நீண்ட நாட்களாகி விட்டது பதிவெழுதி.
Pfool’s movie recommendations ஆரம்பித்த புதிதிலேயே நின்று விடக்கூடாது என்பதற்காக
பார்த்து பார்த்து தினம் ஒரு படத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். நண்பர்களும்
எனது முகப்புத்தகப் பக்கத்திற்கு பேராதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் (64 likes!). மகிழ்ச்சி.
அங்கு நான் அறிமுகப்படுத்தும் படங்களில் முக்கியமானவற்றைப் பற்றி நிச்சயம் பதிவெழுதுவேன் என்று சொல்லியிருந்தேன்.
அதன்படி இதோ சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத சரியான படம் ஒன்றைத் தேந்தெடுத்திருக்கிறேன். BANG RAJAN.
YouTube ல் காணொளி பார்த்து விட்டு
பல நாட்களாக இந்தப் படத்தைத் ஆங்கில சப்டைட்டில் உடன் தேடிக் கொண்டிருந்தேன் (YouTubeல் சப்டைட்டில் இல்லாமல் முழு படமும் உள்ளது). எனது பக்கத்தில் "இந்த படம் இருந்தால்
லின்க் கொடுங்கள், ப்ளீஸ்" என்று கேட்ட மறுநாளே டாரண்ட் லின்க் ஒன்றை, யாரென்றே தெரியாத நண்பர்
ஒருவர் கொடுத்தார். இந்தப் படத்திற்காக நான் தேடி நொந்து போன பல செத்த டாரண்ட்கள் போல்
இல்லாமல். இந்த டாரண்ட் சரியான சீடிங் உடன் அதிவேகமாக படத்தை எனக்குக் கொடுத்தது. அந்த
அருமை நண்பருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...
நான் முன்பு எழுதிய SeediqBale: Warriors of the Rainbow படத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒரு படம், Bang
Rajan. இதுவும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சரித்திரத்தில் இன்றும் மாபெரும் வீரர்களாக வாழ்பவர்களைப்
பற்றிய படம் தான். இன்றைய தாய்லாந்தின் அன்றைய அயோத்திய பேரரசு (Ayutthaya Kingdom) வீழ்ந்த
கதையில் ஒரு முக்கியமான பகுதி தான் இந்தப் படம். 1765 முதல் 1767 வரை நடந்த பர்மா
- சயாம் போரின் (The Great Burmese - Siamese War) ஒரு முக்கிய பகுதியைத்தான் இந்தப் படம் நமக்குச் சொல்கிறது. 1763 ஆம் ஆண்டு பர்மாவின் மாமன்னனான
Mangra, தனது ஆட்சியின் கீழ், சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் கொண்டு வர எண்ணினான். அவனது
முதல் குறி சயாம் (தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சயாம்). மன்னனின் தளபதிகள் 1765 ஆம் ஆண்டு சயாமின் தலைநகரமான அயோத்தியாவை இருபக்கதிலிருந்து
நெருங்கி, வழியெங்கும் உள்ள சிறிய கிராமங்களை எல்லாம் அழித்து, எதிர்த்தவர்களைக் கொன்று,
சரணடைந்தவர்களை அடிமைப்படுத்திக் கொண்டே வந்தனர். ஆனால் அவர்காளால் தலைநகர் அயோத்தியாவை திட்டமிட்டபடி
நெருங்க முடியவில்லை. காரணம் வழியில் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த ஒரு கிராமம். அந்த
கிராம மக்கள், கடலென படையெடுத்து வந்த பர்மியப் படையை விடாமல் விரட்டியடித்துக்கொண்டே
இருந்தனர். அந்த கிராமம் தான் "பேங் ரஜான்" (Bang Rachan).
பேங் ரஜான் ஒருவழியாக
வீழ்த்தப்பட்டு, அயோத்தியாவிற்குள் பர்மா படையெடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே தலைநகர்
வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டிருக்கிறது. இதே படையைத் தான் கிட்டத்தட்ட 5 மாத காலத்தில் 8 முறை அருகிலேயே நெருங்க விடாமல் விரட்டியடித்திருக்கிறார்கள் சாதாரண விவசாய
கிராமத்தினரான பேங் ரஜான் மக்கள். உலகில் அதிகம் அறியப்படவில்லை என்றாலும் பேங் ரஜான் கிராமத்தினரின் புகழ் அன்றும் இன்றும்
தாய்லாந்தெங்கும் பரவிக்கிடைக்கிறது. இவர்களுக்கு என்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியங்கள்
அந்நாட்டில் உள்ளது. இந்தப் படம் அவர்களது வீர வரலாற்றைச் சொல்லும் படம்.
மேலும் உண்மைச் சம்பவத்திற்கும்
(ரெக்கார்ட் படியான வரலாறு) இந்த படத்தில் காட்டப்படுவதற்கும் சின்னச் சின்ன வேறுபாடுகள்
இருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க தாய்லாந்தில் காலம்காலமாக சொல்லப்பட்ட வீர வரலாற்றின்
அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் வீரர்களின் வரலாறு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது, அவர்களது மரணம் குழந்தைகளுக்கு வீரபாடமாக போதிக்கப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் மட்டும் தான் வீரர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். வெளியில் அவர்களைப் பற்றி சுதந்திரமாக இங்கு பேசவே முடியாது. இதில் எங்கிருந்து படம் எடுப்பது, பாடமாக நினைவுகூறுவது?
சரி, படத்திற்கு போவோம். தலைநகரான
அயோத்தியாவை இரு பக்கத்திலிருந்து தாக்க பெரும் படைகள் வந்துகொண்டிருக்கும் சமயம்.
சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி வந்த
மக்களைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது பேங் ரஜான் என்னும் சிறிய விவசாய கிராமம். தங்களது
மன்னனின் கட்டளைக்கு இணங்கி, பர்மா படையை தங்களால் முடிந்த அளவு தடுத்து நிறுத்தப்
பாடுபட்டுக்கொண்டிருக்கிறனர். இந்நிலையில் சண்டையில் மோசமாக காயமடையும் பேங் ரஜானின் வயதான தலைவர் Nai
Taen, தனக்கு அடுத்த தலைவராக வெளியாளான மாவீரன் Nai Chan Nuad Kheo என்பவனை ஊர் மற்றும்,
அவர்களது ஊரிலேயே தங்கியிருக்கும் புத்தத்துறவியின் சம்மதத்துடன் தேர்ந்தெடுக்கிறார்.
பெரிய மீசை வைத்த, போர்க்கலைகளில் வல்லவனான இந்த Nai Chan Nuad Kheo பர்மாவின் படையெடுப்பில்
தன் குடும்பத்தை இழந்தவன். பர்மாவின் படையை வேரோடு அழிப்பதையே தனது வாழ்நாளின் லட்சியமாகக்
கொண்டவன்.
இந்தத் தலைவன் மட்டுமல்ல, பேங்
ரஜானில் வாழ்ந்து வரும் பலரும் எதிரிக்கு தங்களது குடும்பம், உடைமைகளை பலி கொடுத்து
விட்டு தஞ்சம் புகுந்தவர்கள் தான். பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கொத்து கொத்தாக
அப்பாவி மக்களை வழியெங்கும் கொன்றுகுவித்து கொண்டே வருகின்றனர் பர்மாவின் படையினர்.
கிராமத்தை வலுப்படுத்த சுற்றிலும்
மரத்தால் கோட்டை அமைத்து காவல் காக்க வேண்டும் என்கிறான் Nai Chan Nuad Kheo. சதா குடித்துக்கொண்டும் யாருக்கும் அடங்காமல் அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கும் (ஆனால் வீரனான) Ai Tong Maen "இதெல்லாம் வீண் வேலை; எதிரி நம்மைத் தாக்குவதற்கு முன் நாம் அவர்களைத் தேடிப் பிடித்து
தாக்க வேண்டும்" என்கிறான். கிராமத்தின் முக்கிய வீரனான Nai Thongmen என்பவனும் அதுவே சரி
என்கிறான். ஆனாலும் இறுதியில் தலைவன் சொல்லேற்று கோட்டையைக் கட்டி மாறி மாறி
காவல் பணியில் ஈடுபடுகின்றனர்.
Ai Tong Maen கோடாரி கொண்டு சண்டையடும் மாவீரன். பர்மாவின் படையிடம் தன் மனைவியையும் குழந்தையையும் தொலைத்தவன். அவன் எப்படி பேங் ரஜானிற்கு
வந்து சேர்ந்தான் என்பது அவனுக்கே தெரியாது. அதுவே மறுபுறம், Nai Thongmen மிகச் சிறந்த வில்லாளன்.
தனது இளம் மனைவியுடன் வசித்து வருபவன். அவனது மனைவு கற்பமாக இருப்பதும் இடையில் தெரியவருகிறது.
இவர்கள் தவிர ஒரு இளம் காதல் ஜோடியும், இன்னும் சில மறக்க முடியாத கதாப்பாதிரங்களும் படத்தில் உண்டு.
பர்மியப் படை நெருங்கி வர வர மக்கள்
கூட்டம் கூட்டமாக தலைநகர் நோக்கிப் பயனப்படுக்கொண்டே இருக்கின்றனர். அங்கு தான் தங்களுக்கு
பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். ஆனாலும் ஊர்த்தலைவன் Nai Chan Nuad Kheo தங்களால்
அந்த மாபெரும் படையை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறான். தனது சகாக்களை தலைநகர்
அயோத்தியாவிற்கு அனுப்பி மன்னரிடம் பேங் ரஜான் கிராமத்திற்கு பீரங்கிகள் வேண்டும் என்று உத்வி கேட்கிறான். ஆனால்,
தாக்குதலில் பேங் ரஜான் தோற்றால் பீரங்கிகள் பர்மா வசம் போய் தலைநகருக்கு மேலும் ஆபத்து
விளைவிக்கும் என்பதால், உதவி மறுக்கப்படுகிறது. எனவே கையில் இருக்கும் இருப்பையெல்லாம்
உருக்கி தாங்களே ஒரு பீரங்கியைச் செய்ய முடிவு செய்கின்றனர் ஊர் மக்கள்.
படத்தின் முடிவில் பேங் ரஜான்
வீழ்ந்து விடுகிறது தான். ஆனால் அந்த வீழ்ச்சி சாதாரணமாக இருப்பதில்லை. ஆண் பெண் பாகுபாடில்லாமல்
வாளேந்தி சண்டையிடும் மக்கள், மண்ணில் சாயும் முன் குறைந்தது 100 பேரையாவது கொன்று விட்டு
தான் வீர மரணமடைகின்றனர். இவை அனைத்தும் அருமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது இந்தப்
படத்தில். அதுவும் இறுதிப்போரில் குதிரைக்கு பதில் ஒரு மிகப்பெரிய எருமை மாடின் மீதேறி
Ai Tong Maen வெறிகொண்டு சண்டையிடும் காட்சியெல்லாம் அதியற்புதம்.
மிகப்பெரிய பொருட்செலவில் 2000
ஆம் ஆண்டு, தாய்லாந்து நாட்டு இயக்குனர் Tanit Jitnukul என்பவர் இயக்கிய இந்த மாபெரும்
வெற்றிப் படம் Thai சினிமா வரலாற்றில் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்னரே அருமையான பின்னனியிசை, தேவையான அளவு கிராபிக்ஸ், அற்புதமான
சண்டை, போர்க்களக் காட்சிகளுடன் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது.
2010 ஆம் ஆண்டு
Bang Rajan 2 என்ற பெயரில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் என ஒரு படம் வெளிவந்துள்ளது.
அது கிட்டத்தட்ட இந்தப் படத்தின் ரீமேக் போலவே தான் இருக்கிறது. சண்டைகாட்சிகளுக்காக
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
Bang Rajan படத்தின் YouTube காணொளி - இங்கே
Bang Rajan 2 படத்தின் YouTube காணொளி - இங்கே
Bang Rachan பற்றிய மேலதிக தகவல்களுக்கு
– Wikipedia
படத்தை தரவிறக்கம் செய்ய எனக்கு
கிடைத்த டாரண்ட் லின்க் - http://thepiratebay.se/torrent/3262648/
மேலும், நல்ல சினிமா எதுவென்று தெரிந்து கொள்வதற்கு http://www.facebook.com/pages/Pfools-movie-recommendations/233998196650340