முதலில் 'வானம்'.
தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம். ஐந்து கதைகள் ஒரு கிளைமாக்ஸ். சிம்புவின் பணக்காரக் காதலுக்கு பணம் தேவைப்படுகிறது, பரத்திற்கு ராக் ஸ்டாராகி சாதிக்க ஒரு மேடை தேவைப்படுகிறது, சரண்யாவிற்கு கந்துவட்டிக்காரனனிடமிருந்து தனது மகனைக் மீட்டு படிக்க வைக்க பணம் தேவைப்படுகிறது, அனுஷ்காவிற்கு தன் ஓனர் ராணியம்மாவிடமிருந்து வெளிவந்து தனியாக தொழில் ஆரம்பிக்க ஒரு வழி தேவைப்படுகிறது, மதத்தின் பெயரால் தீவிரவாதியென அடையாளம் காட்டப்படும் பிரகாஷ்ராஜிற்கு தொலைந்து போன தன் தம்பி தேவைப்படுகிறான். அற்புதமான திரைக்கதையினால் இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வந்து சேர, ஜெயப்பிரகாஷ் தோன்றும் ஆழமான, நெஞ்சை உருக்கும் கிளைமாக்ஸ். தெலுங்கு ஹிட்டை அந்த தெலுங்கு டைரக்டரே தமிழிலும் கொடுத்திருப்பது ஆறுதல். வெல் டன் கிருஷ். இரண்டாவது சந்தானம். வடிவேலு சேப்டருக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டேயிருக்கிறது என்பதை ஆ..கஜகஜா என்று சொல்கிறார். 'சிம்புவின் நடிப்பு' என்று யாராவது கேட்டால் இந்தப் படத்தைக் காட்டலாம். இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கோவில், மன்மதன், வி.தா.வியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. சரண்யா அவரது மாமனார் கிழவர் - ஏழ்மையின் கோர முகங்கள். இளம்பிறையின் மூலம் சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது என்று நியாபகப்படுத்துகிறது இவர்களது கதை. பிரகாஷ்ராஜ் - கொஞ்சம் ஓவர் நடிப்பு என்றாலும் நன்று. பரத் - ஜிம் பாடி ராக் ஸ்டாருக்கு பொருத்தமான தேர்வு, நடிப்பு. அனுஷ்கா - எனக்கு இந்தக் கேரக்டர் ஐந்தாவதாக ஏதாவது வேண்டுமே என்று திணிக்கப்பட்டதாகவே தோன்றியது. வேட்டைகாரன், சிங்கம் படங்களில் நான் ரசித்த அனுஷ்காவை வானத்தில் ரசிக்க முடியவில்லை.
சென்ற வாரம் கோ, இந்த வாரம் வானம். தமிழ் சினிமாவின் பயணம் ஆரோக்கியமாகவும் திருப்திகரவுமாகவும் இருக்கிறது :-)
அடுத்தது இன்றைய ஸ்பெஷல்... தமிழ் சினிமா உட்பட உலக சினிமா சந்தையில் கொரிய படங்களின் ஆதிக்கம் அளவுகடந்து போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மற்றுமொரு அற்புதமான கொரிய சினிமா. சமீபத்தில் நான் பார்த்து வரும் தென்கொரிய காதல், சைக்கோ த்ரில்லர்கள், கேங்ஸ்டர் கதைகளிலிருந்து மாறுபட்ட அதே சமயம் நான் மிகவும் விரும்பும் ஒரு கதைகளன். எக்காரணத்தைக் கொண்டும் வருங்காலத்தில் வரப்போகும் (ஏனென்றால் இந்தப் படம் சென்ற வருட இறுதியில் தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது) ஏதாவது ஒரு தமிழ் படத்தைப் பார்த்துவிட்டு “இந்தப் படத்தப் பார்த்து தான் எடுத்திருக்காங்க” என்றும் “காப்பி கூட அடிக்கல, அப்படியே டப்பிங் பண்ணியிருக்காங்க” என்றும் நம் பதிவர்களால் கதற முடியாதபடி கொரிய வரலாற்றுக் கதையை படமாக்கியிருக்கிறார்கள். 1950களில் தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் போர் வெடித்த சமயத்தில் வேகமாக முன்னேறி வரும் பெரும் வடகொரிய படையை எதிர்த்து ஒரு சிறிய தென்கொரிய மாணவர் படை போராடிய ஒரு உண்மைச் சம்பவம் தான் 71 - Into The Fire.
போர் பயிற்சி இல்லாத 71 படிக்கும் மாணவர்கள், 2500 போர் வீரர்களைக் கொண்ட எதிரிப்படையிடம் தங்கள் நாடு சிக்காமல் இருக்க, உதவி வரும் வரை எதிரிகளைச் சமாளித்து போரிட்டு 11 மணி நேரம் அவர்களை முன்னேற விடாமல் தடுத்த ஒரு வீர சாகச வரலாற்றை தங்களுக்கே உரிய 'ரத்தமும் சதையும்' ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள் தென்கொரியர்கள். டைரக்டர் - John H Lee.
மாணவர்களுக்குள் இருக்கும் சந்தோஷம், துக்கம், நட்பு, கொண்டாட்டம், நாட்டின் மீதுள்ள பற்று, நீ பெரியவனா நான் பெரியவனா தகராறு, முதல் முறையாக துப்பாக்கியைக் கையாளுதல் என்று முதலில் சாதாரணமாக ஆரம்பிப்பதைப் போலத் தெரிந்தாலும் எதிரிகளை இவர்கள் பார்க்கும் இடத்திலிருந்து படத்தின் வேகம் பண்மடங்காகிறது. முதற்கட்ட போரில் போர் வீரர்களுடன் கூட்டாக சண்டையிட்டு தப்பித்த மூன்று மாணவர்களில் 'போர்த்தளபதி' இறக்கும் போது அருகிலேயே இருந்த Oh Jung-Bum என்னும் மாணவனின் வழியாக முழு கதையும் சொல்லப்படுகிறது. தெறிக்கும் மனித உடல்கள், வெடிகுண்டு சத்தம், கண்முனே கொல்லப்படும் உயிர்கள், போகும் உயிரை கட்டியிழுக்கப் போராடும் மருத்துவர்கள் என்று போர்க் கோரத்தைக் கண்டு மிரண்டு போயிருக்கும் அவனை அடுத்து வந்திரங்கும் புதிய மாணவர் படைக்கு தளபதியாக நியமிக்கிறார் மூத்த தளபதி. எதிரிகள் வேகமாக முன்னேறி வரும் சமயம் மற்ற போர் வீரர்கள் அனைவரும் 'Nakdong River' என்னும் இடத்தைக் காபாற்றச் செல்ல, 'Pohang' என்னும் இடத்திலிருக்கும் பெண்கள் பள்ளியில் மாணவர் படை எதிரிகளை சமாளிக்க தயாராகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி, 250 புல்லட்கள் கொடுக்கப்படுகிறது.
71 மாணவர்களில் மூவர் சிறார் சிறைச்சாலையிலிருந்து வந்திருக்கும் குற்றவாளிகள். அவர்களின் தலைவனுக்கும் மாணவர் படைத்தலைவனுக்கும் ஆரம்பத்திலிருந்தே இருக்கும் நீயா நான பிரச்சனை, தவிர துப்பாக்கியைச் சரியாக கையாளத் தெரியாமல் முதல் சண்டையிலேயே இவர்கள் பக்கம் ஏற்படும் அதிகளவு இழப்பு, இறப்பு, ஐந்து நிமிடத்திற்கு முன் பேசிக்கொண்டிருந்தவன் கண் முன்னே குண்டடிபட்டு இறப்பதைக் கண்டு பயந்து நடுங்கும் மற்ற மாணவர்கள், எப்படி பொறுப்பை நிறைவேற்றுவது, மற்றவர்களைக் காப்பாற்றுவது என்னும் கலக்கத்திலிருக்கும் தலைவன், போரில் வீணாக மாணவர்கள் சாகக்கூடாது என்று மேலிடத்தில் போராடும் தளபதி என்று ஒரு போரினால் ஏற்படும் இழப்புகள் அனைத்தையும் இந்த மாணவர்களின் வழியே நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.
பள்ளிக்கட்டத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் போர்க்காட்சி தான் உச்சகட்ட ஹைலைட். தெறிக்கும் தோட்டாகளுக்கு மத்தியில் மிச்சமிருக்கும் ஒவ்வொரு மாணவனும் நாட்டிற்கான தனது பங்கை நிறைவேற்றும் இடங்கள் ஒவ்வொன்றும் அபாரம். இந்தியன் 'சுதந்திர போராட்ட எப்பிசோடில்' வருவதைப் போல மாணவர்கள் வெடிகுண்டைக்கட்டிக் கொண்டு டேங்கர்களுக்குள் குதிப்பது, ஒருவருனுக்காக மற்றொருவன் உயிரை விடுவது, சாகும் நிலையிலும் எதிரிகளைக் கூண்டோடு கொளுத்திக்கொல்வது என்று வீரமரணமடைகிறார்கள். உண்மையான வீரம் என்றால் என்ன என்பதை இந்தப் படம் காட்டுகிறது. வெறும் 11 மணிநேரமே எதிரிகளை முன்னேற விடாமல் தடுத்திருந்தாலும், அந்தப் போரில் இந்த மாணவர்களின் பங்கு அதீதமானது என்று வரலாறு சொல்கிறது. போரில் கலந்து கொண்ட ஒரு மாணவன் தன் தாய்க்கு எழுதிய கடிதங்களின் அடிப்படையில் திரைக்கதை உருவாக்கப்பட்ட ஒரு உண்மைச் சாகசம் இது.
YouTube இல் எதையோ தேடப்போய் இந்தப் படம் கிடைத்தது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - ஆங்கில சப்-டைட்டிலுடன் முழு படத்தின் லிங்க் இதோ. டிரைலர் இதோ...