KUNG FU PANDA 3 (2016)

6:57:00 AM

குங்குமப்பூ போண்டா (போடா மொக்க நாயேன்னு நீங்க சொல்றது கேக்குது) அனிமேஷன் படங்களில் எனது பேவரிட். இயக்குனர் Steven Spielberg இன் தயாரிப்பு நிறுவனமான Dreamworks Animation Studios தயாரிப்பில் இதுவரை 2 முழுநீளத் திரைப்படங்கள், 3 குறும்படங்கள் (Secrets of the Furious Five (2008), Kung Fu Panda Holiday Special (2010), Kung Fu Panda: Secrets of the Masters (2011)), 3 சீசன்கள் (80 எப்பிசோட்கள்) கொண்ட ஒரு டி.வி சீரீஸ் Kung Fu Panda: Legends of Awesomeness வெளிவந்திருக்கிறது. இவையனைத்துமே எனது பேவரிட். இன்னும் மூன்று திரைப்படங்களும் சில குறும்படங்களும் வெளிவரவிருக்கிறது. இந்த வருடமே Kung Fu Panda: Secrets of the Scroll என்ற பெயரில் ஒரு குறும்படம் வருகிறது – நெட்டில் வெளிவந்துவிட்டது.

முதல் பாகத்தில் Tai Lung சிறுத்தையையும், இரண்டாம் பாகத்தில் மயில் அரசன் Lord Shen உடனும் சண்டையிட்டு உலகை (Valley of Peace) காப்பாற்றும் குங்ஃபூ பாண்டா Po, இம்முறை Kai என்ற காட்டெருமை குங்ஃபூ மாஸ்டரை வீழ்த்தி, டிராகன் வாரியராக தனது பயணத்தின் அடுத்த கட்டத்தை அடைந்தது எப்படி என்று சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கம்போல Po பாண்டா, தனது மாஸ்டரான Shifu மற்றும் நண்பர்களான Tigress, Monkey, Mantis, Viper மற்றும் Crane உடன் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இந்தப் படத்திலும் உண்டு. போதாதகுறைக்கு இந்தப் பாகத்தில் ரகசிய பாண்டா கிராமம் ஒன்றையே அறிமுகப்படுத்துகிறார்கள். Po வைப் போல பல பாண்டாக்கள் வாழும் அந்த கிராமம் தான் வில்லனின் டார்கெட். சொல்லவா வேண்டும் - வழக்கம்போலவே பட ஆரம்பத்தில் தான் கற்றுக்கொள்ளத் திணறிய வித்தையை வைத்தே கிளைமாக்ஸில் எதிரியை வீழ்த்துகிறது Po. இந்த ஒரே டெம்ப்ளேட் கொஞ்சம் போரடிக்கத் தொடங்கினாலும், பாண்டாவின் அட்டகாசம் நம்மைக் கட்டிப் போட்டு விடும்.

வெறும் ஒன்றரை மணிநேரம் மட்டுமே ஓடும் மிகச் சிறிய படம். அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஏக்கமாக இருந்தது. கடுப்பு என்னவென்றால், இந்தச் சிறிய படத்திற்கு மொத்தம் மூன்று டிரைலர்கள் வெளியிட்டு பல அட்டகாசமான காட்சிகளை முன்னமே சொல்லிவிட்டார்கள். விமர்சன ரீதியாக ரிசல்ட் பாஸிட்டிவ் தான் என்றாலும், வசூல் ரீதியாக முந்தைய இரண்டு படங்களை விட குறைவு தான் என்று சொல்கிறார்கள். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சரிதான் போல.

எங்கள் ஊரில் இருப்பது இரண்டே தியேட்டர்கள். ஒன்றில் இன்னும் ‘பிச்சைக்காரன்’ ஓடிக்கொண்டிருக்கிறது (நான்காவது வாரம் என்று நினைக்கிறேன். இடையில் ஒரு மூன்று நாட்கள் மட்டும் ’வாலிபராஜா’ போட்டுத் தூக்கிவிட்டார்கள்). மற்றொன்றில் சென்ற வாரம் ‘தோழா’ ஓடிக்கொண்டிருந்தது. இந்த வாரம் காலை இரண்டு காட்சிகள் குங் ஃபூ பாண்டா போட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான தமிழ் படங்கள் எதையும் வெளியிடவில்லை. கொஞ்சம் ஓவராகத் தான் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும் எங்கள் ஊர் குழந்தைகளுக்குக் செம்ம குதூகலம். தமிழ் டப்பிங் செம்ம விட்டு. ஒரு சில வசனங்களில் தியேட்டரே அதிர அதிர சிரித்துக்கொண்டிருந்தோம். சில வசனங்கள் வழக்கம்போல செம்ம மொக்கை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

திரையரங்கில் குழந்தைகளுடன் குழந்தைகளாக அமர்ந்து பார்க்கச் சிறந்த படம். தவற விட வேண்டாம்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...