தேனியிலிருந்து பஸ் ஏறிய போது, பெங்களூர் என்னை இவ்வளவு சோதிக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆறு மாத அலைச்சலின் பலனாக அற்புதமான வேலை ஒன்று 'செட்' ஆனவுடன், மனம் அடுத்த தேடலை ஆரம்பித்தது. சிலிக்கான் கிராபிக்ஸ் பெண்கள் கேட் வாக் போட்டுவரும் ஊரில், ரவிவர்மன் ஓவியம் ஒன்று அன்ன நடை நடந்து வந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எனக்குள் இத்தனை நாள் தேக்கிவைக்கப்பட்டிருந்த காதல் அணுக்கள் "இவள் தான் உன் காதலி" என்று கை காட்டியது. திவ்யா!
ஆம், பார்த்த நொடியிலேயே ஹார்மோகள் சிம்பொனி இசைக்க என்னுள் காதல் சிறகு மெல்ல மெல்ல முளைக்கக் காரணமானவள். என்னுடனே இண்டர்வியூவில் தேர்வாகி, இப்போது என்னுடனேயே வேலை செய்துகொண்டிருக்கும் சுத்தமான தமிழச்சி. பெங்களூரில் இப்படியும் ஒரு பெண் இருக்க முடியுமா என்று பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்துபவள். மையிட்ட கருவிழிகள் படபடக்க, வலது ஓர தெத்துப் பல்லின் வசீகரத்தை காட்டியபடி அவள் பேசுவதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் (ஒரு நாள் என்பது 2400 மணிநேரமாக இருந்தாலும் சரி)
அவளிடம் எனக்குப் பிடித்ததே அவள் இன்னும் அவளாய் இருக்கும் அந்த ‘ஒரிஜினல்’ குணம் தான். ஊர்பக்கம் பார்க்கும் பாவாடை சட்டையில் வந்து, காதல் பார்வை வீசத் தூண்டிய அதே பெண்கள், பெங்களூர் வந்தவுடன் டி-ஷ்ர்ட் ஜீன்ஸிற்கு மாறி பார்க்கும் பார்வையை அப்படியே தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில், இவள் மட்டும் அப்படியே இருப்பது என்னைக் கவர்ந்து. அவள் பக்கம் சீக்கிரத்தில் இழுத்தது. அதே வேகத்தில் அவளிடம் என்னை நெருங்க விடாமலும் தடுத்தது.
ஒரு முறை உடன் வேலை வேலை செய்த ஒருவன் இவள் மேல் காதல் கொண்டு, கையில் மலர்கொத்துடன் இவள் முன் நின்ற போது அதை அமைதியாக வாங்கி அருகில் இருந்த விநாயகர் சிலைக்குப் போட்டுவிட்டு சென்று விட்டாள். கொடுத்தவனுக்கு இன்று வரை பதில் தெரியவில்லை; ஏனென்றால் அதன் பிறகு அவனுடன் இவள் பேசவேயில்லை. கலாச்சாரம், பண்பாடு, குடும்ப மரியாதை, தமிழ் - இவை அனைத்தும் உயிருக்குச் சமமான சமாச்சாரங்கள். பெற்றோர் சொல்பவரைத் தான் இவள் திருமணம் செய்வாள்; காதல் என்பது திருமணத்திற்கு பின் கணவனிடம் மட்டும் தான் வரும். அவளைப் பற்றி இவ்வளவும் தெரிந்த நான் - நல்ல நண்பன். அவ்வளவே.
பல நாள் பல சந்தர்பங்கள் எனக்கு சாதகமாக இருந்த போதும் நானாக முன் வந்து அவளிடம் எதுவும் சொல்லவில்லை. நண்பர்கள் அவளுக்கு என் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லும் போதும் நான் அதை நம்பவேயில்லை. ஒரு முறை எதோ சொல்ல என்னருகில் வந்தவள் என் கண்களுக்குள்ளே தெரியும் அவளைப் பார்த்த போது ஹார்மோன்கள் எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சி, எங்கள் இருவருக்குள்ளும் இருந்த தடைகள் தூள் தூளாக்கியது. அவள் மனதில் நான் இருப்பதை சந்தேகமில்லாமல் எனக்கு உணர்த்தியது.
அன்று இரவு, "உன் பேரைச் சொல்லும் போதே, உள் நெஞ்சில் கொண்டாட்டம்" என்று என் மனதிலிருப்பதை என் செல்போன் பாட, அழைத்தது அவளே. "ஆனந்த், உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" - இதற்காகத் தானே இத்தனை நாட்கள் காத்திருந்தேன்.
"சொல்லு திவ்யா", "அது... அது போன்ல சொல்ல முடியாது, நாளைக்கு நேர்ல சொல்றேனே", "என்ன திவ்யா இது, ஏதோ சொல்லனும்னு போன் பண்ணிட்டு, இப்போ நாளைக்கு சொல்றேன்னு சொல்றியே, நாளை வர இன்னும் ரொம்ப நேரம் இருக்கே", "இல்ல... இல்ல நேர்ல பாத்துதான் சொல்லனும்" என்று சொன்னவள் அடுத்த 15 நிமிடத்திற்கு எதுவும் பேசவில்லை. பேசவில்லை என்றாலும், அவளது மூச்சுக்காற்றின் இடைவெளிச் சத்தம் அவள் மனதின் ஓட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்தியது. முதன் முதலில் இண்டர்வியூ ஹாலில், சின்ன விநாயகர் படத்தை கையில் வைத்துக் கொண்டு அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்தைப் பார்த்த போது என் மூச்சில் நான் விட்ட அதே இடைவெளி... "நான் கட் பண்றேன்" - சொல்லிவிட்டு வைத்தாள்.
எனக்கு ஏற்கனவே 'நாளை' வந்து விட்டிருந்தாலும், நாளைக்கு இன்னும் 6 மணி நேரம் இருந்தது. இருப்பதிலேயே பெஸ்ட் ஷர்ட், பேண்ட் போட்டுக் கொண்டு, ஒருமுறைக்கு இருமுறை கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டு, நண்பர்களின் வாழ்த்துகளையும் வாங்கிக்கொண்டு கிளம்பி அலுவலகம் வந்தேன்.
மணி 10 ஆகியும் திவ்யா அலுவலகம் வந்திருக்கவில்லை. மாறாக அவளின் தோழி வந்தனா வந்து அவள் கொடுத்ததாக ஒரு கடிதத்தைக் கொடுத்தாள்.
"ஆனந்த் - மன்னிக்கவும். அவசர வேலை காரணமாக ஊருக்குச் செல்கிறேன். வந்தவுடன் விபரம் கூறுகிறேன்."
இவையே திவ்யா என்னிடம் கடைசியாக கூறிய/எழுதிய நேரடி வார்த்தைகள். அதன் பிறகு அவள் என்னிடம் பேசிய/எழுதிய வார்த்தைகள் சரியாக ஒரு மாதம் கழித்து அவளிடமிருந்து அலுவலக விலாசத்திற்கு அனைவரது பெயருக்கும் வந்த " I cordially Invite you to share in the happiness as I exchange my marriage vows with..." என்று ஆரம்பித்த, சிறு வயதிலேயே நிச்சயிக்கப்பட்ட தாய் மாமனுடன் அவளது முழு சம்மதத்துடன் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான பத்திரிக்கை.
இதயத்தினுள் தேக்கி வைத்திருந்த காதலை சொல்லாமல் போனதன் விளைவு அவளுக்கு திருமணமாகி விட்டது என்று தெரிந்தும் அவளைக் காண அவள் ஊர் சென்றேன். அலுவலக நண்பன் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று அறிமுகம் செய்த பிறகே சொன்னார்கள், திருமணமான மறுநாளே அவள் அமெரிக்கா பறந்து விட்டதாக... அதெப்படி அடுத்தவன் வாழ்க்கையை உறுவிக்கொண்டு போபவனெல்லாம் சரியாக அமெரிக்காவிலிருந்து வருகிறார்கள், தெரியவில்லை. ஐந்து வருடங்கள் கழிந்த போதும் அவள் நினைப்பு மட்டும் என்னை விட்டு அகல வில்லை. "அவளைப் பற்றி நினைக்காதே, மறந்துவிடு. உனக்கென்று ஒரு வாழ்கையைத் தேடிக் கொள்" என்று நண்பர்கள் வற்புறுத்தி சலித்துவிட்டார்கள். அவர்களிடம் எப்படிச் சொல்வது, அவளை மறந்திருந்தால்தானே நினைப்பதற்கு, மறக்க மட்டும் மறந்து விட்டேன் என்று...
இன்று - நண்பன் ஒருவன் வருகைக்காக சென்னை இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில், லௌஞ்சிலிருந்து இறங்கி வரும் கூட்டத்தைப் பார்த்தபடி காத்திருந்த போது, மிக நேர்த்தியாக புடவையுடுத்திய பெண் தன் நான்கு வயது மகனை கைபிடித்து அழைத்துச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். பின் வந்து கொண்டிருந்த அவளது கணவன் தோளில் கை வைத்தவுடன் மையிட்ட கண்கள் படபடக்க, வலது ஓர தெதுப்பல் வசீகரிக்கும்படி சிரித்தாள். அவள் கையை உறுவிக்கொண்டு ஓடிய மகனைத் தொடர்ந்து வேகமாக நடந்தபடி சொன்னாள் - "ஆனந்த்... ஓடாதடா..."
மறந்திட மட்டும் மறந்தோம்