon (2008) பார்த்து வாயைப் பிளக்கத் தொடங்கிய நான், தொடர்ந்து Tinker Tailor Soldier Spy (2011), The Dark Knight Rises
(2012), The Locke (2013), Legend (2015) என்று திறந்த வாயை மூடவில்லை. The Revenant படத்தில் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் Tom Hardy.
1823 ஆம் ஆண்டு நடக்கும் கதை. மிருகத்தோலுக்காக வேட்டையாடும் அமெரிக்க கம்பனிக்கு வேலை செய்கிறார் Hugh Glass (DiCaprio). அந்தக் கூட்டத்திலேயே மிகத் திறமையான, அனுபவமுள்ள வேட்டைக்காரர். அந்தப் பகுதி பழங்குடியின மக்கள் (Native Americans / Indians) இவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றனர். இவர்காளுக்குள் நடக்கும் சண்டையில் பாதி பேர் இறக்கின்றனர். தப்பித்த மற்றவர்கள் கேம்ப் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது 'கரடி' ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்படுகிறார் Glass. ஒற்றை ஆளாகக் கரடியைக் கொன்று வீழ்த்தினாலும், படுகாயப்படுகிறார். Glass ஐத் தூக்கிக் கொண்டு முன்னேறி செல்வதென்பது முடியாத காரியம். அவரைக் கொல்லவும் மனமில்லாததால், அவர் இறக்கும் வரை காத்திருந்து மரியாதையுடன் அடக்கம் செய்ய Glass இன் மகனான Hawk மற்றும் அவனது நண்பனான் Jim Bridger இருவரையும் John Fitzgerald (Tom Hardy) என்பவனது பொறுப்பில் விடுகிறார் குழுவின் தலைவரான Captain Andrew Henry. இவர்களுக்கு என்ன ஆனது என்பது தான் கதை.
Survival, Revenge - இந்த இரண்டும் தான் படம். கிளைமாக்ஸ் என்ன என்று குழந்தை கூட சொல்லிவிடும். ஆனால் அதைக் கொடுத்த விதம் - அங்கு தான் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் இயக்குனர். ‘Life of Pi’ படத்தில் எப்படிக் கடல் பெரும்பங்கு வகித்ததோ அதே போல இந்தப் படத்தில் பனி சூழ்ந்த காடு மலை நிலப்பரப்பு தான் இந்தக் கதையின் நிஜ ஹீரோ. கரடியுடன் DiCaprio மோதும் காட்சி சினிமாவில் இதுவரை நாம் காணாத ஒன்று. புரட்டிப் புரட்டி தாக்கும் கரடியின் பிடியில் நாம் சிக்கிக்கொண்டதைப் போன்ற உணர்வைத் தந்திருக்கிறார் ஓளிப்பதிவாளர் Emmanuel Lubezki. அச்சு அசலாக நிஜக் கரடி ஒன்று DiCaprio வுடன் மோதுவதைப் போலவே கிராபிக்ஸில் கலக்கியிருக்கிறார்கள். அது நிஜக்கரடி அல்ல என்ற செய்தியே என்னையும் சேர்த்துப் பலருக்கும் ஆச்சரியமே! ஒரு காட்சியில் குதிரையுடன் சேர்ந்து ஒரு மிகப்பெரிய பள்ளத்தாக்கில் விழுகிறார் Glass. இதையெல்லாம் எப்படிப் படமாக்கினார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். If it can be written or
thought, it can be filmed - என்பது இயக்குனர் Staley Kubrick சொன்ன பிரபல வாசகம். இதைப் படத்திற்குப் படம் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள் Alejandro Gonzalez Innaritu போன்ற இயக்குனர்கள்.
டிரைலரிலேயே வரும் குதிரையில் இருந்தபடியே நடக்கும் 360 டிகிரி சேஸிங் காட்சியைப் பெரிய திரையில் பார்க்கப்போகும் தருணத்திற்காக பலநாட்களாகக் காத்திருக்கிறேன். கிளைமாக்ஸில் சண்டைக்காட்சி ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இதுவரை நாம் பார்த்த எந்த ஆக்ஷன் காட்சியையும் விட அந்தக் காட்சி ஒஸ்தி. கிளைமாக்ஸ் சண்டை மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு ஆக்ஷன் சீக்வென்ஸும் அற்புதம்.
ஹீரோயின் கிடையாது. ஹீரோவிற்கு ஒரு பக்கத்திற்கு மேல் வசனம் கிடையாது.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் அன்று வெளியான படம், உலகமெங்கும் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் வரும் வாரம் வெளியாகிறது. நமது Censor பிடியில் சிக்கி படம் கொத்து பரோட்டா போடப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், ஒரு தகவல் சென்சார் செய்யப்படாத ஒரிஜினல் தான் இந்தியாவிற்கு வருகிறது என்றும் சொல்கிறது. எது எப்படியோ அவசியம் தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டிய மிக அற்புதமான அனுபவம் - The Revenant.
“A World Unseen” என்ற பெயரில் படம் வெளியான ஒரு மாதத்திற்குள் படத்தின் மேக்கிங் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார் Innaritu. திரைக்கலைஞர்கள், திரைப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய டாக்குமெண்டரி அது -
https://www.youtube.com/watch?v=pJfTfsXFbLk
படத்தை ஏற்கனவே டாரண்ட் தயவில் பார்த்துவிட்டாலும், பெரிய திரையிலும் பார்த்தே தீருவேன். தனக்கான எல்லைகளை படத்திற்கு படம் நீட்டித்துக்கொண்டே போகும் Alejandro Gonzalez Innaritu போன்றவர்கள் சினிமா ரசிகர்களாகிய நமக்குக் கிடைத்த வரம்! சினிமாவைத் தொழிலாக மட்டும் பார்க்காமல் தனக்கான ஒவ்வொரு படத்தையும் தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக நினைக்கும் இவர்களைப் போன்றவர்களால் தான் உலக முழுவதும் சினிமா இத்தனை சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
Thank You Mr.Innaritu - for the
most wonderful Cinematic Experience, Ever...!