காலம் காலமாக மனிதனை மனிதன் அடக்கி ஆளும் மரபும், குனிந்தே பழகிய மனிதனும் திடீரென்று ஒருநாள் முதுகெலும்பின் பயனறிந்து நிமிர்ந்து நிற்பதும் நடந்து கொண்டேதானிருக்கிறது. தற்போது சைனாவின் ஒரு பகுதியாக இருக்கும் தைவான் 1930களில் ஜப்பானின் அதிகாரப் பிடியில் இருந்த போது நடந்த “Wushe Incident” என்றழைக்கப்படும் பழங்குடியின மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் அப்பட்ட பதிப்பே "Warriors of the Rainbow: Seediq Bale" என்னும் இந்தத் திரைப்படம்.
தைவானின் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், சென்ற ஆண்டின் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இறுதி வரை பங்கேற்று ஈரானின் 'A Seperation' படத்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் தயாரிப்பாளர் Face Off, MI-2, Red Cliff படங்களின் இயக்குனர் John Woo! படத்தின் இயக்குனர் Wei Te-Sheng.
1895 ஆம் ஆண்டு ஜப்பானுடன் சைனா போட்ட ஒப்பந்தத்தின்படி (Treaty of Shimonoseki) தைவான் ஜப்பானின் மாகாணமாகிறது. அடர்ந்த மலைக்காடுகளில் வாழும் பல்வேறு இனமக்கள், அந்நியர்களான ஜப்பானியர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழழும் உருவாகிறது. அப்படி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தன் இனம் அழிந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஜப்பானியர்களுக்கு அடங்கி தங்களது வீரம், போபம், கலாச்சாரம், பண்பாடு, முன்னோர் பெருமை என அனைத்தையும் உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழும் "Seediq Bale" என்னும் இனத்தின் தலைவனான Mona Rudao என்பவனின் கதையே இந்தப் படம். குறைவான சம்பளத்திற்கு விலங்கை விடக் கேவலமாக நடத்தும் அந்நியர்களின் அட்டகாசங்களை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கி எழும் சுனாமி போல, உள்ளுக்குள்ளேயே புழுங்கி புழுங்கி ஒருநாள் வெடித்துக் கிளம்பும் எரிமலை போல 20 ஆண்டுகள் குனிந்தே இருந்த Mona Rudao ஒரு நாள் நிமிர்ந்தேழுகிறான். 300 பேர் கொண்ட இவனது படை, அதிநவீன ஆயுதமேந்திய 3000 ஜப்பானியர்களை ஓட ஓட விரட்டுகிறது.
மான் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை வேட்டையாடுகிறது மற்றொரு கூட்டம். Mona Rudao - 16 வயது கட்டிளங்காளை. தங்களது இனத்தின் வீர அடையாளத்தை தன் முகத்தில் பச்சை குத்த அவன் எதிரியின் தலையைக் கொண்டு வர வேண்டும். அப்படிப் பச்சை குத்தப்பட்ட வீரனால் மட்டுமே இறந்த பின் வானவில்லில் வாழும் தங்களது முன்னோர்களிடம் சென்று சேர முடியும். ஆற்றின் மறுகரையிலிருந்து அம்பெய்து எதிரியைத் தாக்கிவிட்டு ஆற்றில் தாவிக்குதித்து மற்ற எதிரிகளின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு தப்பித்து வீழ்ந்த எதிரியின் தலையை வெட்டி, முதுகில் தொங்கும் தன் பையில் போட்டுக்கொண்டு கிளம்புகிறான். இது தான் படத்தின் முதல் காட்சி! இந்த முதல் காட்சியே அடுத்தடுத்து நாம் பார்க்கப்போகும் பிரம்மாண்டத்திற்கு சரியான ஆரம்பமாய் அமைந்து விடுகிறது.
இரண்டு பாகங்களாக மொத்தம் நான்கரை மணிநேரம் ஓடக்கூடிய இந்தப் படம், பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். மொத்தமும் மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும், அவற்றின் ஊடே அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளிலுமே எடுக்கப்பட்டிருப்பதால் இந்தப் படத்தில் நான் கண்ட "அழகியலை" வேறு எந்தப் படத்திலும் கண்டதில்லை. பச்சை வண்ணம் போர்த்தியிருக்கும் வனப்பரப்பில், வெள்ளை வெளேர் பனிமூட்டத்தின் நடுவே சிகப்பு ரத்தம் தெறித்து விழும் காட்சிகள் வன்முறையாகத் தெரியவில்லை, அழகியலாக அதிசியக்க வைத்தது!
பல நூறு வருடங்கள் சுதந்திரமாக வேட்டையாடி, உற்சாக பானமருந்தி, முன்னோர்களை கடவுளாக வணங்கி, வீரத்தின் அடையாளமாக எதிரியின் தலைவெட்டி, முன்னோர்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதே இந்தப் பிறவியின் மோட்சம் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்களை கூண்டோடு ஒழிக்க ஜப்பான் வானிலிருந்து வெடிகுண்டுகளை வீச, பற்றி எரியும் அந்த பொன்னிற நெருப்பும் சேர்ந்து காடே தக தக வென்று ஜொளிக்கும் அந்த அற்புத காட்சியைக் காணக்கண் கோடி வேண்டும். மார்பில் வாளேறி, வாயில் ரத்தம் கக்கி, கீழே விழுந்து கிடக்கும் ஜப்பான் ராணுவ வீரன் ஒருவன் உயிர் பிரியும் தருவாயில் அந்த அற்புதக் காட்சியைக் காண்கிறான்! படத்தில் இன்னும் கொஞ்சம் தலைகள் உருண்டால் இன்னும் கொஞ்சம் வெடிகுண்டுகள் வீசப்பட்டால் இன்னும் சில அற்புத காட்சிகள் காணக்கிடைக்குமே என்று என்னை ஏங்க வைத்த காட்சியமைப்புகள் அவை. கொஞ்சம் குரூரமாகத் தோன்றினாலும் உண்மை அதுவே!
பல மொழிகளில் பல நாட்டுத் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை எந்தவொரு படத்திலும் இத்தனை தலைகள் வெட்டப்பட்டுப் பார்த்ததில்லை; இத்தனை உடல்கள் தூக்கில் தொங்கியும் பார்த்ததில்லை. வெட்டிய எதிரிகளின் தலைகளை ஒப்படைக்க வேண்டும் என்று ஜப்பான் ஆணையிடும் போது Mona Rudao தன் குடிலிலிருந்து இரண்டு பெரிய மூட்டைகளை எடுத்து வந்து கொட்டுகிறான். அனைத்தும் மனித மண்டை ஓடுகள்! ஆண்கள் சண்டைக்குப் போய்விட்டார்கள். அவர்கள் உயிருடன் திரும்பி வர வாய்ப்பே இல்லை. நாம் இறந்து விட்டால் உணவுத்தட்டுப்பாடாவது குறையுமே என்று கூட்டம் கூட்டமாக தூக்கில் தொங்குகின்றனர் Seediq Bale பெண்கள்!
முதல் பாகத்தின் இறுதிக்காட்சியின் ஆரம்பத்தில் மலைவாசி ஒருவன், வரிசையின் இறுதியில் "புத்தரே" என்று அமைதியாக நின்று கொண்டிருக்கும் ஒரு ஜப்பான் போலீஸ் அதிகாரியின் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு ஓடுகிறான். என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் நடந்து கொண்டிருப்பது ஒரு பள்ளியின் ஆண்டுவிழா; இப்பொது கூட்டதின் நடுவே தலையிலாமல் ஒரு முண்டம்! இப்படி படத்தில் திகைக்கவைக்கும் காட்சிகள் ஏராளம் உண்டு.
அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் தான் படத்தின் கதை. விளக்கிக்கூற எதுவும் இல்லை. படத்தின் முக்கிய சிறப்பம்சம் ஒளிப்பதிவு, மற்றும் சண்டைக்காட்சிகள். படம் ரொம்பவே நீளம் என்றாலும், அலுப்படையச் செய்யும் காட்சிகள் மிகக்குறைவு என்பதால் தாராளாமாக ஏதாவதொரு சனி-ஞாயிறு கிழமையில் நான்கு மணிநேரத்தை இதற்காக ஒதுக்கலாம்.
தலைவன் இறந்து விட்டானென்று கூத்தாடுகின்றது குள்ளநரிக்கூட்டம். மூன்றாண்டுகள் ஆகிவிட்டது இனி எவன் வரப்போகிறான் என்று ஏளனப்பார்வை பார்பவர்கள் கூடிய விரைவில் தெரிந்து கொள்வார்கள், விழுந்தது உடல் அல்ல விதை என்று! கூட்டம் கூட்டமாக எம்மினத்தவரை அழித்தவர்களுக்கு பதில் சொல்லும் நாள் தூரத்தில் இல்லை. இங்கும் ஒரு Mona Rudao உருவாவான், கொத்துக்கொத்தாக எதிரியின் தலைகளைக் கொய்தெறிவான்! Warriors of the Rainbow: Seediq Bale படம் இவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
ஒரு சோறு பதம் கீழே: