இன்று செல்வாவின் “இரண்டாம் உலகம்”
வெளியாகிறது. இந்த நேரத்தில் ஆயிரத்தில் ஒருவன் பற்றி பக்கம் பக்கமாக எழுதி என்ன ஆகப்போகிறது
என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. படம் வெளியான சமயத்தில் பலரிடம் பேசி, புலம்பித்
தள்ளிய விஷயங்களின் தொகுப்பு இந்தப் பதிவு. பல முறை எழுத நினைத்து பின் ஏதேதோ காரணங்களால்
கைவிடப்பட்ட ஒன்று. நான் இதை முடிக்கும்முன் ஆயிரத்தில் ஒருவன் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு,
செல்வராகவன் என்னும் உண்மையான கலைஞன் முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தான். பல நாட்களாக
உறங்கிக்கொண்டிருந்த இந்த நீண்ட பதிவை வெளியிட இது சரியான தருணமா, தெரியவில்லை.
இந்தப் பதிவு முழுக்க முழுக்க
எனது பார்வை / கருத்து. யாரையும் குறை கூறவோ, மட்டம் தட்டி பேசவோ, ரசனையை கிண்டல் செய்யவோ
இந்தப் பதிவை நான் எழுதவில்லை. செல்வராகவன் ஒரு ஜீனியஸ் – இது எனது அசைக்க முடியாத
நம்பிக்கை. அவர் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. இந்தப் பதிவு இரண்டாம் உலகம்
/ செல்வாவின் படங்களைப் புரிந்து கொள்ள “ஒருவருக்கு” உதவினாலும் நான் வெற்றியடைந்ததாகத்தான்
அர்த்தம் (ஆயிரத்தில் ஒருவன்!).
வெளியான சமயம் அநாதை ஆக்கப்பட்டு
பின்னர் சில வருடங்கள் கழித்து பார்ப்பவரெல்லாம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும்
படங்களைத் தான் கல்ட் படங்கள் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழில் அன்பே
சிவம், ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களின் நிலை இன்று இது தான்.
அன்பே சிவம் பற்றி நியாபகம் இல்லை. ஆனால் ஆரண்ய காண்டம் வெளியான போது திரும்பிப் பார்க்க
ஆள் இல்லை. பெண்களுக்குப் பிடிக்காது என்றார்கள். வன்முறை என்றார்கள். கெட்ட வார்த்தை
அதிகம் என்றார்கள். போஸ்டர் டிசைன் கூட சரியில்லை என்றார்கள். அடுத்த வாரமே பாலாவின்
அவன் இவன் ரிலீஸ் ஆக, இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பது போல ஆரண்ய காண்டத்தை மொத்தமாக
தூக்கிப் போட்டார்கள். திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை, தேசிய விருது பற்றிய அறிவிப்பு
வர, ஆர்வம் தலைக்கேறி ரீ-ரிலீஸ் பண்ணுவாங்களா, பர்மா பஜாரில் டி.வி.டி கிடைக்குமா என்றும்
தேடித்திரிய ஆரம்பித்தார்கள் நம்மவர்கள். அந்த ஆண்டு சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில்
கூட்டம் அதிகமாக இருந்ததால் காட்சி நேரம் மாற்றப்பட்டு பெரிய அரங்கில் ஆரண்ய காண்டம்
வெளியானது. ஆரண்ய காண்டம் ஏற்படுத்திய அலை, அதைப் போன்ற வித்தியாசமான அடுத்த படைப்புகளுக்கு
வழிவகுத்தது. மூடர் கூடம் அந்த வகைப்படங்களில் ஒன்று (கவனிக்க: ஆரண்ய காண்டத்திற்கு
ஈடான படமில்லை) ஆரண்ய காண்டத்திற்கு நடந்தது, பின்னாளில் அந்தப் படத்திற்கு கொடுக்கப்பட்ட
மரியாதையாவது பரவயில்லை. ஆயிரத்தில் ஒருவனுக்கு நடந்தது கொடுமை.
நமக்குப் பிடிக்காத ஒரு படம் யாருக்கும்
பிடிக்கவே கூடாது என்கிற ரீதியில் தான் ஆயிரத்தில் ஒருவனுக்கு விமர்சனம் வந்தது. படம்
சரியில்லை என்பதை விட படம் புரியவில்லை என்ற விமர்சனம் தியேட்டருக்கு வரும் கூட்டடத்தை
கணிசமாகக் குறைக்கும். தமிழ் சினிமா வரலாற்றிலேயே புதிய வித்தியாசமானதொரு முயற்சிக்கு,
ஒரு கலைஞனின் உண்மையான கனவிற்கு இப்படியொரு அநீதியை நாம் விளைவித்துவிட்டோமே என்பது
தான் எனது வருத்தம். திறமையான ஒரு சிற்பக்கலைஞனின் கைகளை வெட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருப்பதைப் போன்றது செல்வாவின் இந்தப் படைப்பை நாம் தோற்கடித்தது. அப்படி என்ன
எடுக்கக் கூடாததை எடுத்து, காட்டக் கூடாததைக் காட்டிவிட்டார் செல்வராகவன் என்று தான்
எனக்குப் புரியவில்லை. செல்வராகன் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று நாம் நம் மனதில்
முடிவுகட்டிப் பதியவைத்திருக்கும் விஷயங்கள் என்ன? மனோத்துவ பிரச்சனை உள்ள ஒரு ஆண்,
அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை என்றாலும் அவனுக்கு சற்றும் குறைவில்லாமல் ரியாக்ட் செய்யும்
பெண், இவர்களுக்குள் நடக்கும் உளவியல் ரீதியான ஈர்ப்புகள், உடல் ரீதியான தேடல்கள்,
செக்ஸ், கடைசியில் ஒரு மரணம் அல்லது இழப்பு. இவை மட்டும் தான் செல்வராகவனா? புதுப்பேட்டை
– நூற்றுக்கணக்கில் தாதா / ரவுடியிஸம் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவை மூச்சுத் திணற
வைத்துக்கொண்டிருந்த பொழுது உலகத்தரத்தில் செல்வா இயக்கிய படம். படத்தை தோல்வியடையச்
செய்து செல்வாவின் மண்டையிலேயே ஓங்கி அடித்து உட்கார வைத்தோம். ஆனாலும் திருந்தாமல்
கனவுகளைத் துரத்தி ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை எடுத்தார். மீண்டும் அடித்த இடத்திலேயே
இன்னும் சற்று பலமாக ஓங்கி அடித்தோம். அடுத்து பெரும் குழப்பங்கள், பிரச்சனைகளுக்கு
இடையே ‘மயக்கம் என்ன’ எடுத்தார். மயக்கம் என்ன நல்ல படம் தான். ஆனால் புதுப்பேட்டை,
ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிடும் போது, அது மிகவும் சுமாரான ஒரு படைப்பு, செல்வாவின்
தகுதிக்கு. “நீங்கள் இதுவரை எடுத்த படங்காளில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று
என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்காள்” என்று ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு
சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்றார். கொடுமை. இந்த நிலைக்குப் பிறகும்
செல்வா திருந்துவதகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் நம்மை, தமிழ் ரசிகர்களை நம்பி
புதிதாக கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார். அவரது புதிய கனவுலகம் “இரண்டாம் உலகம்”.
சோழர்களை இழிவுபடுத்திவிட்டார் என்ற கலாச்சாரக் குற்றச்சாட்டை அசால்ட்டாக அவர் மேல்
நாம் சுமத்தியதால் மொத்தமாக ஒரு புது உலகத்தை அவர் இந்தப் படத்திற்காக உருவாக்கிவிட்டார்.
ஒவ்வொரு முறை நாம் செல்வாவை தோற்கடித்தாலும், ஏதாவது ஒரு வகையில் நம்மை அவர் ஜெய்த்துக்கொண்டே
தான் இருக்கிறார் தனது முயற்சிகளின் மூலம். புதுப்பேட்டை வரும் வரை செல்வாவையும்,
அவரது படங்களையும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் புதுப்பேட்டை வந்த பிறகு
தமிழ் சினிமாவை உயர்த்தப்போகும், சினிமாவின் மீது உண்மையான காதல் கொண்டிருக்கும் இயக்குனர்களில்
செல்வாவிற்கு முக்கிய இடமுண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். முதலில் பிடிக்காத காதல்
கொண்டேன், 7ஜி படங்கள் பிடிக்கத் தொடங்கின.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்கள்
பேசிய தமிழ் புரியவில்லை என்று சொன்னார்கள். இதைப் பற்றி என்ன சொல்ல “தமிழ் இனி மெல்ல
சாகும்” என்று அன்றே சொல்லி விட்டு சென்றுவிட்டனர். தமிழ் பாடத்தையும் +2 கட்-ஆப் மதிப்பெண்ணில்
சேர்த்தால் பிறகு தெரியும் நம் தமிழ் மாணவர்களின் மொழிப் புலமையும், நமது மொழியார்வமும்.
பள்ளி முடித்து கல்லூரியில் சேரும் தமிழ் மாணவ, மாணவிகளில் நூற்றில் எண்பது பேருக்கு
ஒரு வருடத்திற்குள்ளாகவே தமிழ் எழுத வரவில்லை. சட்டென ஒருவரைக் கூப்பிட்டு “தமிழ்”
என்று ஒரு தாளில் எழுதச் சொன்னால் Tamil என்று தான் பலர் எழுதுகிறார்கள். இரண்டே வருடத்தில்
“ச”கரம் போய் “ஷ”கரம் நாவில் ஒட்டிக்கொள்கிறது. நன்றி மறந்து thanks ஒட்டிக்கொள்கிறது.
காதல் என்ற வார்த்தையில் இருந்த உணர்வு குறைந்து love என்ற வார்த்தையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் சோழர்கள் தமிழைத் தப்பாகப் பேசிவிட்டார்கள் என்று நாம் கோபப்பட்டோம்.
சோழர்களைப் பற்றி தவறாக காட்டிவிட்டார்
என்று சொன்னார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன், சோழர்களைப் பற்றி முதலில் நமக்கு என்ன
தெரியும்? சோழர்கள் வேண்டாம், நம்மில் எத்தனை பேருக்கு அவரவர் குடும்ப வரலாறு தெரியும்?
தமிழும் தமிழ் உணர்வும் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை திணிக்கப்பட்ட ஒரு பாடமாக மட்டுமே
தமிழகத்தில் இருந்துவரும் நிலையில் தமிழர் வரலாறு பற்றி நமக்கென்ன கவலை. நமது தாய்மொழியைக்
கொண்டாடும் பாக்கியம் இல்லாத்தவர்களாகத் தான் நாம் மாற்றப் பட்டிருக்கிறோம். “என் மகனுக்கு
டமில் மட்டும் சரியா வராது” என்று பீத்திக்கொள்ளும் பெற்றோர் தான் இங்கு ஏராளம். “அம்மா”
என்ற வார்த்தையே நம் தலைமுறையோடு வழக்கொழிந்து போய்விட்டது. மம்மி, மாம், மா, மம்மா
இப்படித்தான் அழைக்கின்றன இன்றைய குழந்தைகள். “அம்மா” என்ற வார்த்தையையே சொல்லித்தராத
நாம், சோழர்களைப் பற்றியா பாடம் எடுக்கப் போகிறோம்? “ரொம்ப அதிகாரம் பண்ணான், சரிதான்
போடானு வந்துட்டேன்” – ஆன்ட்ரியா பேசும் இந்த வசனம் தான் இன்றைய தமிழகத்தின், தமிழர்களின்
மனநிலை கூறும் நிதர்சன உண்மை.
சோழர்களை அவமானப்படுத்திவிட்டார்,
பாண்டியர்களை கொடூர வில்லன்களாகக் காட்டினார் என்பது தான் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.
செல்வாராகவனைக் கண்டித்து போஸ்டர்கள் எல்லாம் கூட ஒட்டப்பட்டது. ஆம், சொந்த மண்ணை விட்டு
வெளியேறி, பரதேசி போல் சோற்றுக்கே வழி இல்லாமல் அந்நிய நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும்,
“மன்னன் சொல்லே மந்திரம்” என்று தூது வர ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், பழைமை மாறாமல், கலாச்சாரம்,
பாரம்பரியம், மொழி கெடாமல் வழி வழியாக பசி, பட்டினி, சோகம், ஏக்கம் என அனைத்தையும்
தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் குகைகளுக்குள் வாழும் பஞ்சத்தில்
அடிபட்ட ஒரு கூட்டமாக “எம் தஞ்சை யாம் பிறந்த பொன்தஞ்சை, விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்”
என்று சொந்த நாடு திரும்பும் கன்வோடு வெதும்பி வாழ்பவர்களாக சோழர்களைக் காட்டியது செல்வா
செய்த குற்றம் தான். பரம்பரை பரம்பரையாக தங்களது வம்சத்தின் பெருமையை ஊட்டி வளர்த்து,
ராஜவம்சத்தின் அடையாளமாகவே உருவாக்கி, கலை, இலக்கியம், மந்திர தந்திர வித்தைகளை பாடமாகப்
புகட்டி, தொலைந்து போன தங்களது குலதெய்வச் சிலையை இன்றும் விடாமல் தேடுபவர்களாக பாண்டியர்களைக்
காட்டியதும் செல்வா செய்த மிகப்பெரிய குற்றம் தான்
சோழர் பெருமை, சோழர் பெருமை என்று
மார்தட்டும் தமிழ் மக்களுக்கு ஒரு கேள்வி. இன்றும் சோழர் பெருமையை உலகிற்கே சொல்லிக்கொண்டு
நிற்பது தஞ்சை பெரிய கோவில். அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன். அவனுக்கு
நாம் செய்திருக்கும் மரியாதை என்ன? இறந்தும் இன்று தெய்வமாக வாழும் அவனது கல்லறை எப்படி
இருக்கிறது தெரியுமா? செதுக்கப்பட்ட ஒரு கல்லை, கடவுளாக ஆயிரம் வருடங்களுக்கு மேல்
கும்பிட்டுக்கொண்டிருக்கும் நாம், அந்த கல்லைக் கடவுளாக நமக்கு கும்பிடக் கொடுத்த சோழனுக்கு
என்ன செய்தோம்? “சோழருக்கு ஒரு மணிமண்டபத்தை இந்த அரசு கட்டித் தர வேண்டும்” என்று
வருடத்திற்கு ஒருமுறை டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள். மறுபடியும் கேட்கிறேன், என்ன
தகுதி இருக்கிறது நமக்கு செல்வராகவன் சோழர் பெருமையைக் கெடுத்துவிட்டார் என்று சொல்ல?
சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல்,
நம் விருப்பதிற்கேற்ப வளைத்துக் கொள்ளவும் நெளித்துக் கொள்ளவும் நாம் பழகி வைத்திருக்கிறோம்.
“முழுக்க முழுக்க கற்பனை” என்று தெளிவாகச் சொல்லப்பட்ட ஒரு பேண்டஸி கதையில் ஒரு இயக்குனர்,
தன் கதைக்கு நியாயமாக தேவையானதைக் காட்டியதற்கு ஏதோ செய்யக்கூடாத துரோகத்தை செய்து
விட்டதைப் போல நாம் ஏற்படுத்திய பிம்பம் இருக்கிறதே! அப்பப்பா… “சோற்றுக்கு வழி இல்லாத
பிச்சைக்காரர்களைப் போல, நரமாமிசம் சாப்பிடுபவர்களைப் போல் சோழர்களை காட்டியிருக்கிறார்”
என்று சொன்னார்களே, நான் தெரியாமல் தான் கேட்கிறேன் - பசி, பட்டினி, பஞ்சம் என்றால்
என்னவென்றாவது தெரியுமா நமக்கு? தொடர்ந்து மூன்று வருடங்களுக்கும் மேலாக மழை பெய்யாமல்,
விவசாயம் செய்ய முடியாமல், எலிக்கறி தின்று, வாழ நாதியில்லாமல் தூக்குக் கயிறாலும்,
பூச்சி மருந்தாலும் தங்களையும் தங்களது குடும்பத்தவரையும் கொன்றார்களே அந்த விவசாயிகளைக்
கேட்டால் தெரியும் பசி என்றால் என்ன, பட்டினி என்றால் என்று. பள்ளிக்கூடங்களில் சத்துணவு
போடும் போது என்றைக்காவது வேடிக்கைப் பார்த்திருக்கிறீர்களா? தனக்கும் தன் தங்கைக்கும்
சாப்பாடு வாங்க போட்டி போடும் சிறுமி, தனக்கும் வீட்டிலிருக்கும் தன் நோயாளி அம்மாவிற்கும்
ஒரு கவளம் அதிகம் சோறு வாங்க மண்ணில் புரளும் சிறுவனிடம் தெரிவதற்குப் பெயர்தான் பசி.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று ஊருக்குள் ஏதாவது
வெள்ளம், புயல், பூகம்பம் என்று வந்து போட்டுத்தாக்கிய பின், உலக நாடுகள் நமக்கு ஊற்றும்
கஞ்சியை நாம் வாங்க முற்படும் பொழுது தெரியும். சர்வநாகரிகத்துடன் சுயமரியாதை கெடாமல்
அதை எப்படி நாம் வாங்கிக் குடிக்கிறோம் என்று பார்க்கலாம். தாய் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு
அகதிகளாக முகாமில் சோற்றுப் பொட்டலம் வரக் காத்திருக்கும் நம் ஈழச் சகோதரர்களிடம் கேட்டால்
தெரியும் பசி என்றால் என்ன என்று.
ஆனாலும் எங்கு “நரமாமிசம்” திண்பது
போல் காட்டப்படுகிறது நானும் படத்தில் தேடித் தேடிப் பார்க்கிறேன், எனக்குப் தென்படவே
இல்லை. நரன் என்றால் மனிதன். நரமாமிசம் என்றால் “மனிதக்கறி”. சோழ மன்னனாக பார்த்திபன்
தோன்றும் காட்சியில், மாமிசம் கொண்டு வரப்படுகிறது. அதை வாங்கித் திண்ணக் கூட்டம் படாத
பாடு படுகிறது. அது தான் நரமாமிசமா? தன் மக்களிலேயே சிலரைக் கொன்று, மீதமுள்ளவருக்கு
திண்ணக்கொடுப்பது போலவா அந்தக் காட்சி இருந்தது? இந்த வேலையை ஏன் அரசன் செய்ய வேண்டும்.
மக்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு தின்றுகொள்ள மாட்டார்காளா? ஆடு, மாடு, கோழிக்கு
அந்த இடத்தில் வாய்ப்பில்லை என்பதால் அங்கிருக்கும் ஒரே மிருகமான ஒட்டக மாமிசமாகத்தான்
அந்தக்கறி இருக்க முடியும். எதை வைத்து நரமாமிசம் என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை.
முழு அலங்காரத்துடன், ஒரு மன்னன் - சோழ மன்னன், வேட்டையாடி தன் மக்களுக்கு “உணவு” கொண்டு
வருகிறான் என்று தானே அந்தக் காட்சிக்கு அர்த்தப்படுத்தவேண்டும்? உணவிற்கு அவர்கள்
அடித்துக்கொள்வது போல் காட்டப்பட்டதற்குக் காரணம் அங்கு நிலவும் பசி, பஞ்சம், பட்டினி
தானே தவிர நரமாமிசம் தின்ன அலைகிறார்கள் என்பதல்ல.
அதேபோல் தஞ்சை கிளம்பும் முன்,
அந்தக் கிழவர் தன்னைத்தானே பலி கொடுத்துக்கொள்ளும் காட்சி. ஏதோ காட்டக்கூடாததைக் காட்டி,
“உயிர்பலி வாங்கும் காட்டுமிராண்டிகளா சோழர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள். கோவிலில்களில்
“கிடா வெட்டு” என்பது இன்றும் இருக்கிறது. எதற்கு? நம் வேண்டுதல் பலிக்க சாமிக்கு கொடுக்கும்
லஞ்சம் தான் அது. எந்த இறைவன் இறங்கி வந்து நம்மிடம் உயிர்பலி கேட்டிருக்கிறான் இது
வரை? சாமிக்கு, பொங்கலும் புளியோதரையையும் மட்டும் படைத்துவிட்டு வேண்டியதை கொடுக்கச்
சொல்லி வேண்டிக்கொள்ள வேண்டியதுதானே? ரத்தம் ஏன்? ஏனென்றால் இன்று சட்டம் போட்டும்
தடுக்க முடியாத “உயிர்பலி” என்பது நமது பாரம்பரியம். இன்று ஆடு மாடு போல் அன்று மனிதன்.
அவ்வளவு தான் வித்தியாசம். “நேர்ந்து விடப்பட்ட ஆடு” என்பதைப் போல, நம் முன்னோர்கள்
அன்று தம் மக்களிலேயே ஒருவரை பிரத்யேகமாகத் தேந்தெடுத்து, அவரையே கடவுளாகக் கும்பிட்டு,
அலங்கரித்து, நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பலி கொடுக்கின்றனர் மழை பெய்ய வேண்டும்,
பகை நீங்க வேண்டும் என்று பொதுவான மக்கள் நலன் உள்ள பிரச்சனைகளுக்காக. தனிப்பட்ட பிரச்சனைக்காக
உயிர்பலி கொடுக்கப்பட்டால் அதன் பெயர் “கொலை”. ஊர்ப்பிரச்சனைக்காக, மக்கள் நலனுக்காக
உயிர்பலி கொடுக்கப்பட்டால் அதன் பெயர் “காணிக்கை”. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி
பெற வேண்டும் என்பதற்காக காளி தேவியின் அருள் வேண்டி பலி கொடுக்கப்பட்டவனே அரவான்!
தன் இனம் வெற்றி பெற தன்னையே மாய்த்துக்கொண்டு இன்று கடவுளாக இருக்கிறான் அரவான். அவன்
பெற்ற வரம் அது. காட்டுமிராண்டித்தனமாக இருந்தாலும் இது தான் நமது வரலாறு. 18ஆம் நூற்றாண்டில்
ஆங்கிலேயர் சட்டம் கொண்டு வந்து தடுக்கும் வரை நரபலி என்பது நமது சமூகத்தில் சாதாரணமாக
நடந்து கொண்டிருந்த ஒரு சம்பவம். அதன் பிறகும் உடன்கட்டை ஏறுதல் இருந்தது. அது தனிக்கதை.
நவநாகரிகம் கரைபுரண்டோடும் இந்தக்காலத்திலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஊரில்
ஏதாவது ஒரு பூசாரியால் ஒரு சின்னக்குழந்தை நரபலிக்கு ஆளாவதாக செய்திகள் வந்து கொண்டு
தானே இருக்கிறது. “யாரையாவது தேர்ந்தெடுத்து பலி கொடுப்பதற்கு பதில், 200 வயதான தன்னை
பலி கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக மற்றவரனைவரும் தஞ்சைக்குச் செல்லுங்கள்” என்று கூறும்
அந்தக் கிழவனார் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் “சிந்தாத் திரையாகப் போங்கோள். தஞ்சையை
எட்டியவுடன் அடியேனை ஒரு நிமிடம் நிண்டு நினையுங்கோள்” முதலாமானது தம் மக்கள் அனைவரும்
எந்தத் தடையுமின்றி பிரிந்து விடாமல் ஒன்றாகப் பயணப் படவேண்டும், இரண்டாமாவது தான்
செய்யும் தியாகத்திற்கு இவர் கேட்கும் விலை - தஞ்சையை அடைந்தவுடன் ஒரு நிமிடம் நின்று
தன்னை நினைத்துக்கொள்ள வேண்டும். தஞ்சை திரும்பியிருந்தால் நிச்சயம் அந்தக் கிழவருக்கு
கோவில் எழுப்பப்பட்டிருக்கும். நரபலி கொடுக்கப்படுவது நியாயம் தான் என்று சொல்ல வரவில்லை.
அந்த மூடத்தனமும் நமது முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய கலாச்சாரத்தில் ஒன்று தான்
என்று சொல்ல வருகிறேன்.
சோழ மக்களை நாகரிகமற்றவர்களாக,
அடிமைகளாகக் காட்டியிருக்கிறார் – சோழர் ஆட்சிகாலத்தில் மட்டும்மல்ல இன்றும் அடிமைத்தனம்
இருக்கிறது. போரில் தோற்றவர்களில் ஆண்கள் பணியாட்களாகவும், பெண்கள் அந்தப்புரத்தில்
அரசனின் காமக்களியாட்டதிற்காகவும் பயன் படுத்தப்பட்டனர் என்பது ஊரறிந்த வரலாறு. இதில்
தவறாகக் காட்ட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. போரில் கைதானவர்களுக்கு பதில் இங்கு
அத்துமீறி நுழைந்தவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். ராஜ துரோகம் செய்தவர்கள் ஊரறிய
பலி கொடுக்கப்படுவார்கள். இது இன்றும் பல நாடுகளில் தொடர்கிறது. தென்கொரிய டி.வி சேனல்களை
திருட்டுத் தனமாகப் பார்த்தற்காகவும், பைபிள் வைத்திருந்த குற்றத்திற்காகவும்
தன் மக்களில் 80 பேரை பொதுமக்கள் பார்வையில் வைத்து சுட்டுக்கொன்றிருக்கிறது வடகொரியா.
மாறி மாறி புறாக்களையும் ராக்கெட்டுகளையும் விட்டுத் திரியும் இன்றைய சூழலிலேயே இப்படி
நடக்கிறதென்றால் அந்நாட்களில் தண்டனை எப்படி இருந்திருக்கும்.
“கல் குண்டு” காட்சி - ஒரு உதாரணத்திற்கு
சொல்கிறேன். காளையை அடக்குவதென்பது நம் வீர விளையாட்டுகளில் ஒன்று (இப்போது நடப்பது
போல் 10 பேர் ஒரு காளையை அடக்குவதல்ல). ஊரே கூடி நின்று கைதட்டி வேடிக்கைப் பார்த்து
கொண்டாடும் ஒரு திருவிழாக்கால நிகழ்வு அது. இன்று பொங்கல் தினங்களில் மாடுபிடி போட்டிகள்
நடப்பதைப் போல. இந்தப் படத்தில் அது கல் குண்டு எறியும் காட்சியாகக் காட்டப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்குப் பிறகு சொந்த நாடான தஞ்சைக்குத் திரும்புவதைக் கொண்டாடும் வகையில்
இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. தண்டனை என்று மட்டும் சொல்லாமல் போட்டி என்று நான்
சொல்லக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் முத்து (கார்த்தி) வென்ற பிறகு அவனை வீரனாக ஏற்று
கொண்டாடுகிறார்கள் மன்னனும் மக்களும். ரோமானியர்கள் செய்வதைப் போல தமிழர்கள் செய்வதாகக்
காட்டுகிறார் என்றால் தின்பதற்கே ஒட்டகம் தான் இருக்கும் இடத்தில், அடக்குவதற்கு காளைக்கு
எங்கு போவது? எனவே இங்கு காளைக்கு பதில் கொம்பு சீவப்பட்டு காளையாகவே வளர்க்கப்பட்ட
மனிதனை அடக்க விட்டிருக்கிறார்கள். வித்தியாசம் அவ்வளவே. ஏதோ காளையை அடக்கும் போது
மயில் இறகைக்கொண்டு வருடுவதைப் போல் இருக்கும் என்பது போலவும், இங்கு ஒரு மனிதன் மற்றொருவனை
கல் குண்டைக் கொண்டு தாக்குவது தான் கொடூரமாக இருக்கிறது என்றும் சொல்வதில் என்ன அர்த்தம்
இருக்கிறது என்று தெரியவில்லை.
குடவோலை முறையைக் கண்டுபிடித்த
சோழர்களை இப்படியா காட்டுவது என்று கூட படித்த நியாபகம் இருக்கிறது. குற்றங்களை மட்டுமே கண்டுபிடிக்கப் பழகிய நம் கண்களுக்கு
நல்லது எதுவுமே தெரிய மறுக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்கள் வாழ்வதாகக்
காட்டப்படும் மிகப் பெரிய குகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் தண்ணீர் வருகிறது.
அதை வரிசையில் நின்று மக்கள் வாங்கிக்கொண்டு போகின்றனர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே
நெருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்தே வீட்டிற்கு ஒருவர் என்று நெருப்பு
வாங்கிக்கொண்டு போவதாகக் காட்டப்படுகிறது. அதாவது “ரேஷன்” முறை. சிவலிங்கத்தையும்,
மன்னன் சிலையையும் வடிக்கும் சிற்பி அந்த குகையில் இருக்கிறான், ஓவியம் இருக்கிறது,
மன்னர் வருகிறார் என்று கட்டியம் கூறுபவன் இருக்கிறான், படைத்தளபதி இருக்கிறான், படை
வீர்ர்கள் இருக்கிறார்கள், அந்தப்புரம் இருக்கிறது, அதில் அழகிகள் இருக்கிறார்கள்,
யாழ் இசை இருக்கிறது, நடனம் இருக்கிறது. மந்திர வலிமை இருக்கிறது, தந்திர வலிமை இருக்கிறது.
பசி பஞ்சம் இருந்தாலும் 200 வயது வரை நோய் நொடியில்லாமல் வாழும் மக்கள் இருக்கிறார்கள்.
மூலிகை வைத்தியம் இருக்கிறது, அக்குபன்ச்சர் வைத்தியமும் இருக்கிறது. வீரம் இருக்கிறது,
போர்த்திறமை இருக்கிறது. முக்கியமாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மன்னன் மேல் கொண்டுள்ள
பக்தி மாறாத மக்கள் இருக்கிறார்கள், மக்களுக்காக உயிரை விடத் துணியும் மன்னன் இருக்கிறான்,
அழியாத மொழியாக தமி்ழ் இருக்கிறது. என்ன இல்லை இந்தப் படத்தில்? இவையெல்லாம் ஏன் நம்
கண்களில் தென்படவில்லை? காட்டப்பட்ட தமிழர்கள் கருப்பாக இருந்ததனால் வெளிச்சம் போதவில்லையா?
கதையில் காட்டப்படும் மக்கள் சோழ தேசமான தஞ்சையை விட்டு வந்து ஆயிரம் வருடங்கள் ஆவதாகச்
சொல்கிறார் செல்வா. அவர்கள் இன்னும் மன்னன், அரண்மனை, விசுவாசம், பலி, இயல், இசை, நாடகம்,
சிற்பம் என்று இருக்கிறார்கள். அது தான் தவறோ? அன்றிலிருந்து இன்று ஆயிரம் வருடங்களுக்குப்
பிறகு இன்று நாம் எப்படி இருக்கிறோம்? நம் மன்னர்கள் (அரசியல்வாதிகள்?) எப்படி இருக்கிறார்கள்?
அதைத் தான் நம்மால் ஒத்துக்கொள்ள முடியவில்லையோ? மக்கள் பணத்தைச் சுரண்டி, எவன் செத்தாலும்
எனக்கென்ன என்று அடுத்தவனை குறை கூறியே சோழ மக்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பது போல்
காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
நிறத்தைப் பற்றிச் சொன்னவுடன்
தான் நியாபகத்திற்கு வருகிறது. சோழர்களை கருப்பாகக் காட்டினார் என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு.
இன்று நாம் காணும் தமன்னா, ஹன்சிகா ‘கலர்’ நமது நிறமல்ல என்பது முதலில் நமக்குப் புரிய
வேண்டும். ஆயிரம் துணை நடிகர்ளை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில் தினமும் ஒவ்வொருவருக்காக
மேக்கப் போட்டு விட்டு தயார்படுத்துவதென்பதெல்லாம் முடியாத காரியம் என்பது சிறிது யோசனை
செய்து பார்த்தாலே தெரியும். ஒழுகிக் கொண்டிருக்கும் தண்ணீரை வரிசையில் நின்று வாங்கும்
கூட்டமானது தேய்த்துக் குளித்து எத்தனை நாளாகியிருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
ரோட்டில் திரியும் பிச்சைக்காரன் எந்த நிறத்தில் இருப்பானோ அதே நிறத்தில் தான் அந்த
மக்கள் இருந்தார்கள். மன்னரும் மன்னர் குடும்பமும் விதிவிலக்கு!
தமிழகத்தில் இரண்டு மாபெரும் ராஜ்ஜியங்களுக்குள்
நடக்கும் கதை ஆயிரத்தில் ஒருவன். சரி, சோழர்கள் பாண்டியர்கள் கூடாது என்று மறுக்கிறோம்.
குப்பன் ராஜ்ஜியம், சுப்பன் ராஜ்ஜியம் என்று வைத்துக்கொள்ளலாமா?
ஒரு வேளை செல்வா இப்படி எடுத்திருந்தால்
யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காதோ?
“குப்பன்பாளையம் என்ற ஊரைத் தலைநகராகக்
கொண்டுள்ள குப்பன் ராஜ்ஜியத்திற்கும், சுப்பனூர் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட சுப்பன்
ராஜ்ஜியத்திற்கும் பகை. சதா போர் செய்து கொண்டே இருக்கிறார்கள். தோற்கும் ஒரு சமயத்தில்
இளவரசனை ராஜ்ஜியத்தின் குடிமக்கள் சிலருடன், சுப்பனின் குல தெய்வவமான சுப்புசாமி சிலையையும்
சேர்த்து வேறு இடத்திற்கு தப்பிக்க வைக்கிறான் குப்பன் ராஜ்ஜிய மாமன்னன். தூது வரும்
வரை காத்திருங்கள் என்றும் சொல்கிறான். அவர்கள் போகும் இடம் வியட்நாம் அருகிலிருக்கும்
ஒரு தீவு. குப்பன்பாளையம் சென்று தம் மக்களோடு சேர்வது எப்போது என்று காத்திருக்கிறார்கள்
இந்த குப்பன் ராஜ்ஜிய மக்கள், முக்கியமாக இந்த மக்கள் கருப்பாகத்தான் இருப்பார்கள்.
சுப்பனூர் மக்கள் பளீர் கலர், குப்பனூர் மக்கள் கரிக்கலர். அதனால் தான் போரே வந்தது
என்று கூட வைத்துக்கொள்வோம். நிறவெறி!”
இப்போது எப்படியிருக்கிறது? யாருக்கும்
எந்தப் பிரச்சனையும் இருக்காதல்லவா? இவர்கள் என்ன தமிழ் பேசினாலும் பரவாயில்லை. ஏனென்றால்
குப்பன், சுப்பன் அப்படி தான் பேசுவார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஏன் அது தமிழே
இல்லை என்று கூட நாம் சொல்லிவிடலாம். அது அவர்கள் மொழி, வேறேதோ வேற்று மொழி. ஆட்கள்
கருப்பாக இருந்தால் என்ன? இம்மக்களின் நிறமே இது தான் என்று சொல்லிவிட்டோம். நரமாமிசம்
தின்றால் என்ன? விஷத்தைக் குடித்துச் செத்தால் என்ன? அது அவர்கள் கலாச்சாரம். சொல்லுங்கள்
இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா ஆயிரத்தில் ஒருவனின் கதை? அது சரி, புனைவுக்கதைகளுக்கே
இங்கு வக்கில்லாத பொழுது உண்மைக்கதைகளை எடுப்பது பற்றியெல்லாம் நாம் யோசிக்கக்கூட முடியுமா
தெரியவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் படம் நிச்சயம்
ஒரு தோல்விப்படம் தான். போட்ட காசை எடுப்பதற்குப் பெயரல்ல வெற்றி. 5 பாட்டு, 5 பைட், ஹீரோயினின் தொப்புள், பின்னி மில்ஸில் கிளைமாக்ஸ் பைட் என்று வரும் மாமூல்
படங்களுக்கு வேண்டுமானால் இது சரியாக வரலாம். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் அந்த வகைப் படமல்ல.
தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டிய படம். ஒரு சாதாரண படத்திற்கு கிடைக்கக்கூடிய
பெருமைகள் கூட ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் அது சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும் கிடைக்கவில்லை.
ஒரு சில இடங்களில் உட்டாலக்கடி
செய்திருந்தாலும் ஜி.வி.பிரகாஷின் இசையை இன்று கேட்டாலும் இதயம் கனப்பது நிச்சயம்.
அதிலும் முக்கியமாக ரீமா தங்களை ஏமாற்றிவிட்டது தெரிந்து கண்களில் நீர் ததும்ப தன்
மக்களிடம் மன்னன் வரும் அந்தக் காட்சியில் ஒளிக்கும் பின்ணணி இசை, இப்பொழுது கூடக்கேட்கிறது.
சாகிறவரையில் கார்த்திக்கு இது போல் ஒரு படம் அமையாது. “மன்னனாக வாழ்ந்தேன்” என்று
பார்த்திபன் சொன்னதன் முழு அர்த்தம் படத்தில் தெரிந்தது. பல இடங்களில் பார்வையிலேயே
தன் நிலை மொத்தத்தையும் சொல்லியிருப்பார். தையல் அதிகம் இல்லாமல் அந்த காலத்தில் இருப்பது
போலவே வடிவமைக்கப்பட்ட உடைகள், அணிகலன்கள், இடிபாடுகளுக்கிடையே அமைந்திருக்கும் அரண்மனை,
அந்தப்புரம் என்று “கலை” அவ்வளவு அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கவிஞர் வைரமுத்து
அவர்களின் வரிகள் உச்சம் தொட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். பி.பி.சீனிவாஸ் குரலில் “பெம்மானே,
பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ” என்ற குரலுக்கு கரையாத நெஞ்சம் கல்நெஞ்சம்.
ரீமா சென் தமிழில் நடித்த ஒரே ஒரு உருப்படியான படம் ஆயிரத்தில் ஒருவன். மாமூல் தமிழ்
சினிமாவில் ஹீரோயினை ஹீரோ படுத்தும் பாட்டையெல்லாம் இந்தப் படத்தில் இவர் செய்திருப்பார், கார்த்திக்கிற்கு. செல்வாவின் மாஸ்டர்பீஸ் இந்தப் படம். விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பதன் அர்த்தம்
தெரிந்து பயம்படுத்தப்பட்டது இந்தப் படத்தில் தான். ஒளிப்பதிவில் விளையாடியிருப்பார் ராம்ஜி. தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர் -ஒளிப்பதிவாளர் கெமிஸ்டரி மட்டும் தான் படம் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். அப்படி ஒரு ஜோடி நம்பர் 01 செல்வா - ராம்ஜி. ஆனால் இத்தனை முயற்சிகளுக்கும்
கேவலம் ஒரு விஜய் அவார்ட்ஸோ அல்லது மிர்ச்சி அவார்டோ கூடக் கிடைக்கவில்லை.
பெங்களூரில் பொங்கல் தினத்தன்று
அலுவலகம் முடிந்தபின் நேராக இரவுக்காட்சி ஊர்வசியில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தோம்.
இறுதிக்காட்சியில் “புலிக்கொடி வேந்தே, தஞ்சை செல்லக் கப்பல் காத்திருக்கிறது, சீக்கிரம்
வாருங்கோள்” என்று பார்த்திபன் கேட்கும் குரலுக்கு எங்கள் கண்ணில் இருந்து நீர் வந்தது
இன்றும் நினைவில் இருக்கிறது. வழியெங்கும் தடைகள், வழி காட்டும் நடராஜர் நிழல், சோழ
மன்னனுக்காக, அவனைக் காப்பதாக எடுத்த சத்தியத்திற்காக கூண்டோடு சாகும் சிகப்பு மக்கள்,
போர்க்களத்தில் காட்டும் வீரம், கையாளும் உக்திகள், இறுதிக்காட்சியில் மன்னனை சுமந்து
கொண்டு போய் உயிர்விடும் மிச்சசொச்ச மக்கள் என்று படத்தில் முக்கியமாக இரண்டாம் பாதியில்
எண்ணி எண்ணி ரசிக்க ஆயிரம் விஷயங்கள் இந்த ஆயிரத்தில் ஒருவனில் உண்டு. 10 முறைக்கும் அதிகமாக முழுவதுமாக பார்த்துவிட்ட இந்தப் படத்தை காட்சி வாரியாகப் பிரித்து என்னால் மணிக்கணக்கில் பேச முடியும், பக்கம் பக்கமாக இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளைப் பற்றி எழுத முடியும். தமிழில் வந்த மிகச்சிறந்த உண்மையான முயற்சி - ஆயிரத்தில் ஒருவன்.
படத்தின் இறுதிக்காட்சிகளில் ராணுவ வீரர்கள்
கைது செய்யப்பட்ட மக்களை என்ன செய்தார்கள் என்பதை செல்வா அன்றும் Channel 4 இன்றும்
தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்கள்.
திரைப்படத்தை திரைப்படமாக மட்டும்
பார்த்து ஒரு இயக்குனர் சொல்ல வருவதை குறைந்த பட்சம் அமைதியாக அமர்ந்து கேட்கவாவது
செய்தால் போதும், செல்வா போன்ற இயக்குனர்கள் நம்மை கூட்டிச் செல்லும் உலகங்களில் நம்மாலும்
உலா வர முடியும். இரண்டாம் உலகையாவது சிதைத்துவிடாமல் ரசிப்பதற்கு முயற்சி செய்வோம். இதுவும் செல்வா என்னும் கிறுக்கனின் பல நாள் கனவு.
தொடரும்...