நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2012ல் உலகம் அழியப் போகிறது என்று சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் மினிமம் கியாரண்டி உண்டு என்று தெரிகிறது.
இந்தியாவிற்கு தலைக்கு மேல் காஷ்மீர் பல நாள் பிரச்சனை, இந்தப் பக்கம் பாகிஸ்தான் பிரச்சனை, அந்தப் பக்கம் சீனா பிரச்சனை. சீனா அருணாச்சல பிரதேசத்தை மொத்தமாக தன்னுடன் இணைத்து 'மேப்' ரிலீஸ் செய்து கொண்டே இருக்கிறது, நம்மாட்களும் அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவிற்கு இப்படியென்றால் தமிழகத்திற்கு? மேலே கர்நாடகாவுடன் காவிரிப் பிரச்சனை, பக்கவாட்டில் இப்போது கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சனை. கர்நாடகா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு காட்டிய அதே நடுவிரலைத்தான் இப்போது கேரளாவும் காட்டுகிறது. கீழே இருக்கும் சிலோனைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. அநேகமாக இந்நேரத்திற்கெல்லாம் மிச்ச் சொச்ச தமிழினமும் அழிக்கப்பட்டிருக்கும்.
350 மீனர்வர்களுக்கு மேல் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள் இதுவரை; தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் அணையை இடிப்பது எங்கள் உரிமை என்கிறது கேரள அரசு. ஆனால் "தமிழ் நாட்ல இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல; 'ஒய் திஸ் கொலவெறி'னு ஒரு பாட்டு வந்திருக்கே அது தான் மெயின் மேட்டர். அத பாடுன தம்பிய வரச் சொல்லு, சோத்த போட்டு அனுப்புவோம்" என்று மன்மோகன் சிங் அழைப்பு விடுக்கிறார்.
அன்னா ஹசாரே என்று ஒரு பெரியவர். கலியுக காந்தியாக சும்மா சும்மா கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார் "உண்ணாவிரதம்" என்று. எதிர்த்துப் போராடுவது ஆங்கிலேயர்கள் என்றால் பரவாயில்லை, அவர்களுக்கடுத்து படையெடுத்து வந்த தொப்பி போட்ட அரசியல்வாதிகள் அல்லவா? ஒன்னும் செய்ய முடியவில்லை. "தாத்தா, நா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ - நீ இந்தியன் தாத்தா மாதிரி கத்திய தூக்கிருந்தா கூட எதுனா ஒன்னு ரெண்டு மாத்தல் வந்திருக்கலாம். ஆனா, நீ இப்போ எடுத்திருக்குற ரூட் காந்தி தாத்தாவோடது. அது இங்கே வேலைக்கே ஆகாது. நீ மவுத்தானாலும் மதிக்கமாட்டானுவ. டெண்டுல்கர் ஏன் இன்னும் நூறாவது நூறு அடிக்கலனு பேச்ச மாத்திருவானுவ. உன் பேட்ச் மேட் லத்திக்கா பெருசு ஒன்னு இங்க இருக்கு, அது வேணா டுவீட் பண்ணும் - "சேகர் செத்துட்டாண்டானு". இந்த அவமானம் நமக்குத் தேவையா? "ஊழல், லஞ்சம், கடன்" இவை மூன்றும் இல்லாத இந்தியா நன்றாக இருக்காது!
"மின்சாரம் இல்லை, மின்சாரம் இல்லை" என்று கத்திக்கொண்டே இருக்கிறார்களே என்று 1988ல் கையெழுத்தைப் போட்டு, 1997ல் அடிக்கல் நாட்டி, 2001ல் ஆரம்பித்து, 2004ல் ஒரு பகுதியை ஆரம்பித்து என் அனைத்தும் சுபம். ஆனால் திடீரென்று என்ன ஆனதோ தெரியவில்லை, கடைசியாக கடையைத் திறக்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்து விட்டார்கள் "போராட்டம்" என்று. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் கேடும் இல்லை என்று அப்துல் கலாம் வந்து சத்தியம் செய்தும், ஹும்ம் யாரும் கேட்கவில்லை, கடையையும் இன்னும் திறக்கவில்லை. "வேண்டுமென்றால் அப்துல் கலாம் வீட்டிற்கு பக்கத்தில் அணுமின் நிலையத்தைக் கட்டிக் கொள்ள வேண்டியது தானே" என்று டீக்கடையில் ஒரு மகான் பேசிக்கொண்டிருந்தாக என் நண்பன் சொன்னான் - "அது!" (அஜித் ஸ்டைலில் வாசித்தால் இந்த இடத்தில் நன்றாக இருக்கும்!) சென்ற ஆட்சியில் 3 மணிநேரம் இந்த ஆட்சியில் 6 மணிநேரம். இப்பொது அநேகமாக எல்லா வீடுகளிலும் 'இன்வர்டர்' வந்து விட்டது. பரவாயில்லை என்று மக்கள் நினைக்கிறார்களோ என்னவோ.
1,70,00000... எத்தனை சைபர்கள் என்று மறந்துவிட்டது. அவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது என்றார்கள். ஜோடியாக தமிழகத்திலிருந்து இரண்டு பேரை திகாருக்கு விருந்திற்கு அனுப்புவது போல் அனுப்பினார்கள். போனவர்களை 'இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்ல' என்று கேட்பது போல் 6 மாதத்தை ஓட்டினார்கள். அந்த கேப்பில் ஒரு பெண்ணென்று கருணை காட்டுங்கள், ஒரு தாயென்று நினையுங்கள், ஒரு வயதானவரின் மகள் என்று யோசியுங்கள் என்று ஆளாளுக்கு எழுதித் தள்ளினார்கள். மேலிடமும் ஒரு வழியாக 'கனி'வாகி திருப்பி அனுப்பி 'எந்தப் பிரச்சனையும் பண்ணாமல் ஒழுங்காக இருந்தார். நாங்கள் பார்த்ததிலேயே நல்ல கைதி' என்ற ஜெயில் வார்டன் சர்டிபிகேட்டையும் கொடுத்தார்கள். வந்து வருவதற்குள் என்னா அலப்பறை? தியாகச் செம்மல், தங்கக் கம்மல் என்றெல்லாம் பட்டத்தை அள்ளி வீசி, 'தமிழகத்தின் குடுமியைப் பிடித்து ஆட்டும் அனைத்து தகுதிகளும் இந்தம்மாவிற்கு உண்டு, அதனால் கட்சியில் முக்கிய பதவி' என்று பேட்டி கொடுக்கிறார்கள். சத்யராஜ் ஒரு போராட்டத்தின் போது சொன்ன முட்டாக்கூ தமிழன் அதை கேட்டுக் கொண்டு இருக்கிறான். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இவையெல்லாம் ஊர்க்கதை. சொந்தக்கதை சூப்பரு. செய்ற வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி சொல்லியே ஒரு வருடத்தை ஓட்டிவிட்டேன் நான். பிடித்த வேலை எது என்று தெரிந்தால்தானே கை நிறைய காசு கொடுக்கும் இந்தப் பிடிக்காத வேலையை "சீ...போ" என்று தூரப்போட முடியும்? அந்தத் துப்பு தான் எனக்கில்லையே! என் அப்பாவோ "IAS, IPS ல் ஆரம்பித்து இப்போது வக்கீலாப் போடா ஆளலாம்" என்று இன்றைய தேதிக்கு அம்பதறுவது ஆப்ஸன்ஸ் கொடுத்து விட்டார். எனக்குத்தான் எதும் செட்டாகல!
"ஆம்பிளைக்கு கெத்து தான்டா மாமா சொத்து" வகையறாவான எங்களெல்லாம் சும்மகாச்சூக்கு ஒரு பிகர் பாத்து சிரிச்சாலே உஸ்பெக்கிஸ்தான்ல ட்ரீம் சாங் கேப்போம், கொஞ்சம் அழுத்தமாகவே ஒரு பிகர் சிரிச்சா? முடின்ச்... பினீஸ்ஸ். "ரவிவர்மன் ஓவியம் என்று சொல்கிறார்களே, அதன் நயமென்ன உன் கூந்தலை விட அழகானதா? அடடே...!" என்று நாளொரு கவிதை, பொழுதொரு ட்ரீம் லொக்கேஷன் என்று பாதி வருடம் ஓடிவிட்டது. "இவ நம்மளுக்கு செட் ஆகமாட்டா மச்சி" என்று என் ஆழ்மனம் இப்போது சொல்கிறது (அப்படியா?). இத்தனை நாள் கொய்யால எங்கிருந்தது என்று தெரியவில்லை. வீட்ல சீக்கிரம் ஒரு பொண்ண பாக்கச் சொல்லனும். ரொம்ப வீக்கா இருக்கேன்! அதுலயும் ஒரு சிக்கல். 'வோட்கா' குடித்தால் தொண்டை அரிக்கிறது" என்று என்னுடன் வேலை செய்யும் பெண்ணொருத்தி சொன்னதாக நண்பன் ஒருவன் சொன்னான். "ஸ்மோகிங் ஜோன்" என்று ஒரு இடத்தை ஒதுக்கியிருப்பதே பெண்கள் ஆர அமர உட்கார்ந்து தம்மடிக்கத்தான் போலிருக்கிறது. என்னாக்கூட்டம்! கலி முத்திவிட்டது என்று சொல்வதா? இல்லை பாரதி கேட்ட புதுமைப் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே உலா வருகிறார்கள் என்று சொல்வதா? தெரியவில்லை. "நல்ல பொண்ணெல்லாம் நமக்கு கிடைக்காது மச்சி, 'நீ எப்படி இருந்தனு நான் கேக்கமாட்டேன், நான் எப்படி இருந்தேன்னு நீ கேக்கக்கூடாது, ஓக்கேவா?'னு வாழ்க்கைய ஓட்டிரனும் மச்சி" என்கிறான் இன்னொரு நண்பன் (குட் கேர்ள்ஸ், உங்கெளுக்கெல்லாம் ஒரு கொஸ்டீன்; மெய்யாலுமே இவன் என் நண்பன் தானா?)
ஆக மொத்தமாக ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிகிறது. நடப்பது நடக்கட்டும்... வேடிக்கை பார்ப்பதற்கு என்ன வரப் போகிறது?
இவ்வளவு நேரம் மொக்கை போட்டது இதோ இந்த மேட்டரைச் சொல்வதற்குத்தான். "சென்ற வருடத்தைப் போல இல்லாமல் இந்த வருடம் கொஞ்சம் "சுமூத்தாக" போகும் என்ற நம்பிக்கையில் இதோ வந்துவிட்டேன் - I am Back!!!"
P.S - அடுத்து மூன்று வெவ்வேறு விதமான காதல் கதைகளைக் கொண்ட படங்களின் விமர்சனம் (நான் திருந்த மாட்டேன்!)