வேலை காரணமாக அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு மாற்றலாகி வரும் கணவனை இழந்த தன் தாயுடன், 12 வயதுச் சிறுவன் ட்ரே வருகிறான். வந்த முதல் நாளே, ஒரு சீனப் குட்டிப் பெண்ணை கவர் செய்ய முயற்சிக்க, லோக்கல் சிறுவர்களுடன் மோதலாகி விடுகிறது. அதிலும் சென்ங் என்ற டீன் ஏஜ் சிறுவன் பலத்த கராத்தே வித்தை தெரிந்தவனாக இருக்கிறான். ட்ரேயை சுலபமாக அடித்து தரையில் வீழ்த்தி விடுகிறான். புதிதாக சேரும் பள்ளியிலும் சென்ங் தலைமையில் அதே சிறுவர்கள். சும்மா இருந்தாலும் இவனிடம் வந்து வம்பிழுக்கிறார்கள். சீனா அவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகிறது. ஒரே ஆறுதல் மெய் யிங் என்கிற அந்தக் குட்டிப் பெண் மட்டுமே.
இவர்கள் தங்கியிருக்கும் பிளாட்டில் மெய்ண்டனன்ஸ் வேலை செய்பவர் ஹான். ட்ரே தன் தாயை மதிக்காமல் தாந்தோன்றியாக நடப்பத்தை கவனிக்கிறார். அவனுக்கு சீனா சுத்தமாக பிடிக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
தன்னை அடித்த பயல்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் மேல் அழுக்குத் தண்ணீரை ஊற்றிவிட்டு ஓடுகிறான். துரத்திக்கொண்டு ஓடும் சிறுவர்கள் ஒரு இடத்தில் ட்ரேயை மடக்கிப் பிடிக்கிறார்கள். வயிற்றில் பலமான அடி விழுகிறது. ட்ரேவிற்கு மயக்கம் வரும் சமயம், சென்ங் அடுத்த அடி அடிப்பதற்குள், ஒரு கை அவனை அடிக்க விடாமல் தடுக்கிறது. அது ஹான்!
கராத்தே பைட்டர்களாக இருக்கும் அந்த டீனேஜ் சிறுவர்கள் ஆறு பேரை அடிக்காமல் சும்மா வெறுமனே தடுத்து ஒருவரை ஒருவர் அவர்களுக்குள்ளே அடிக்க வைத்து விரட்டுகிறார், காரத்தே மாஸ்டரான ஹான். பலமாக அடிபட்டு விழுந்து கிடக்கும் ட்ரேவை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பண்டைய சீன மருத்துவ முறையின் மூலம் வைத்தியம் செய்து வலி குறையச் செய்கிறார்.
இப்போது இவர் காப்பாற்றி விட்டாலும், அந்தப் பயல்கள் கண்டிப்பாக தன்னை தாக்குவார்கள் என்று அஞ்சுகிறான் ட்ரே. இதற்கு ஒரே வழி அவர்களின் கராத்தே மாஸ்டரை சந்தித்துப் பேசுவது என்ற முடிவிற்கு வந்து அந்த பிரபல காராத்தே அகாடமிக்கு போகிறார்கள். போன பின் தான் தெரிகிறது, அங்கிருக்கும் கராத்தே மாஸ்டர் லீ சரியான வெறியன் என்று. கராத்தே ஒரு தற்காப்புக்கலை என்று இல்லாமல் அது வலி, தோல்வி, இரக்கம் இல்லாத ஆயுதம் என்று சொல்லிக்கொடுப்பதை பார்க்கிறார் ஹான். பேசி பிரயோஜனமில்லை என்று திரும்புபவரை வம்பிற்கு இழுக்கும் லீ, ஹான், ட்ரே இருவரில் யாராவது ஒருவர் சண்டையிட வேண்டும் என்று சவால்விடுகிறான். ட்ரே சண்டையிடுவான் ஆனால் இங்கில்லை இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்கவிருக்கும் கராத்தே போட்டியில் என்கிறார் ஹான். அதுவரை ட்ரேயை மற்ற சிறுவர்கள் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிமொழியும் வாங்கிக்கொள்கிறார்.
ஆரம்பமாகிறது பயிற்சி! ட்ரே வெல்வான் என்பது உறுதி அது எப்படி என்பதுதான் மீதி சேதி! நடுநடுவில் ஹான் ஏன் இப்படி யாரும் இல்லாமல் தான் ஒரு கராத்தே மாஸ்டர் என்பதை மறைத்து வாழ்கிறார் என்பதற்கு ஒரு குட்டி சோகக் கதை என்று பயணிக்கிறது கதை.
ட்ரே பார்க்கராக ஜேடன் ஸ்மித். வில் ஸ்மித்தின் மகன். அப்பன் பத்தடி என்றால் பையன் இருபதடி. படம் முழுக்க பட்டையைக் கிளப்புகிறான் ஜேடன். வசன உச்சரிப்பும், வேகமும், பம்மலும், லவ்வும்... சூப்பர்ப்! டிட்டோ குட்டி ஸ்மித். முகபாவனைகளில் அப்படியே ஸ்மித் தெரிகிறார். மகனுக்கு நல்லதொறு ஓப்பெனிங்கைத் தர வேண்டும் என்று சரியான முயற்சி எடுத்திறுக்கிறார் வில் ஸ்மித் (நம்மாளு "நான் அடிச்சா தாங்க மாட்ட" என்று தான் செய்யும் நுந்கொலையை, அதே காஸ்டியூம், ஸ்டைலில் (த்தூ... ஸ்பெஷல் துப்பு) பையனையும் திரையில் செய்யவிட்டு வேடிக்கை பார்ப்பார்).
ஜாக்கி - முதலில் தனக்கும் முக்கியத்துவம் அதிகம் இல்லாத ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு தலைவருக்கு ஆயிரம் பாராட்டுக்கள். வயதான, அமைதியான அழுக்கு ஆசாமியாக வலம் வந்து திடீரென்று சண்டையிட்டு, பின் குருவாகி, பின் தந்தையாவதில் கலக்கியிருக்கிறார். ஓவர்கோட்டை வைத்தே முதல் பாடத்தை சொல்லித் தருவது அற்புதமான ஆரம்பம். அதுவும் தன் கதையை சொல்லிவிட்டு அழும் இடத்தில் அப்படியே கமல் தான்!
ட்ரேவின் அம்மாவாக (மிஸஸ் பார்க்கராக) வரும் தராஜி P.ஹென்சன். பெஞ்சமின் பட்டனில் கலக்கி, ஆஸ்கர் நாமினேஸன் பெற்றவர். புரியாத ஊரில் தன்னை புரிந்து கொள்ளாத பையனை வைத்துக் கொண்டு வேறு வழியில்லாமல், அவர் படும் பாடு சொல்லித் தெரியாது. தன் மகனுக்கு எப்படியாவது இந்த ஊரைப் பிடிக்க வைத்து விட வேண்டும் என்று அவர் இந்த ஊர் ஐஸ்கிரீம் சூப்பர் என்று சொல்வது அந்தத் தாயின் உச்சகட்ட பாசத்தைக் காட்டும் இடம். முதலிலிருந்தே ஓவர்கோட்டை கண்ட இடத்தில் வீசி எறியும் மகனை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக கண்டிக்கும் பாவனைகள் அற்புதம்.
பிறகு, மெய் யிங் காக வரும் அந்தக் குட்டிப் பெண். நல்ல தேர்வு. ஜேடனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் கிஸ்செல்லாம் உண்டு!
அதே போல் சென்ங்காக வரும் சிறுவன். மூஞ்சியில் வில்லத்தனம் தாண்டவமாடுகிறது. நல்ல தேர்வு. வருங்காலத்தில் பல சீன சண்டைப்படங்களில் இவனைப் பார்க்கப் போவது உறுதி.
1984 ல் வெளியான தி கராத்தே கிட் படத்தை இந்தக் காலத்திற்கு ஏற்றார்போல் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு படங்களிலுமே சும்மா பேருக்குத்தான் கராத்தே, காட்டப்படுவது சுத்தமான குங்ஃபு. அந்தக் கடைசி போட்டியை இன்னும் கொஞ்ச நேரம், அதிக சுற்றுகளுடன், மேலும் பல வகையான காட்சியமைப்புகளில் எடுத்திருக்கலாம் என்று தோன்றினாலும், அதற்கு முன்னர் பயிற்சி சீங்களில் வரும் சீனப் பெருஞ்சுவர், மலை உச்சிக் காட்சிகள் அபாரமான காட்சியமைப்புகள். சூப்பர், எக்ஸலண்ட், பெண்டாஸ்டிக், பலே!