இப்படித்தான் எனக்கு வரவேண்டியவள் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்ததைவிட ஒரு படி மேலே இருந்தாள், வெண்ணிலா.
"ஆனந்த், நான் சொல்றத கேளுங்க, நான் கல்யாணம் நிச்சயமான பொண்ணு. நான் எங்க அப்பா அம்மா சொல்றவரத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அதுல எந்த மாற்றமும் இல்ல. என் மனச மாதிரலாம்னு மட்டும் நினைகாதீங்க, அது உங்களால முடியாது. இரண்டே பேர் சந்தோஷத்திற்காக வாழ்நாள் முழுவதும் பலரை என்னால் அழ வைக்க முடியாது, புரிஞ்சுக்கோங்க, இனிமே என்ன பாக்க வராதீங்க..."
சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்து விட்டாள். “என் மனதை மாற்றிவிடலாமென்று மட்டும் நினைக்காதீர்கள்” என்று அவள் உதடு அழுத்திச் சொன்னபோது, அவள் கண்கள் இன்னும் கொஞ்சம் முயற்சித்து பாருங்கள் என்று சொல்வதாகப் பட்டது.
வெண்ணிலாவை எனக்கு ஒரு மாதமாகத் தான் தெரியும், என் தூரத்து உறவினர் ஒருவரை நான் சந்திக்கச் சென்றிருந்த போது அவரது மகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். நேரடியாக அவளைப் பார்த்தது அன்று தான். பரஸ்பர அறிமுகம் சாதரணமாகத்தானிருந்தது என்றாலும் என் பார்வை முழுவதும் அவள் மேலும் அவளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்பதிலேயே இருந்தது.
பின்வந்த நாட்களில் எதிர்பாரத விதமாக ஒரு முறை, எதிர்பார்த்து பல முறை என்று அவளை சந்திக்க ஆரம்பித்தேன். பேசினேன். முதலில் தெரிந்தவர் என்பதால் "ஹாய்" சொன்னாள், பின் அடிக்கடி அவளைக் கடக்க ஆரம்பித்ததால் சிரிக்க மட்டும் செய்தாள். நானே வ'ழி'ய போய் பேசினால்கேட்டதற்கு பதில் மட்டும் சொல்வாள். ஆனால் இந்த ஒரு மாதத்தில் அவளைப் பற்றி முழுதாகத் தெரிந்து கொண்டேன்.
இப்படியே போய்க்க்கொண்டிருந்தால் சரிவராது என்று ஒரு நாள் நேராக சொல்லியேவிட்டேன், "வெண்ணிலா, உங்கள எனக்குப் பிடிச்சிருக்கு... ரொம்பப் பிடிச்சிருக்கு, இனி என் வாழ்க்கைல வரப்போற ஒவ்வொரு நொடியிலையும் நீங்க என்கூட இருக்கனும்னு ஆசைப்படுறேன். என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”.
அன்று தான் தனக்கு ஏற்கனவே வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்ற விஷயத்தை ஏதோ பெரிய விஷயம் போல் கூறினாள். ஆனால் அவள் அடுத்து சொன்ன சின்ன விஷயம் எனக்குப் பெரிய விஷயமாகப் பட்டது.
"ஆனந்த், 'திருமணம்' ங்குற பந்தம் மேல எனக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கு. அப்பா அம்மா முழு சம்மதத்தோட, ஆசிர்வாதத்தோட, சந்தோஷமா அவங்க பார்த்த மாப்பிளையோட என் திருமணம் நடக்கனும்னு நான் ஆசைப்படுறேன். மாப்பிளைய பார்த்து, சிரிச்சு, கல்யாணத்துகு முன்னாடியே எல்லா விஷயத்தையும் பேசி, “இவன் நமக்கு ஒத்து வருவானா மாட்டானா” மாதிரியான எந்தக் குழப்பமும் எனக்குள்ள வந்துரக்கூடாதுங்கிறதுக்காக நான் இன்னும் மாப்பிள்ளை போட்டோவைக் கூடப் பாக்கல, முழு எதிர்பார்ப்போட சந்தோஷமா, காத்துக்கிட்டு இருக்கேன்"
எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. இந்தக் காலத்தில் மாப்பிள்ளை போட்டோவைக் கூடப் பார்க்காமல் திருமணத்திற்கு சம்மதிக்கும் ஒரு பெண்ணா? அப்படி என்ன எதிர்பார்ப்பு? திருமணத்திற்கு முன் பேசி, பழகுவதினால் என்ன தவறு நடந்துவிடப்போகிறது? அதையும் கேட்டேன்.
"வெண்ணிலா, எல்லாம் சரிதான், காத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்றீங்க, இவ்வளவு எதிர்பார்ப்புகளோட காத்திக்கிட்டு இருக்கேன்னு சொல்றீங்க, ஆனா உண்மையாவே சந்தோஷமாத்தான் காத்துக்கிட்டு இருக்கீங்களா? உங்க 'அவர்' உங்க எதிர்பார்ப்புகளை கண்டிப்பா பூர்த்தி செய்றவரா இருப்பார்னு நம்புறீங்களா? வாழ்க்கை அவ்வளவு சாதாரணமானதா அமையும்னு நினைகிறீங்களா? யாருன்னே தெரியாத ஒருத்தன் கூட எப்படி உங்களால வாழ முடியும்னு நினைக்கிறீங்க? அவன் மோசமானவனா இருக்கலாம், குடிகாரனா இருக்கலாம். தெரியாத ஒருத்தன கல்யாணம் செஞ்சு அடுத்த கணம் என்ன நடக்கப்போகுதோன்னு பயந்து பயந்து வாழ்வதற்கு பதில், நல்லா தெரிஞ்ச என்கூட, அடுத்த கணம் எப்படி சந்தோஷமா இருக்கப் போகுதுங்கிற எதிர்பார்ப்போட ஆரம்பிக்கலாமே. யதார்த்தம் தான் வாழ்க்கை, எதிர்பார்ப்புகள் இல்ல"
என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் பின் சின்னதாய் முறைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அன்றும் வழக்கம்போல் இறுதியாகப் பேசினவன் நானாகவே இருந்தேன்.
அவளுக்கு என்னைப் பிடிக்க ஆரம்பித்து விட்டது எனக்குத் தெரிந்தது. யாரிடமும் எதுவும் சொல்லாதவள் இன்று தனக்குள் இருக்கும் ஆசைகள் வரை அனைத்தையும் என்னிடம் சொல்கிறாள். என் மனதை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்கிறாள், உண்மையாக பயப்படுகிறாள். இப்படிப் பட்ட ஒருத்தியை நான் எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?
நாங்கள் இறுதியாக சந்தித்துக் கொண்ட நாள் தெளிவாக பதில் சொன்னேன். "சரி நான் இனிமே உங்கள பார்க்க வரல; உங்களுக்கே உங்களுக்குன்னு உங்க அப்பா அம்மா நிச்சயம் பண்ணி வச்சிருக்காங்களே ஒரு மாப்பிள்ளை, அவரை வீட்டுக்கு வரச் சொல்லிப்பாருங்க. உங்களுக்கு யாருனே தெரியாத ஒருதரோட த்ரில்லிங்கா உங்க வாழ்க்கைய ஆரம்பிக்கனும்னு எதிர்பார்ப்பு இருக்கிறமாதிரி, அவருக்கு என்னென்ன இருக்குமோ. முன்னாடியே தெரிஞ்சிகிறது பெட்டர் இல்லையா. அப்படி அவரைப் பார்க்கும்போது 'என்ன ஒருத்தர் லவ் பண்றார், இந்த ஒரு மாசம் என்னையே சுத்தி சுத்தி வந்தார். ஆனா அவர எனக்குப் பிடிக்கல. யாருன்னே தெரியாத உங்களத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு, நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு' சொல்லுங்க, சரியா, ஆல் தி பெஸ்ட்" சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே என்னைக் கடந்து சென்றார்.
அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது எப்போது என்று தெரியவில்லை. ஏனென்றும் புரியவில்லை. 'என் கணவர்' என்று நான் மனதில் கட்டி வைத்திருக்கும் ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் எடுப்பதைப் போலத் தோன்றியது. பார்த்தார், பேசினார், பிடித்திருக்கிறது என்றார், நான் பிடிக்கவில்லை என்று சொன்னதும் ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு போய் விட்டடார். யார் இவர், எனக்குள் என்ன செய்தார், புரியவில்லை.
என் குழப்பங்களுக்கு பதில் அவரிடமிருந்தே வந்திருந்தது. வீட்டிற்கு சென்றவுடன் அப்பாவிடம் மொபைல் எண் வாங்கினேன். சிரித்துக் கொண்டே கொடுத்தார்.
தனியான ஒரு இடத்திற்கு சென்றேன். மீண்டும் ஒருமுறை "இது தேவையா?" என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். இறுதிமுடிவாக என் முடிவை தளர்த்திக்கொண்டு எண்களை அழுத்தினேன்.
"ஹலோ, நான்... நான் வெண்ணிலா பேசுறேன். உங்கள பாக்கனும்னு ஆசைப்படுறேன். நாளைக்கு எங்க வீட்டுக்கு கொஞ்சம் வரமுடியுமா?"
" ஓ… கண்டிப்பா, கண்டிப்பா வர்றேன் வெண்ணிலா. போட்டோ பாத்ததுமே உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சி போச்சு. உடனே பாக்கனும், நிறைய பேசனும்னு தோணுச்சு. ஆனா நீ தான் பார்க்கவே மாட்டேன்னு சொல்லிடதா உங்க அப்பா சொன்னாரு, எனக்கு ஒரே ஏமாற்றம். நல்ல வேளை, கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு, இப்போவாவது என்ன பாக்கனும்னு தோணுச்சே" படபடவென்று பேசியவரது குரல், அந்தக் குரலுக்கேற்ற உருவம் என்று நான் கற்பனை பண்ணியதனைத்தும் ஆனந்தாகவே இருப்பதாகத் தோன்றியது.
அந்த 'நாளை'யும் வந்தது. மெல்லிதாக அலங்கரித்துக் கொண்டு என் அறையில் காத்திருந்தேன். வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வந்து விட்டார் என்று நினைத்து, என்ன பேச வேண்டுமென்பதை ஒரு முறை மனதிற்குள் ஓட்டிப்பார்த்து விட்டு வெளியே வந்தேன். மாப்பிளையின் தாய் அதாவது என் வருங்கால மாமியார் என்னைப்பார்த்து சிரித்துக் கொண்டே முன்னால் வர, பின்னால் மாமனார், நாத்தனார், பின் யார் யாரோ என்று ஒரு கூட்டமே வாசலைத் தாண்டி உள்ளே வந்துகொண்டிருந்தது. அவர் கடைசியாகத் தான் உள் நுழைந்தார்.
"என்னம்மா அப்படிப் பாக்குற, இவர் தான் நாங்க உனக்கு பாத்து வச்சிருக்கிற மாப்பிள்ளை. நீ அவர மட்டும் தான் வரச் சொன்ன ஆனா, அவங்க வீட்ல எல்லாருக்கும் உன்ன ரொம்ப பிடிச்சி போச்சு. எல்லாரும் உன்ன பாக்கனும்னு ஆசைப்பட்டாங்களாம், அதான் கூட்டிட்டு வந்துட்டாரு" அப்பா சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. எப்படி நம்ப முடியும்? மாப்பிள்ளையாக வந்திருபவர், ஆனந்த்!
என்ன வெண்ணிலா அப்படிப் பாக்குற, நீ உன் அப்பா அம்மாவ நம்பி என்னப் பார்க்காமலே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச. ஆனா நான் உன் அப்பா அம்மா சம்மத்தோட நீ என்ன மட்டுமே நம்பி கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டு நான் யார்னே சொல்லாம உன்னையே சுத்தி சுத்தி வந்தேன். இப்போ சொல்லு, என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?
:)