இளம்பிறையின் மூலம் நாங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் பள்ளிகளுக்குச் செய்த உதவிகளிலேயே மிகப் பெரியதாகவும், மிகவும் திருப்திகரமான நிகழ்வாகவும் அமைந்ததும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு 46 பள்ளிச் சீருடைகளை வழங்கியதுதான். இன்று இளம்பிறை தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகி, சிறிது வளர்ந்துவிட்ட நிலையில் அதே பள்ளிக்கு மீண்டும் சீருடைகள் வழங்க முடிவு செய்தோம். அதற்குக் காரணம் அந்த பள்ளியின் ஆசிரியர்களே. மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல் அல்லாமல், இந்தப் பள்ளியில் மாணாவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது. பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் பள்ளிக்கு வரத் தடையாக இருக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றனர். தங்களது சொந்த செலவில் நோட்டுப் புத்தகங்கள், பேனா பென்சில்கள் என்று வாங்கிக் கொடுக்கின்றனர். மிக முக்கியமாக இளம்பிறையின் சார்பில் இதுவரை நாங்கள் சென்று வந்த பள்ளிகளிலேயே இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் மட்டும் தான் எங்களுக்கு மிகுந்த திருப்தியையும், செய்யும் உதவி நிச்சயம் உரியவர்களைப் போச் சேரும் என்ற திடகாத்திரமான நம்பிக்கையையும் கொடுத்தது.
இளம்பிறையின் சார்பில் அந்தப் பள்ளியின் ஒருங்கினைப்பாளர் திருமதி. சாந்தி காசிராஜன், எங்களுக்கு எந்த வேலையும் வைக்காமல் உள்ளூரிலேயே தரம் நிறைந்த துணிகளை, விலை குறைத்து வாங்கி, மொத்தமாக ரெடிமேட் ஆடைகள் தைக்கும் தையல்காரர்களிடம் கொடுத்து இரண்டே வாரத்தில் 40 சிறுவர், 40 சிறுமிகளுக்கு சீருடைகளை தயார் செய்து விட்டார். ஒரு சீருடையின் விலை சரியாக ரூ157 மட்டுமே. பூதாகரமான விலைவாசி உயர்வினால் சென்ற ஆண்டை விட (சென்ற ஆண்டு ஒரு சீருடையின் விலை ரூ130 க்கும் குறைவே) இந்த ஆண்டு ஒரு சீருடைக்கான விலை சற்று அதிகமாகியிருந்தாலும் கூட இவ்வளவு குறைந்த விலையில் தரமான சீருடைகள் வேறெங்கும் கிடைக்காது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
சீருடைகள் தயாரானவுடன் எங்களை அழைத்தவர்கள், குழந்தைகளுக்கு எங்கள் கைகளால் அவற்றை கொடுக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்வதனால் அந்தக் குழந்தைகளின் மனதில் பிறர்க்கு உதவும் எண்ணம் விதைக்கப்படும் என்றும் கூறினர். அவர்களது அன்புக் கட்டளையை மறுக்க முடியாமல், இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி இளம்பிறையின் சார்பில் நான், நண்பன் அழகர்சாமி இருவரும் சில்லமரத்துப்பட்டி பள்ளிக்குச் சென்றோம்.
பைக்கில் போய் இறங்கியவுடனே வாசலில் இருபுறமும் அணிவகுத்து நின்ற சிறுவர்-சிறுமியர் கைதட்டி எங்களை வரவேற்றனர். பள்ளி நாட்களில் ஆண்டு விழாகளின் போது எங்கள் மாவட்ட கலெக்டரோ எஸ்.பியோ வரும் பொழுது பல முறை இது போல் நான் பக்கவாட்டில் நின்று கொண்டு கைதட்டியிருக்கிறேன். இதுவரை கீழே கூட்டத்திற்குள் அமர்ந்து மேடையில் ஆடிக்கொண்டிருப்பவர்களுக்கு கைதட்டிக்கொண்டிருந்த நான் மேடையில் அமர்ந்து, எனக்காக ஆடிக்கொண்டிருந்தவர்களுக்கு கைதட்டிய தருணமும் இதுதான். அன்று வாழ்க்கையில் எதையோ சாதித்து விட்ட உணர்வு கிடைத்தது. மார்டன் டிரஸ் போட்டு ஹிந்தி பாடலுக்கு ஒரு டான்ஸ், பாவாடை சட்டையில் தமிழ் பாடலுக்கு ஒரு டான்ஸ். அவர்களே எதேதோ 'ஸ்டெப்'களை கம்போஸ் செய்து, அழகான காஸ்ட்யூம் போட்டு தங்களை அலங்கரித்துக்கொண்டு, ஆடி முடித்தவுடன் ஓடி வந்து எங்களிடன் கை குலுக்கிக்கொண்டனர்.
“இந்தக் கதர் ஆடையை பொன்னாடையாக போத்துகிறோம்” என்று எங்கள் இருவருக்கும் இரண்டு வெள்ளை டர்கி டவல்களைப் போர்த்தினார்கள். "பன்னாடைகளுக்கு பொன்னாடையா" என்று நான் நினைத்துக்கொண்டிருந்த போது நண்பன் அதே வார்த்தைகளை என் காதில் கிசுகிசுத்தான். இவர்களைப் போல் படித்து பெரிய மனிதர்களாகி சிறுவயதிலேயே நன்மைகள் பல செய்திட வேண்டும், மேன்மக்களாக வாழந்திடவேண்டும், பெற்றோர்க்கு புகழ் தேடித் தந்திட வேண்டும் என்று அனல் பறக்க வாழ்த்துக்களையும் தங்கள் அன்பையும் செந்தமிழில் அள்ளித் தெளித்த போது கூச்சத்தில் நாங்கள் சற்று நெளிந்து கொண்டிருந்தோம்.
வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, சீருடைகள் வழங்கப்பட்டு, மற்ற பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்துவிட்டு நிறைவான மனதுடன் பிள்ளைகள் வாசல் வரை வந்து வழியனுப்ப நாங்கள் வீடு வந்தோம். அன்றைய தினம் நன்றாகப் பசித்தது, நன்றாகத் தூக்கம் வந்தது. இதை விட வேறு என்ன வேண்டும்?
குறைவான விலையில் சரியான அளவு, நிறைவான தரத்தில் 80 சீருடைகளை ஏற்பாடு செய்து அதை இளம்பிறையின் சார்பாக எங்கள் கைகளால் கொடுக்க வைத்தமைக்கு முதலில் திருமதி. சாந்தி காசிராஜன் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். சீருடை வழங்குவதை ஒரு விழாவாக நடத்தி இளம்பிறையை பெருமைப்படுத்தியதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றிகள்.
பிறர்க்கு உதவும் எண்ணம் பலர்க்கும் இருக்கிறது. பிறர் உதவியில்லாமல் வாழ முடியாதவர்கள் பலரும் இருக்கின்றனர். இளம்பிறை இவ்விருவருக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. உதவி செய்ய விரும்புவர்களும், உதவி வேண்டி நிற்பவர்களும் தாராளமாக எங்களை அணுகலாம். இனி உதவி செய்ய யாரும் இல்லை, அனைவருக்கும் அனைத்தும் கிடைத்துவிட்டது என்ற நிலை என்று வருகிறாதோ அன்று தான் எங்களது குறிக்கோள் நிறைவேறும். அந்த நிலைக்காகத் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம், உங்கள் துணையோடு!