வெகு நாட்களுக்குப் பிறகு பதிவெழுதப்போவதால் ஒரு அருமையான தொடக்கத்திற்காக காத்திர்ருந்தேன். எனது சாய்ஸ் தமிழ் சினிமாவை தற்போதைய 'ஹாட் டாக் ஆப் தி டௌன்' எனது ஃபேவரிட் இயக்குனர்களான மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் இருவரது சமீபத்திய படங்களைப் பற்றிய எனது பார்வையை எழுதுவது. ஆனால் அதற்கு முன் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் பெரிதளவில் கவனிக்கப்பட்ட கார்த்திக் சுப்பாராஜ் (பெட்டி கேஸ், துரு), பாலாஜி (மிட்டாய் வீடு, காதலில் சொதப்புவது எப்படி) ஆகிய இருவரும் தங்களது முகப்புத்தகச்சுவற்றில் (அதாங்க Facebook Wall) ஒரு மாராத்தி படத்தை ஆஹா ஓஹோ என்று எழுதியிருந்தனர். ஒவ்வொரு கலைஞனும் நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற அடைமொழி வேறு என்னை வெகுவாக உசுப்பேத்தியது. அந்தப் படம் 2009 ஆம் ஆண்டு Paresh Mokashi என்கிற மாராத்திய இயக்குனரது Harishchandrachi Factory.
இந்தப் படம் 1913 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப் படுகிற இந்தியாவின் முதல் 'இயக்குனரான' தாதாசாகேப் பால்கே (Dadasaheb Phalke) தனது முதல் படமான ராஜா ஹரிஷ்சந்திராவை எப்பாடு பட்டு இயக்கினார் என்பதைப் பற்றியது. தேடி அலைய வேண்டிய எந்தச் சிரமமும் இல்லாமல் Youtube லேயே இந்தப் படம் துள்ளியமான தரத்தில் ஆங்கில சப்-டைட்டிலுடன் கிடைத்தது. உண்மையாகச் சொல்கிறேன். என் விரல்கள் Pause பட்டனைத் தட்ட மறந்த படங்களில் இதுவும் ஒன்று. சுதந்திரத்திற்கு முன்பு ஒரு தனி மனிதன், ஆங்கிலேயர்களை மீறி அவர்களுக்கு எதிராக இந்தியாவில் புதியதொரு தொழிற்சாலையை தொடங்குவதென்பது எவ்வளவு சிரமமானதாக இருந்திருக்கும்? ஆனால் இந்தப் படம் அப்படியே தலைகீழ். எவ்வளவு நகைச்சுவையாக கொடுக்க முடியுமோ அவ்வளுக்கவ்வளவு அள்ளித் தெறிக்கவிட்டுருக்கிறார் இயக்குனர். பாஷை புரியாத நானே விழுந்து விழுந்து சிரித்தேன். அப்படிப் பட்ட நடிப்பை படத்தின் அத்தனைக் கதாபாத்திரத்திடமிருந்தும் வாங்கியிருக்கிறார் இயக்குனர். அதிலும் பிரதான கதாபாத்திரங்களான பால்கே (nandu madhav) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (vibhawari) இருவரும் தங்களது இரு மகங்களுடன் அடிக்கும் லூட்டி இருக்கிறதே, அதியற்புதம். இரவு 11 மணிக்கு பார்க்க ஆரம்பித்து, அடுத்த நாள் அலுவலையும் பொருட்படுத்தாமல் 2.30 மணிவரை படம் பார்த்து, பின் 3 மணிவரை படத்தைப்பற்றி நானும் எனது நண்பனும் பேசினோம்.
சரி மேலும் மொக்கை போடாமல் படத்தின் கதைக்கு வருகிறேன். பால்கே என்றழைக்கப்படுகிற தாதாசாகேப் பால்கே தான் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த அச்சுத் தொழிற்சாலையிலிருந்து விலகிவிடுகிறார். மிகவும் துடிப்பான, ஒரு சிற்வனது ஆர்வமும், மாப்பக்குவமும் கொண்ட பால்கே தான் அச்சுத் தொழிலை விடுத்து தான் விரும்பும் புகைப்படத் துறையில் வேலை செய்ய விரும்புகிறார். எப்படியாவது ஊருக்குள் ஒரு ஸ்டுடியோவை நிருவ வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருக்கிறது.
ராமனுக்கேற்ற சீதை அல்லது ஹரிசந்திரருக்கேற்ற தாராமதியாக பால்கேவின் மனைவி சரஸ்வதி, தன் கணவன் எது செய்தாலும் அது நன்மைக்கே என்று முழுதாக நம்பி அதற்கு தனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறாள். இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள். ஊரார் தன்ன பைத்தியமாகச் சித்தரிப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்யாத பால்கே தனது போட்டோ பேக்டரி தொழிலைத் தொடங்குவதிலேயே ஆர்வமாக இருக்கிறார். அப்போது தான் அவரது ஊரில் முதல் முதலாக 'மோஷன் பிக்சர்' என்று விளம்பரப்படுத்தப் பட்டு திரைப்படம் காட்டப்படுகிறது. பெரும்பாலும் ஆங்கிலேயரும் பணக்காரர்களும் மட்டுமே நுழையும் கொட்டகைக்குள் ஒரு ஆர்வத்தில் தன் மகனுடன் நுழைகிறார் பால்கே. சின்ன வெள்ளைத் திரையில் மாடுபிடி வீரை ஒரு மாட அடக்குவது காட்டப்படுகிறது. உள்ளிருக்கும் கூட்டம் ஆச்சரியத்தில் உறைந்து போக, பால்கே திறந்த வாய் மூடாமல் அதையே பார்ததுக்கொண்டிருக்கிறார். திரையில் ஓடும் மாடு தன்னையும் முட்டி விடும் என்கிற பயத்தில் கொட்டகையை விட்டு ஒரு பெண் வெளியே ஓடுகிறாள். அதைப் பார்த்துச் சிரிக்கும் பால்கே அடுத்த நாளே குடும்பம் குட்டி சகிதம் படம் பார்க்க வந்துவிடுகிறார்.
உலகத் திரைப்பட விழாவில் பேக்-டு-பேக் நாம் திரைப்படங்கள் பார்ப்பது போல் விடாமல் அடுத்தடுத்த் ஷோக்களையும் பார்க்கிறார். பல சமயம் திரையைப் பார்த்தபடி, சில சமயம் திரைக்கு ஒளியைக் கக்கும் அந்த சிறிய துவாரத்தைப் பார்த்தபடி. மனைவி மக்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு தான் மட்டும் பார்த்த படத்தையே சலிக்காமல் திரும்பத் திரும்பப் பார்க்கிறார். போட்டோ பேக்டரி ஆரம்பிக்க வேண்டுமென்றிருந்த ஆசை இப்போது ஒரு 'மோஷன் பிக்சர் பேக்டரி' ஆரம்பிக்க வேண்டும் என்று மாறுகிறது.
நைசாக பேசி ஆப்பரேட்டரை நட்பு பிடித்து ப்ரோஜக்டரை இயக்கிப் பார்க்கிறார், ஆர்வம் அதிகமாகிறது. தொடர்ந்து ராப்பகலாக இருட்டுக் கொட்டகைக்குள் படங்களாகப் பார்த்துக் கொண்டே இருக்கும் பால்கே ஒரு நாள் கொட்டகையிலேயே அயர்ந்து தூங்கி விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் அப்பாவை காணவில்லையே என்று தம்பியைக் காவலுக்கு வைத்து விட்டு, அண்ணன் அப்பாவைத் தேடிக் கொட்டகைக்கு வருகிறான். தூக்கத்திலிருந்து விழிக்கும் பால்கே தனக்கு கண் தெரியவில்லை என்று அழுகிறார். அப்போதும் 'இனிமேல் தன் லட்சியம் நிறைவேறாது' என்று கூறும் அப்பாவிடம், நான் உங்களுக்கு உறுதுணையாக நின்று உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுகிறேன் என்று கூறுகிறான். மனைவியும் 'எப்போதும் என் ஃபுல் சப்போர்ட்டும் உங்களுக்கு தான்' என்று ஊரார் கிளப்பிவிடும் கதைகள் எதையும் நம்பாமல் பதிபக்தியுடன் இருக்கிறார். ஊர் மக்களும் வழக்கம் போல் வெறும் வாய்க்கு வெல்லம் கிடைத்து விட்டது என்று கண்டகழுதைகளைக் கிள்ப்பி விடுகிறார்கள்.
எதையும் பொருட்படுத்தாத பால்கே, வீட்டில் இருக்கும் மரபீரோவில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக விற்க ஆரம்பிக்கிறார். அதுவும் அந்த மரபீரோவை விற்று விட்டு அவர் வீட்டிற்கு வரும் போது எழவு வீடு எஃபெக்ட்டில் அனைவரும் நின்று கொண்டிருப்பார்களே, அந்த சீக்வென்ஸ் சரியான நகைச்சுவை. ஒரு முடிவு எடுத்தவராய் தன் பழைய பார்ட்னரிடம் போகும் பால்கே மீண்டும் தொழில் தொடங்கலாம் என்று கூற, அவரும் பணத்தை வாரிக் கொடுக்க, அதே வேகத்தில் லண்டன் கிளம்புகிறார் பால்கே. கொஞ்சம் அலைச்சலுக்குப் பிறகு லண்டனில் ஹோட்டல் நடத்தும் ஊர்க்காரர் ஒருவருடன் நட்பாகி, இறுதியாக லண்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சென்றடைந்து, நேராக உள்நுழைந்து 'Hi I am Dadasaheb Phalke from India. I would like to take a motion picture, Can you help?' என்று கூறுகிறார். இந்த இடத்திலிருந்து தான் இந்தியாவின் கனவுத் தொழிற்சாலையான சினிமாவின் ஆரம்பம் ஆரம்பமாகிறது. அதற்குப் பிறகு பால்கே சினிமா கற்றுக் கொண்டு, இந்தியா வந்து பல படங்களை சுட்டுத் தள்ளி. இந்தியாவின் முதல் ஃபிலிம் இண்டஸ்ட்ரியைத் தொடங்கி பேரரசன் ஆனது மீதிக்கதை.
எனக்குத் தெரிந்து தமிழில் 'சினிமா இயக்கப் பாடுபடும் ஒரு இளைஞனது கதை' என்ற சப்ஜெக்ட்டில் வந்த எல்லாக் கதையுமே மென்சோகக்கதைகளே. கொஞ்சமே கொஞ்சம் காமெடியாக எடுக்கப்பட்ட 'அழகிய தீயே' படத்திலும் அடிநாதம் என்று பார்த்தால் சோகம் தான். ஆனால் இந்தப் படத்தில் யார் உதவியும் இல்லாத/கிடைக்காத ஒரு தனி ஆள், அதுவும் ஒரு குடும்பஸ்தன், இந்தியாவின் முதல் படத்தை எடுப்பதை இவ்வளவு ஜாலியாக, ரசிக்கும்படியாக கொடுத்திருப்பதற்கு முதலில் நான் கைதட்டி விசில் அடித்துவிடுகிறேன்.
இந்தப் படம் சென்ற வருடம் இந்தியாவின் சார்பில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டு வழக்கம் போல் மறுக்கப்பட்டது. ஆனாலும் என்ன பல திரைப்பட விழாக்களில் இந்தப் படம் விருதுகளைத்க் குவித்திருக்கிறது. இதற்கு முன் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் சொன்னதையேத்தான் நானும் சொல்கிறேன், படத்தில் பால்கே சொல்லும் பாணியிலேயே வயிற்றில் கருவைச் சுமக்கும் தாய் போல ஒரு கதையைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கும் வருங்கால வெற்றி இயக்குனர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம், Harishchandrachi Factory, இரண்டு காரணங்களுக்காக 1) நமது ஆதாமின் வரலாற்றை தெரிந்து கொள்ள 2) இப்படியும் இந்த மாதி ஒரு கதையைக் கொடுக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள.
டிஸ்கி: ஒவ்வொரு வருடமும் தாதாசாகேப் பால்கே விருதுகளை இந்திய அரசு சிறந்த கலைஞர்களுக்கு வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழகத்தில் அந்த விருதை வென்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கீழிருக்கும் படங்கள் விக்கிபீடியாவில் சுட்டது. பால்கே, மற்றும் அவரது முதல் படமான ராஜா ஹரிஷ்சந்திராவின் சில காட்சிகளும் உங்கள் பார்வைக்கு.